All rights reserved to Krishnamacharya Yoga Mandiram. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of Krishnamacharya Yoga Mandiram, except in the case of brief quotations embodied in critical reviews and other non-commercial uses permitted by copyright law and with due credit to Krishnamacharya Yoga Mandiram. For permission requests, write to ceo@kym.org
1 அத எனும் சொல்லுக்கு துவக்கம், மங்கலம் போன்ற அர்த்தங்களும் உள்ளன.
2 யோகாநுஶாஸனம் - யோகாநுஶாஸனம் - யோகம் எனும் சொல் வ்யாஸ-பாஷ்யத்தின் அடுத்த வாக்கியத்தால் விளக்கப்படுகிறது. அநுஶாஸனம் - ஶாஸனம் என்றால் வகுத்து அளித்தல். ஹிரண்ய-கர்ப்பர் (பிரம்மதேவர்) யோகத்தின் முதல் ஆசிரியராகக் கருதப்படுகிறார்.. அவருடைய கருத்துகளைப் பின்பற்றி யோகஸூத்ரங்கள் இயற்றப்பட்டுள்ளதால் அநுஶாஸனம் எனப்படுகிறது. - தத்வவைஶாரதி
3 ஸமாதி எனும் சொல்லுக்கு உள்ளம் ஒருநிலைப்படுதல் என்பது பொதுவான பொருளாகும். இதன் தௌிவான விளக்கம் யோக-ஸூத்ரங்களின் மூன்றாவது அத்தியாத்தின் மூன்றாவது ஸூத்ரத்தில் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது- தியானிக்கப்படும் பொருளைப் பற்றியே இடைவிடாத எண்ணப் பிரவாகம் ஏற்படும் போது மனது, எண்ணும் பொருளின் வடிவை அடைந்து தனது சுயவடிவை இழந்தது போல் ஆகிவிடுதல் தான் ஸமாதி.
4 சித்த-பூமி - மனதின் நிலைகள், ஸம்ஸ்காரங்களினால் (முன்பு ஏற்பட்ட பதிவுகளினால்) எந்தெந்த நிலைகளில் மனம் இருக்கிறதோ அது சித்த-பூமி எனப்படுகிறது. - பாஸ்வதி
5 பின்னால் கூறவிருக்கின்ற - ‘க்ஷிப்தம் முதலிய நிலைகளிலும் கூட மனது ஓரளவாவது ஒருநிலைப்படும்’. - யோக-வார்த்திகம். ஆனால் ஏகாக்ர-நிலையில் தான் முழுமையான ஒருநிலைப்பாடு ஏற்படும்
1 ஸம்ப்ரஜ்ஞாத யோக நிலையில் உள்ளம் ஒரு குறிப்பிட்ட பொருளில் லயித்து இருப்பதால் அது தொடர்பான செயல்பாடுகள் இருந்து கொண்டு தான் இருக்கும். அந்த நிலையில் சித்த-வ்ருத்திகள் இருக்கின்றன, அதனால் அது யோகமாகாது என்று கூற இயலாது என்பதனைத் தௌிவுபடுத்துகிறது இவ்வாக்கியம். சித்த-வ்ருத்திகள் சில இருந்தாலும், தியானிக்கப்படும் பொருளில் மனம் லயித்திருந்தால் அது யோகமாகும். அனைத்து சித்த-வ்ருத்திகளும் ஒடுங்கிய நிலை தான் யோகம் என்பதில்லை என்பது இங்கே தௌிவு படுத்தப்படுகிறது.
2 ஸத்வம் , ரஜஸ், தமஸ் என்ற குணங்கள் தான் இங்கு குறிப்பிடப்படுகின்றன. ஒளி - அறிவுத் தௌிவு, மகிழ்வு போன்றவைகளைக் குறிக்கிறது. செயல்படுதல் - ஆசை, கோபம் போன்று உள்ளத்தில் பொங்கும் உணர்வுகள் இதனால் குறிப்பிடப்படுகின்றன. செயலற்று இருத்தல் - மந்தமாகவும், சிந்திக்கும் திறனற்று ஜடமாகவும் உள்ளம் இருத்தலை இது குறிக்கிறது.
3 சித்தம் முக்குணங்களால் ஆனது. அப்படிப்பட்ட சித்தத்தில் ஸத்வ-குணத்தைவிட குறைவாக ரஜஸ் தமஸ் குணங்கள் இருக்கும் நிலை இங்கு குறிப்பிடப்படுகிறது. ஸத்வ-குணத்தை விட குறைவாக இருந்தாலும் ரஜஸ் மற்றும் தமோ குணங்கள் சரிசமமான அளவில் இருக்கும் நிலை இது. -தத்வ-வைஶாரதி
4 ஐஶ்வர்யம் எனும் சொல்லுக்கு - உலகியல் அதிகாரம், அணிமா முதலிய சித்திகள் என்ற அர்த்தங்கள் வ்யாச-பாஷ்யத்தை ஒட்டி எழுதப்பட்ட பாஸ்வதி, தத்வ-வைஶாரதி போன்ற யோக-ஸூத்ர உரைகளில் வழங்கப்பட்டுள்ளன.
5 ஸத்வ-குணம் மட்டுமே சித்தத்தில் மேலோங்கி வலுப்பெற்றிருக்கும் நிலையில் தான் விவேக-க்யாதி ஏற்படும்.- பாஸ்வதி
6 சித்தம் இந்த நிலையினை அடைந்த பிறகு, அடுத்த நிலை (இது தான் கடைசி நிலை) புருஷன் தனது இயல்பில் நிலைபெறுவது. ஆகையால் அடுத்தபடியாக புருஷனுடைய இயல்பு வர்ணிக்கப்படுகிறது.
7 சைதன்யம்/ consciousness . யோக ஸூத்ரங்களில் படைப்பு, புருஷன், ப்ரக்ருதி என இருவகைப் படுத்தப்படுகிறது. அறிபவர் (த்ரஷ்டா) புருஷன், அறியப்படுவது (த்ருஶ்யம்) ப்ரக்ருதி ஆகும். த்ருஶ்யத்தின் தாக்கத்தினால் த்ரஷ்டா தனது சுய இயல்பினை அறிய முடியாமல் போய்விடுகிறது. அதற்கு முக்கிய காரணம் த்ருஶ்யப் பிரிவினைச் சார்ந்த சித்தத்தின் செயல்பாடுகள் ஆகும். அதுதான் த்ருஶ்ய உலகின் கருத்துக்களை அறிபவராகிய புருஷனில் ப்ரதிபலிக்கச் செய்கிறது. ஆகையால் சித்தத்தின் செயல்பாடுகள் ஒடுங்கினால் அறிபவராகிய புருஷனுடைய உண்மை இயல்பு வௌிப்படும். இது தான் யோக-ஶாஸ்த்ரம் கூறும் அடிப்படைக் கருத்தாகும்.
8 விவேக-க்யாதி எனும் வ்ருத்தி மற்ற வ்ருத்திகளை விட உயர்ந்தது என்றாலும், அதுவும் சித்தத்தில் உண்டாகிறபடியால் சித்தத்தினுடைய குணங்கள் கொண்டதாகவே இருக்கும். ஆகையால் அதுவும் ஒடுக்கப்பட வேண்டியதுதான்.
9 துன்பமயமான பிறப்பினை அளிக்கவல்ல, சித்தத்தில் படிந்திருக்கும் வினைப்பயன்களின் பதிவுகள் தான் விதை.
1 இதற்கு முந்தைய பக்கத்தின் முதல் அடிக்குறிப்பினைப் பார்க்கவும்
2 யோகத்தின் கடைசி நிலை
1 உள்ளம் வ்யுத்தானம், நிரோதம் எனும் இருவிதமான செயல்பாடுகள் கொண்டது என யோக-ஸூத்ரங்கள் தெரிவிக்கின்றன (3.9) . வ்யுத்தானம் - வௌியுலகிற்கு ஆட்பட்டு செயல்படும் உளத்தன்மையை குறிக்கிறது . நிரோதம் - உள்ளம் உள்நோக்கி திருப்பப்பட்டு அதன் செயல்கள் ஒடுக்கப்படும் தன்மையை நோக்கிச் செல்வதைக் குறிக்கிறது
2 புருஷன் ஞானமே வடிவானவன். ஞானம் அவனுக்கு ஏற்படுவது இல்லை. மாறாக அவனுடைய இயல்பு ஞானமாகும். புத்திக்கு ஞானம் ஏற்படுகிறது. அந்த ஞானத்தை ஏற்படுத்தும் உளச்செயல்கள் ஜடத்தன்மையுடைய ப்ரக்ருதியிலிருந்து தோன்றுவதால் அதுவும் ஜடமானதுதான். ஆகையால் இவ்விரண்டும் எவ்வாறு ஒன்றாக முடியும் என்று கேட்டால் - இங்கு கூறப்பட்ட ஞானம் வ்ருத்திகளால் ஏற்படுவதாகும். புலன்கள் வௌியுலகப் பொருட்களைக் கிரகித்து சித்தத்திற்கு அனுப்புகின்றன. சித்தம் செயல்பட்டு அந்த பொருளின் வடிவத்தினை அடைகிறது. அதன் பிரதிபிம்பம் சித்தத்திற்கு ஆதாரமாக உள்ள புருஷனில் ஏற்படுகிறது. ஒரே பொருளின் வடிவமும்- பிரதிபிம்பமும் முறையே உள்ளம், புருஷன் இவைகளில் ஏற்படுவதால்தான், (புற உலகப் பொருட்களின்) ஞானம் ஒன்று தான் என மேலே கூறப்பட்டது. இந்த பஞ்சஶிகாசார்யர் கருத்து புருஷன் யோகமற்ற பிற நிலையில் உளச்செயல்களுக்கு ஒத்த வடிவினை அடைகிறான் எனும் யோக-ஸூத்ர கருத்துடன் ஒத்திருப்பதால் வ்யாஸபாஷ்யத்தில் மேற்கோளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 புருஷன் சித்தத்திற்கு யஜமானன் ஆகிவிட்டபடியால், சித்தம் புருஷனின் உடமை ஆகிவிட்டபடியால்
4 இரும்பிற்கு காந்தத்தால் ஈர்க்கப்படுதல் எனும் இயல்பு இருக்கிறபடியால், காந்தத்திற்கும் இரும்பினை ஈர்த்தல் எனும் இயல்பு இருக்கிறபடியால் இரண்டிற்கு இடையேயும் ஈர்ப்பு ஏற்படுகிறது. இந்தத் தொடர்பு இரும்பும் காந்தமும் இருக்கும் காலத்திலிருந்து இருக்கிறது. அதே போல சித்தம் ‘அறியப்படுதல்’ எனும் அடிப்படை இயல்பு கொண்டது, புருஷனும் ‘அறிபவன்’ எனும் அடிப்படை இயல்பு கொண்டவன் ஆகையால் இவ்விரண்டிற்குமிடையே தொடர்பு இயல்பானது. புருஷனும் சித்தமும் இருக்கும் காலத்திலிருந்து இருக்கிறது. புருஷன் துவக்கமற்றவன், ப்ரக்ருதியும் துவக்கமற்றது என்பதனால் இந்தத் தொடர்பு துவக்கமற்றதுதான்.
1 அஞ்ஞானம் (அவித்யா), அறிபவரும் (புருஷனும்), அறியப்படுவதும் (ப்ரக்ருதி) வெவ் வேறாயினும் அவை இரண்டும் ஒன்றே எனத் தவறாக புரிந்து கொள்ளுதல் (அஸ்மிதா) , பற்று (ராகம்) , வெறுப்பு (த்வேஷம்) , இயற்கையாகவே அனைவருக்கும் இருக்கும் உயிர்மேல் ஆசை (அபினிவேஶம்) இவை ஐந்தும் க்லேஶங்கள் என இரண்டாம் பாதம் மூன்றாம் ஸூத்ரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2 மனிதன் பொருட்களை (சித்த வ்ருத்திகளால்) அறிகிறான். அதன் பின்னர் தான் அதன் மீது பற்றோ அல்லது வெறுப்போ அடைகிறான். அதன் அடிப்படையில் செயல்படுகிறான். புண்ணியத்தையோ, பாவத்தையோ சேர்க்கிறான். இந்தப் புண்ணிய பாவங்களின் (மனக்)கிடங்கு தான் கர்மாஶயம் எனப்படுகிறது. இந்த கர்மாஶயங்கள் தான் அவனுடைய எதிர்கால வாழ்க்கையின் இன்பத்தையோ, துன்பத்தையோ நிர்ணயிக்கிறது.
3 ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்கள் மனிதனைச் செயல்களில் ஈடுபடுத்தும். அதனால் மனப்பதிவுகள் ஏற்படும். இதன் காரணமாக துன்பம் வந்து சேரும். புருஷன் வேறு ப்ரக்ருதி வேறு எனும் தௌிவு உண்டான பின் குணங்களின் செயல்பாடுகள் இல்லாமல் போய்விடும்.
4 இந்த வ்ருத்திகள் வேதங்களின், நல்லாசிரியரின், வழிகாட்டுதலினால் செய்யப்படும் பயிற்சிகளாலும், பற்றின்மையை வளர்த்துக் கொள்வதாலும் ஏற்படுகின்றன.
5 க்லிஷ்ட- வ்ருத்திகள் இடையே தோன்றும் அக்லிஷ்ட- வ்ருத்திகள் தங்களது தன்மையை மாற்றிக்கொள்ளாமல் இருக்கும். யோகப் பயிற்சி தீவிரமடையும் போது க்லிஷ்ட- வ்ருத்திகளுக்கு இடையே) ஏற்படும் அக்லிஷ்ட பதிவுகள் படிப்படியாக வலுப்பெற்று க்லிஷ்டவ்ருத்திகளே ஏற்படாமல் தடுத்துவிடும். அதே போல யோகப்பயிற்சியினால் அக்லிஷ்டவ்ருத்திகள் தொடர்ந்து இருந்தாலும் மனது அலைபாயும்போது அவைகளிடையே க்லிஷ்டவ்ருத்திகள் ஏற்படும். இந்நிலை தொடரும்போது படிப்படியாக அக்லிஷ்ட- வ்ருத்திகள் மறைந்து போய் க்லிஷ்ட- வ்ருத்திகளால் மனது சூழப்பட்டு துன்பத்தில் உழலும்.
1 ஒரு பொருளின் வடிவம், நிறம் போன்றவை அதன் தனிச்சிறப்பான குணாதிசயங்களாகும். ஒரு பொருள் எந்த வகையைச் சேர்ந்தது என்பன போன்றவற்றைக் குறிப்பவை அதன் பொதுவான குணாதிசயங்களாகும். உதாரணம் - ஒரு பசு. அதன் நிறம், வடிவம் ஆகியவை அதன் தனிச்சிறப்பான குணாதிசயங்களாகும். பசு எனும் வகையைச் சேர்ந்த பிராணி இது என்பதனைக் குறிக்கும் கொம்பு, திமில், அதன் கழுத்துக்குக் கீழே தொங்கும் சதை மடிப்பு ஆகியவை பொதுவான குணாதிசயங்களாகும்.
2 ஒரு பானை கண்களால் காணப்படுமாயின், அது சித்தத்தில் அறிவாக உருப்பெற்று, புருஷனில் பிரதிபலிக்கும் போது ' நான் இந்த பானையை அறிகிறேன்’ என புருஷனில் ஏற்படும் உணர்தல் தான் ப்ரத்யக்ஷத்தின் ப்ரயோஜனமாகும்.
3 இங்கு - சந்திரனும் நட்சத்திரங்களும் நகரும் தன்மை உடையவை என்பது ஊகிக்கப்படுகிறது (அனுமானம்) . மனிதனும் (இங்கு சைத்ரன் எனும் பெயர் உதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது) ஒர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லும் தன்மை பெற்றவன் என்பது தெரிந்ததே. சைத்ரன் வெவ்வேறு இடங்களில் காணப்படுவதால் அவன் நகர்ந்து/நடந்து சென்றான் என்பது தௌிவாகிறது. அதே போலத்தான் சந்திரனும் நட்சத்திரங்களும். சந்திரனும் நட்சத்திரங்களும் (ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்லும் விஷயத்தில்) சைத்ரனின் வகையைச் சேர்ந்தவை. விந்தியமலையோ மற்ற இடங்களில் காணக் கிடைப்பதில்லை. அது இருக்கும் இடத்திலேயே இருக்கிறது. ஆகையால் அது நகரும் தன்மை அற்றது. ஆகையால், சந்திரனும் நட்சத்திரங்களும் விந்தியமலையின் வகையினைச் சேர்ந்தவை அல்ல. இவ்வாறாக ஊகிக்கப்படும் ‘நகரும் தன்மை’ தன் வகையைச் சேர்ந்த சைத்ரன் போன்றவர்களுடன் தொடர்புடையது, தன் வகையைச் சாராத விந்தியமலையுடன் தொடர்பற்றது என்பது பற்றிய வ்ருத்தி தான் அனுமானம் எனப்படுகிறது.
1 அழியும் பொருட்களை நிலையானவை என எண்ணுதல், இழிந்தவற்றை தூய்மையானவை என எண்ணுதல் என்பது போன்ற எதிர்மறையான கண்ணோட்டம்.
2 அறிபவனையும், அறியப்படுவதனையும் ஒன்றே என தவறாகப் புரிந்துகொள்ளுதல். புருஷனில் ப்ரக்ருதியின் குணங்களைப் பார்த்தல்.
3 பற்று
4 வெறுப்பு
5 உயிர்மேல் ஆசை
6 யோகஸூத்ரம் 2.3-2.--9
1 ப்ரமாணம் என்பது இருக்கும் பொருளை பற்றியது. விகல்ப வ்ருத்தி இல்லாத ஒரு பொருளைப் பற்றியது (உதா.- முயற்கொம்பு)
2 இது விபர்யயத்திலும் சேராது. தவறான அறிவு என தெரிந்த பின் ஒரு பொருள் தவறாகவே குறிப்பிடப்படுவதில்லை. சிப்பியினை தவறாக வௌ்ளி என ஒருவர் அறிகிறார். வெயில் பிரதிபலிப்பினால் அவ்வாறு தோன்றியது எனத் தெரிந்த பின் அது சிப்பி என கூறுவாரே தவிர மீண்டும் அதனை வௌ்ளி எனக் கூறமாட்டார். ஆனால் தவறான அறிவெனத் தௌிந்த பிறகும் அதை அவ்வண்ணமே கூறுதல் விகல்பமாகும். முயற்கொம்பு, ஆகாயத்தாமரை என்பன இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் இவை இவ்வாறே பேச்சு வழக்கில் இருப்பதைக் காணலாம். ஆகையால் தான் இது விபர்யயத்தில் சேராது.
3" புருஷனிடம் செயல்கள் இல்லாமை (அபாவம்) எனும் குணாதிசயம் இருக்கிறது' என்பது இவ்வாக்கியம் வௌிப்படுத்தும் பொருளாகும். இதுவும் விகல்பமே. ஏனெனில் ஸாங்க்ய தத்துவ கொள்கைப்படி ‘இல்லாமை‘ (அபாவம்) என்பது இருக்க (பாவம்) முடியாது. ஆகையால் செயல்கள் இல்லாமை புருஷனிடம் இருக்கிறது எனும் இவ்வாக்கியம் (வஸ்து ஶூன்யம் ஆகையால்) விகல்பமே ஆகும்.
4 விகல்பத்திற்கு இது இன்னொரு உதாரணம். இவ்வாக்கியத்தில் பாணன் என்பவனிடம் செல்லுதல் இல்லாமை இருக்கிறது, இருக்கும், இருந்தது எனக் கூறுவதும் முன்னர் கூறிய எடுத்துக்காட்டு போல இல்லாமை இருக்கிறது எனக் கூறுவதன் மூலம் விகல்பம் ஆகிறது. இவ்வாக்கியத்தில் மேன்மேலும் விகல்பங்கள் உள்ளன. இல்லாமை இருக்கிறது என்பதே விகல்பம் ஆகும் போது அது பாணனிடம் உள்ளது. அதனை பாணன் நிகழ்காலம், எதிர்காலம், இறந்தகாலம் ஆகியவைகளில் செய்பவன் ஆகிறான் என்பவை தொடர்ச்சியாக சகஜமாக எவ்வாறு அன்றாட பேச்சு வழக்கில் விகல்பம் எனும் வ்ருத்தி உள்ளது என்பதனை தௌிவாக எடுத்துகாட்டுகிறது. ஆகையால் விகல்பம் என்பது ப்ரமாணத்திடமிருந்தும், விபர்யயத்திடமிருந்தும் மாறுபட்ட ஒரு வ்ருத்தியாகும்.
1 தமோகுணம் பொருந்திய நித்ரா எனும் வ்ருத்தி
1 ஸம்ப்ரமோஷம் என்றால் திருடுதல் என்று பொருள். ‘அஸம்ப்ரமோஷ’என்ற சொல்லுக்கு திருடாமை என்பது பொருளாகும். பாஸ்வதி, தத்வ-வைஶாரதி ஆகிய உரைகள் இதனைப் பின் வருமாறு விளக்குகின்றன - மாற்றான் செல்வத்திற்கு ஆசைப்படுதல் திருட்டாகும் (ஸம்ப்ரமோஷ:). அவ்வாறு இல்லாமல் இருப்பது திருடாமை (அஸம்ப்ரமோஷ). இதனோடு ஒத்தாற்போல் கருத்துக்கள் இருப்பதனால் ஸ்ம்ருதி பற்றிய ஸூத்ரத்தில் ‘அஸம்ப்ரமோஷ’ எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பொருள் அறியப்பட்ட போது அது பற்றி எந்தெந்த விஷயங்கள் உள்வாங்கப்பட்டனவோ அவற்றை மட்டுமே (ஸம்ஸ்காரங்களிலிருந்து மீட்டு) அளிக்கும் வ்ருத்தி ஸ்ம்ருதியாகும். வேறு அனுபவங்கள் ஏற்படுத்திய பதிவுகள் (மாற்றான் செல்வம்) இந்த வ்ருத்தியில் இல்லை என்பதனால் ஸ்ம்ருதி எனும் வ்ருத்தியினை விளக்குகையில் அஸம்ப்ரமோஷ எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது.
2 ஸ்ம்ருதி எனும் வ்ருத்தி குடம் எனும் பொருளை நினைவுபடுத்தும் போது குடம் எனும் பொருளை மட்டும் நினைவு படுத்துகிறதா அல்லது குடம் பற்றி முன்பு ஏற்பட்ட அறிவினையும் நினைவிற்கு கொண்டுவருகிறதா? என்பது கேள்வியின் பொருள். ஸ்ம்ருதி இவ்விரண்டையுமே நினைவு படுத்துகிறது எனும் கருத்தைத் தெரிவிக்க இந்தக் கேள்வியை எழுப்புகிறார் வ்யாஸர் என்பதாக பாஸ்வதி, யோகவார்த்திகம் ஆகிய உரைகளில் விளக்கம் அளிக்கப்படுகிறது.
3 முன்பே அறியப்பட்ட பொருள் மீண்டும் அறியப்படுவதில்லை. அது நினைவிற்கு வருகிறது எனப்படுகிறது. ஆகையால் அறிதல் என்பது ஸ்ம்ருதியில் பிரதானமானது அல்ல. அது புத்தியில் (முதல் முறை ஒரு பொருளினை அறிதல்) பிரதானமாகிறது.
4 யோகஸூத்ரம் 2.3-2.9
5 இந்த வ்ருத்திகள் அனைத்தும் ஒடுக்கப்பட்டு ஒரு தியான-விஷயத்தை பற்றி சித்தம் திருப்பப்பட்டால் ஸம்ப்ரஜ் ஞாத-ஸமாதி. எந்த வித வ்ருத்திகளுமே இல்லாமல் போகும்படி யோகப் பயிற்சி செய்தால் அஸம்ப்ரஜ் ஞாத-ஸமாதி ஏற்படும்.
1 சித்தம் தான் புத்தி.
1 பற்றின்மை (வைராக்யம்) நான்கு நிலைகள் கொண்டது. அவை - யதமான, வ்யதிரேக, ஏகேந்த்ரிய, வஶீகார என்பனவாகும். யதமான-நிலை என்பது - பற்றினைz துறக்க மேற்கொள்ளப்படும் (துவக்க) முயற்சியைக் குறிக்கிறது. வ்யதிரேக-நிலை - சில பொருட்கள் விஷயத்தில் பற்றின்மை ஏற்பட்டுவிட்டது. இன்னும் சில விஷயங்களில் பற்று உள்ளது என பாகுபடுத்தி உணர்தலைக் குறிக்கிறது. ஏகேந்த்ரிய-நிலை- பற்று மெலிந்து போய் மனதில் மட்டும் ஓர் ஆவலாக இருப்பதைக் குறிக்கிறது. வஶீகார-நிலை - அப்படி மனதில் ஆவலாக இருக்கும் பற்றும்கூட அழிந்தொழிந்துவிடும் உன்னதமான நிலையினை இது குறிக்கிறது.
2 சிலர் பஞ்ச-பூதங்களையோ அல்லது புலன்களையோ இது தான் ‘ஆத்மா ’ (உண்மைப்பொருள்) என உபாசிப்பார்கள். மரணத்திற்கு பின் அவர்கள் உபாசித்த பொருளிலேயே ஒன்றிவிடுவார்கள். அவர்கள் மனதில் முற்பிறவிகளின் பதிவுகள் மட்டும் இருக்கும். அவர்களுக்கு உடல் இருக்காது. அவர்களது உபாசனையின் பலன் தீர்ந்து போகும் வரை பல காலம் வீடுபேறு போன்ற நிலையில் அவர்கள் இருப்பார்கள். அதன் பின்னர் மீண்டும் பிறவி எடுப்பார்கள். இவர்கள் விதேஹர்கள் எனப்படுவார்கள்.
3 த்ருஶ்ய-உலகின் மூலகாரணமான ப்ரக்ருதியையோ அல்லது அதனிடமிருந்து தோன்றிய ஆதார தத்துவங்களான மஹத், அஹங்காரம், பஞ்ச-மாத்ரங்கள் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றினையோ உபாசித்து மரணத்திற்கு பின் அதனுடன் ஒன்றிவிடுவார்கள். இவர்களும் கூட தங்களது உபாசனையின் பலன் தீர்ந்து போகும் வரை பல காலம் வீடுபேறு போன்ற நிலையில் இருப்பார்கள். அதன் பின்னர் மீண்டும் பிறவி எடுப்பார்கள்.
1 கண்கூடான சுகபோகங்கள் , வேதங்களில் கூறப்படும் யாகங்களினால் ஏற்படும் சுவர்க்கத்தை அடைதல்- போன்றவை, குறுகிய காலத்திற்கு மட்டுமே இன்பத்தை அளிக்கவல்லவை. இதுதான் குறைபாடு.
2 குணங்கள் எனும் சொல் இங்கு ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகியவைகளைக் குறிக்கிறது. இவ்வுலகிலும் மேலுலகிலும் இக்குணங்களின் (மகிழ்ச்சி, கோபம், சோம்பல் போன்ற) செயல்பாடுகள் வௌிப்படையாக அறியப்படுகின்றன . ஓரு யோகி இந்த நிலையிலும் குணங்களின் செயல்பாடுகளில் பற்றற்றவராக இருக்கிறார். ஆனால் விதேகம், ப்ரக்ருதி-லயம் போன்ற நிலைகளை அடைந்தவர்களிலும் இந்த மூன்று குணங்கள் இருந்தாலும், அந்த நிலையின் நுண்ணிய தன்மையினால் அக்குணங்களின் செயல்பாடுகள் வௌிப்படையாக அறியப்படுவதில்லை . யோகி இந்த நிலையிலும் குணங்களின் மீது பற்றறவராக இருக்கிறார்
1 தூலமான வடிவம் என்பது பஞ்ச-பூதங்கள் (நிலம். நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) , பத்து புலன்கள் (கர்மேந்த்ரியங்கள் (5) - பேச்சு, கைகள், கால்கள், மலம், மூத்திரம் வௌியேற்ற துவாரங்கள் இரண்டு. ஞானேந்த்ரியங்கள் (5) - பார்த்தல், (காதால்) கேட்டல், சுவைத்தல், (மூக்கினால்) நுகர்தல் தொடுவுணர்வு ஆகியவற்றிற்கான திறன்கள்.) , மற்றும் மனது ஆகியவை கூடிய 16 உலகின் கட்டுமான பொருட்களால் ஆனது. தியானிக்கும் பொருளில் இவற்றின் வௌிப்பாட்டினை முழுமையாக உணர்வது விதர்க்கமாகும். ஒரு ‘பூ’ தியானிப்பதற்கான விஷயமானால் அந்தப் பூ இந்தப் பதினாறு பொருட்களால் ஆனது என உன்னிப்பாக கவனித்து உணர்தல் விதர்க்கமாகும்..
2 மேற்கூறிய 16 பொருட்கள் உண்டாகக் காரணமான ஐந்து தன்மாத்ரங்கள் ,அஹங்காரம், மஹத், ப்ரக்ருதி ஆகியவை பற்றி தியானித்தல் விசாரமாகும். உலகம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச-பூதங்களால் ஆனது. பொருட்கள் குணங்களால் ஆனது. இந்த பஞ்ச-பூதங்களுக்கு குணங்கள் உண்டு. நிலத்திற்கு வாசனை, சுவை, வடிவம், தொடுஉணர்வு, ஒலி ஆகியவை குணங்களாகும். அவற்றுள் வாசனை என்பது நிலத்தின் தனிச் சிறப்பான குணமாகும். நீர், சுவை, வடிவம், தொடுஉணர்வு , ஒலி ஆகிய நான்கு குணங்கள் கொண்டதாகும். நெருப்பு - வடிவம், தொடுஉணர்வு, ஒலி ஆகிய மூன்று குணங்கள் கொண்டதாகும். காற்று - தொடுஉணர்வு, ஒலி ஆகிய இரண்டு குணங்கள் கொண்டதாகும். ஆகாயம் ஒலி எனும் ஒரே ஒரு குணம் கொண்டதாகும். அதாவது நிலம் முதலிய பஞ்ச-பூதங்கள் என்பது வாசனை, சுவை, வடிவம், தொடுஉணர்வு, ஒலி ஆகிய அணுக்களால் ஆனது என்பது இதன் பொருள். இந்த வாசனை முதலிய ஐந்தும் தான் தன்மாத்ரங்கள் எனக் கருதப்படுகின்றன. இது தன்மாத்ரம் பற்றிய எளிய விளக்கமாகும். இந்த தன்மாத்ரங்கள் அஹங்காரம் எனும் தத்துவத்திலிருந்து உண்டாகின்றன. அஹங்காரம் மஹத் எனும் தத்துவத்திலிருந்து உருவாகிறது. மஹத் ப்ரதானம் /ப்ரக்ருதியிலிருந்து உண்டாகிறது. ப்ரக்ருதி தான் அனைத்திற்கும் மூல காரணமாகும். இது உலகக் கட்டமைப்பு பற்றி யோகஸூத்ரங்கள் ஏற்கும் ஸாங்க்ய கருத்தாகும்.
3 சித்தம் விசாரநிலையை அடைவதனால் மனதில் ஸத்வகுணம் ஓங்குகிறது. அதனால் மனதில் மகிழ்வு ஏற்படுகிறது. அந்த மகிழ்வில் மனதை நிலை நிறுத்துதல் ஆனந்த நிலையாகும். - வார்த்திகம். விதர்க்கம் விசாரம் ஆகிய நிலைகளில் மனது தியானிக்கப்படும் பொருளை ஆராய்கிறது. இதற்கு அடுத்த நிலையான ஆனந்த நிலையில் தியானிக்கப்படும் பொருளிலிருந்து கவனம் தியானத்திற்கு உபகரணமான மனதை நோக்கி நகர்கிறது. மனதில் தியானத்தால் உண்டாகும் மகிழ்வு தியானப்பொருளாகிறது. - தத்வவைஶாரதி
4 அஸ்மிதா நிலையில் தியானத்தின் பொருளான ‘ஆனந்த’த்திலிருந்து தியானத்தைச் செய்பவரான புருஷனை நோக்கி கவனம் நகர்கிறது. ‘ஒன்று’ எனும் சொல் தனியானது எனும் பொருளைக் கொடுக்கிறது. அது, உண்மையில் (ப்ரக்ருதியிலிருந்து)வேறான/தனியான புருஷனைக் குறிக்கிறது. இந்த அஸ்மிதா நிலையில் புருஷனின் தூய்மையான பிரதிபலிப்பு மட்டுமே ஸத்வகுணம் ஓங்கியிருக்கும் சித்தத்தில் இருக்கும். - வார்த்திகம்
1 விராமம் எனும் சொல்லுக்கு ஓய்வு என்பது பொருள். ப்ரத்யயம் என்பதன் பொருள் எண்ணம் என்பதாகும். புலன்களாலும், மனதாலும் கிரகித்து தரப்படும் பொருட்கள் இங்கு இருக்காது. அவை ஓய்ந்து விடும். ஆனால் த்ரஷ்டாவாகிய புருஷனின் தூய்மையான வடிவத்தின் பிரv பலிப்பு அந்த எண்ணத்தில் இருக்கும்.
2 பீஜம் என்ற சொல்லுக்கு விதை என்பது நேரிடையான பொருள். இச்சொல்லுக்கு வாசஸ்பதி மிஶ்ரர் - க்லேஶம், முன்செய்த கர்மவினைகள் உருவாக்கிய பதிவுகளின் கிடங்கு (ஆஶயம்) என்பது பொருளாகும் எனக் கருதுகிறார்.
1 இதற்கான விளக்கம் 15வது ஸூத்ரத்தின் அடிக்குறிப்பில் உள்ளது.
2 வியாஸரின் கூற்றுப்படி பவ - என்றால் (வைராக்யத்தினால் ஏற்பட்ட) ஸம்ஸ்காரங்கள் என்று பொருள். ப்ரத்யயம் என்றால் காரணம் என்று பொருள். எந்த ஸமாதிநிலைக்கு பவம் காரணமோ அந்த ஸமாதி பவ-ப்ரத்யயம் எனப்படுகிறது.
3 இவர்களது வைராக்யம் புருஷனை அடையும் குறிக்கோள் கொண்டதாக இருக்காது. இவர்கள் புறஉலகப் பொருட்களிலிருந்து மனதை விடுவித்து மனதை ப்ரக்ருதியிடமோ, ஐம்பூதங்களிலோ, புலன்களிலோ செலுத்துவார்கள்.
4 இதற்கான விளக்கமும் 15வது ஸூத்ரத்தின் அடிக்குறிப்பில் உள்ளது.
1 ஈஶ்வரன் எனும் சொல் அடுத்த ஸூத்ரத்தில் (1.24) விளக்கபட்டுளது
1 யோகஶாஸ்த்ரம் பெரும்பாலும் ஸாங்க்யகொள்கையினை அடியொற்றியே இயற்றப்பட்டுள்ளது. ப்ரதானம், புருஷன் என இரண்டு தான் உலகின் அடிப்படையான தத்துவங்கள் என்பது ஸாங்க்யகொள்கை. ஆனால் இவ்விரண்டிடமிருந்தும் மாறுபட்ட ஈஶ்வரன் எனும் தத்துவம் யோகஸூத்ரத்தில் கூறப்படுகிறது. ஸாங்க்ய-யோக கருத்துக்கள் மாறுபடுவது இங்கு தான். அப்படிப்பட்ட ஈஶ்வரன் எனும் தத்துவம் விளக்கப்படுவது இந்த ஸூத்ரம் மூலமாகத்தான்.
2 விபாகம் என்பது யோகஸூத்ரத்தின் இரண்டாம் பாதத்தின் 13 ஸூத்ரத்தால் விளக்கப்படுகிறது. கர்ம பலனாகிய விபாகம் மூன்று விதமாக வௌிப்படும், ஜாதி, ஆயுள்,போகம் என்பதாக. ஒருவன் செய்யும் செயல்களால் அவன் எந்த உயிரினமாக பிறப்பான் என்பது முடிவாகிறது (ஜாதி). அவனது கர்மங்களுக்கேற்ப அவனுடைய ஆயுள் எவ்வளவு என்பது முடிவாகிறது. ஒரு பிறவியில் அவன் அடையவேண்டிய சுகதுக்கங்களும் கூட முன் செய்த கர்மங்களால் தான் முடிவாகிறது. ஒருவன் தனது கர்மங்களுக்கு ஏற்ப ஜாதி,ஆயுள் மற்றும் போகம் ஆகியவைகளை அடைவது தான் விபாகம்.
3 கர்ம பலன்களை ஜாதி ஆயுள் போகம் என்பதாக மூன்று விதமாக அனுபவிப்பதனால் அதற்கு தகுந்த வாசனைகள் மனதில் பதிகின்றன. பேச்சு வழக்கிலும் கூட படிப்பு வாசனை, முன்ஜென்ம வாசனை போன்ற சொற்கள் உள்ளன. கடந்த பிறவியில்/பிறவிகளில் அனுபவித்த ஜாதி ஆயுள் போகம் ஆகியவை சித்தத்தில் விட்டுச்செல்லும் பதிவுகள் தான் வாசனை/ஆஶயம் எனப்படுகிறது. இந்த வாசனைகளினால் தான் ஒரு மனிதனின் குணாதிசயங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
4 ஜீவாத்மாவிற்கு மேற்கூறிய (மன்னன்-வீரர்கள்) விதமாக க்லேஶங்கள் முதலிவற்றின் தொடர்பு உள்ளது. ஆனால் இப்படிப்பட்ட தொடர்பு கூட ஈஶ்வரனுக்கு கிடையாது என்பது உரையாசிரியர் தெரிவிக்க விழையும் கருத்தாகும்.
5 மூன்றுவிதமான தளைகள் - ப்ராக்ருத-பந்தம் - ப்ரக்ருதிலயம் அடைந்தவர்கள் ப்ரக்ருதியினால் தளை. வைகாரிக-பந்தம் - விதேஹ-நிலையை அடைந்தவர்கள் அவர்கள் தியானம் செய்த ஐம்பூதங்களினாலோ, புலன்களாலோ ஏற்படும் தளை. தாக்ஷிண-பந்தம் - தக்ஷிணை ஆகியவைகளை அளித்து செய்யப்படும் யாகம் ஆகியவற்றால் ஏற்படும் பலவிதமான பலன்களால் ஏற்படும் தளை.
6 வேதங்கள், ஸ்ம்ருதிகள், இதிஹாஸங்கள், புராணங்கள் ஆகியவை ஶாஸ்திரங்கள். - தத்வவைஶாரதி
7 ஸத்வ குணம் பொருந்திய ஈஶ்வரனின் தூய்மையான அறிவிலிருந்து உருவானபடியால் ஶஸ்திரங்கள் உண்மையானது. இப்படிப்பட்ட ஶஸ்திரங்கள் ஈஶ்வரனின் மேன்மை பற்றி கூறுவதனால் ஈஶ்வரனின் மேன்மையும் உண்மையானது தான்.
1 தாமரை, நெல்லிக்கனி, வில்வம் ஆகியவற்றில் அளவு (size ) எனும் குணாதிசயம் இருக்கிறது. முன் கூறிய மூன்று பொருட்களில் அந்த அளவு(size ) எனும் குணாதிசயம் ஒன்றைவிட மற்றொன்றில் அதிகமாக இருக்கிறது. அதாவது அளவு எனும் குணாதிசயம் விஞ்சக்கூடியதாக இருக்கிறது. அளவு (size ) எனும் அதே குணாதிசயம் ஆகாயத்திலும், ஆன்மாவிலும் எல்லையற்றதாக உள்ளது. எந்த குணாதிசயத்தில் விஞ்சக்கூடிய தன்மை உள்ளதோ அது அளவிற்கடங்காமலும் இருக்கும் எனும் ஊகம் இதனால் ஏற்படுகிறது.அதே போல ஸர்வஜ் ஞ-பீஜம் என்பது விஞ்சக்கூடியதாக உள்ளபடியால் அது எல்லையற்றதாகவும் இருக்க முடியும் என ஊகித்தறிய முடிகிறது -- தத்வ-வைஶாரதி
2 கல்பம் என்பது ப்ரஹ்மாவின் ஒரு பகற்பொழுதாகும். அது 43,20,000 ஆண்டுகள் ஆகும். அதன் முடிவில் உலகம் அழிந்து விடும். அப்போது ப்ரஹ்மலோகம் (ஸத்யலோகம்) மட்டும் எஞ்சியிருக்கும்.
3 மஹாப்ரளயம் என்பது ப்ரஹ்மாவின் 100 வருடங்கள் கழிந்த பின் ஏற்படும். (ப்ரஹ்மாவின் ஒரு பகல் 43,20,000 ஆண்டுகள், ஒரு இரவின் கால அளவும் 43,20,000 ஆண்டுகள். இவ்விதம் 100 ஆண்டுகள்) . இந்த பிரளயத்தின் போது ஸத்யலோகமும் அழிந்து விடும் - தத்வ-வைஶாரதி.
4 ஞானிகளுடைய சித்தத்தில் ஸம்ஸ்காரங்கள் இருக்காது என்றபடியால் அவர்களுடைய மனம் தானாகவே புறச் செயல்களில் ஈடுபடாது. ஆகையால் அவர்கள் தங்களுடைய அஸ்மிதாவினால் ஒரு மனதினை உருவாக்கிக்கொண்டு (உலக நன்மைக்காக) செயல்படுவார்கள் . இப்படி உருவாக்கப்பட்ட மனது தான் நிர்மாண- சித்தம் எனப்படுகிறது.)
1 இவ்வாக்கியம் எதனால் கூறப்படுகிறது என்றால் மகாபிரளய சமயத்தில் அனைத்தும் பிரதானத்தில் ஒடுங்கி விடுகின்றன. சொற்களும் பிரதானத்தின் விளைவுகளே ஆகும். ஆகையால் அவையும் பிரதானத்தில் ஒடுங்கிவிடும் ஆகையால் சொற்களும் அது குறிக்கும் பொருட்களும் எவ்வாறு எப்போதும் ஒன்றாக இருக்கும்? இக்கருத்தை மனதிற்கொண்டுதான் இவ்வாக்கியம் கூறப்பட்டது. இதற்கான பதிலை வாசஸ்பதி மிஸ்ரர் கூறுகிறார் - மழை இல்லாமல் போனால் நிலத்திலிருந்து தோன்றுபவை (தவளைகள், செடிகள் ஆகியவை) பட்டுப் போய் பூமியோடு ஒன்றிவிடுகின்றன. ஆனால் மழை பெய்த பின் அவை முன்பு போலவே பூமியிலிருந்து தோன்றுகின்றன. இதே போலத்தான், சொற்கள் மகாபிரளய சமயத்தில் பிரதானத்துடன் ஒன்றிவிட்டாலும் மீண்டும் படைப்பு துவங்கும்போது அதே போல அதே அர்த்தத்துடன்தான் தோன்றுகின்றன.
1 இந்தச் சொற்களுக்கான விளக்கம் வியாஸரின் உரையில் தௌிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால் இங்கு அச்சொற்களுக்குகான மொழிபெயர்ப்பு கொடுக்கப்படவில்லை.
1 தலைவலி, ஜுரம் முதலியவை
2 திருடர்கள், புலி முதலிய கொடிய மிருகங்களால் ஆகியவற்றால் ஏற்படும் துன்பம்
3 வௌ்ளம், பூகம்பம் முதலியன இவை மூன்றும் ஸம்ஸ்க்ருதத்தில் ‘தாபத்ரயம்’ (மூன்று வித கஷ்டங்கள்) எனப்படும்.
4 விருப்பத்திற்கு மாறாக மூச்சுக்காற்று உட்செல்வதும் வௌியேறுதலும் ஶ்வாஸ-ப்ரஶ்வாஸ எனும் சொற்களால் குறிக்கப்படுகிறது.
1 இங்கே ஏக-தத்வம் எனும் சொல்லுக்கு உரையாசிரியர்கள் பல விதமாக விளக்கம் அளிக்கின்றனர்.
1) பாஸ்வதி - ஈஶ்வர ப்ரணிதானம் செய்ய வேண்டும் என கூறினால்.ஈஶ்வரனைப் பற்றி பலவிதமான கருத்துகள் மனதில் தோன்றும். அவர் க்லேஶங்கள் அற்றவர். அனைத்தும் அறிந்தவர். எங்கும் நிறைந்தவர் என்பது போல பல கருத்துக்கள் தோன்றும். இதனால் மனம் அலைபாயும். ஆகையால் இது போன்ற விஷயங்களைத் தடுத்து ஈஶ்வரனைப் பற்றி ஒரே விதமாக சிந்தித்தல் ஏகதத்வாப்யாஸமாகும். இந்த ஏகதத்வாப்யாஸம் செய்வதற்கு ’அஹம் (நான்) ’ எனும் சிந்தனை மிகவும் உகந்தது. நானும் ஈஶ்வரனைப் போன்றவன் தான் எனும் கருத்தினை தியானிக்கலாம்.
2) தத்வ-வைஶாரதி- ஏக-தத்வம் (ஓர் உண்மை) என்பது ஈஶ்வரன் தான். ஏனெனில் முந்தைய ஸூத்ரங்களில் அது பற்றி தான் விளக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வருவதனால் ஏக-தத்வம் என்பது ஈஶ்வரனைத் தான் குறிக்கிறது.
3) வார்த்திகம் - ஏகதத்துவம் என்பது (மனதினை நிலை கொள்ளச் செய்ய உதவும்) தூலமான ஏதாவது ஒரு பொருள். இதன் பொருள் ஈஶ்வரன் என கொள்ள முடியாது ஏனெனில் முந்தைய ஸூத்ரங்களிலேயே ஈஶ்வரனை தியானிக்க வேண்டும் என்பது கூறப்பட்டுவிட்டது. மீண்டும் அதனையே இந்த ஸூத்ரம் கூறுகிறது எனக் கொண்டால் கூறியதனையே மீண்டும் கூறுதல் ஆகிவிடும். புதிதாக ஏதும் இருக்காது.
2 சித்தம் பற்றிய பௌத்தர்களுடைய கருத்து இங்கே நிராகரிக்கப்படுகிறது
3 கோபம் ஒரு குணாதிசயம் எனில் அது மனிதனில் இருக்க வேண்டும். மனிதன் இருந்தால் தான் கோபம் இருக்க இயலும்.
4 பாலும் பசுவிடமிருந்து தான் பெறப்படுகிறது. சாணமும்கூட பசுவிடமிருந்து தான் கிடைக்கிறது. ஆகையால் பாலும் பசுஞ்சாணமும் ஒன்று தான்.
1 மெய் வாய் கண் மூக்கு செவி ஆகியவை புலன்களாகும். தொடுதல், சுவைத்தல், பார்த்தல், நுகர்தல், கேட்டல் ஆகியவை முறையே அவைகளின் விஷயங்களாகும்.
2 ஶாஸ்த்ர முறைப்படியான அனுமானம் என்பது அந்தந்த ஶாஸ்த்ரம் அனுமானத்திற்கு/ ஊகத்திற்கு நிர்ணயித்திருக்கும் குறிக்கோளாகும். குறிக்கோளற்ற ஊகம் என்பது இருமுனை கத்தி போன்றது. அதனை பயன்படுத்துபவரையே அது பதம் பார்த்து விடக்கூடும்.
1 க்ருஷ்ண-த்வைபாயனர் (வ்யாஸர்) போன்ற மகான்கள் பற்றற்றவர்கள் -- -தத்த்வ-வைஶாரதி
1 உயரிய யோகதத்துவ விஷயங்களிலும்
1 பூத-ஸூக்ஷ்மம் என்பது பஞ்ச-பூதங்களின் காரணப்பொருளென கருதப்படும் நுண்ணியவையான தன்மாத்ரங்கள் எனப்படும். ஸமாதியில் கிரகிக்கப்படும் பொருள் தூலமாகவும் இருக்கலாம் நுண்ணியதாகவும் இருக்கலாம் என்பது உணர்த்தப்படுகிறது - பாஸ்வதி
2 ஶுகர் (வ்யாஸரின் மகன்), ப்ரஹ்லாதன் ஆகியவர்கள் முக்தர்கள் - தத்த்வவைஶாரதி, யோகவார்த்திகம்
1 அனுமானம் ஆகமம் ஆகியவை பற்றி 7வது ஸூத்ரத்தில் விளக்கப்பட்டுள்ளது. அனுமானம், ஆகமம் ஆகியவை ஏற்பட சொற்கள் தான் காரணம். தனக்குத்தானே ஒரு ஊகம் (ஸ்வார்த்தானுமானம்) செய்து கொள்ள சொற்பிரயோகம் தேவைப்படாது எனினும் பிறருக்கு தமது ஊகத்தைத் தெரிவிக்க சொற்கள் தேவைப்படும். (பரார்த்தானுமானம்)
2 யோகிகளுக்கு தத்துவங்களைப் பற்றி இது போன்ற நேரிடையான அறிவு/அனுபவம் ஏற்படுகிறது. அவர்களது இந்த அனுபவத்தின் அடிப்படையில் தான் அவர்கள் சொற்களைப் பயன்படுத்தி பிறருக்கு தத்துவங்களை போதிக்கிறார்கள். சொற்களைக்கொண்டு போதிக்கும் போது ஆகம ஞானம் ஏற்படுகிறது. இப்படிபட்ட தத்துவஞானத்தை நேரிடையாக அறிந்தவர் தான் இவ்வாறு போதிக்க முடியும் என்று தத்துவங்களை ஊகித்தறிகிறார்கள் பிறர். ஆகையால் தான் இந்த நேரிடையான ஞானம் ஆகமத்திற்கும் அனுமானத்திற்கும் அடிப்படையாகிறது எனக் கூறப்பட்டது.
3 தாமரை எனும் சொல் தாமரை எனும் பொருளைக் குறிக்கிறது. அப்படிக் குறிக்கப்படும் பொருள் தாமரை எனும் அறிவை ஏற்படுத்துகிறது. தாமரை தொடர்பான அனுமான ஆகம ஞானமும் கூட தாமரை எனும் சொல் ஏற்படுத்தும் குறிப்பினால் தான் ஏற்படுகிறது. ஆனால் சொல் ஏற்படுத்தும் குறிப்பினால் உருவாகியிருந்த (அனுமானம் ஆகமம் ஆகியவற்றால் ஏற்பட்ட) நினைவுகள் (தியானப் பயிற்சியின் மூலம்) களையப்படுமாயின். தாமரை என்று தியானிக்கப்படும் பொருள் மட்டும் சித்ததில் வேறு எண்ணங்கள் கலவாமல் ஒளிரும். இது தான் நிர்விதர்க்க ஸமாபத்தி எனப்படுகிறது.
1 வாக்கியங்களற்ற (வாக்யரஹித-த்யானம்) தியானப்பயிற்சி என்பது ஒன்று உள்ளது என பாஸ்வதி உரையாசிரியர் தெரிவிக்கிறார். வாக்கியங்கள் இருந்தால் தான் சொற்கள் இருக்கும். சொற்கள் இருந்தால் அதன் குறிப்பினால் நினைவுகள், ஊகம், போன்றவை தோன்றும். ஆகவே வாக்கியங்களற்ற தியானப் பயிற்சி என்பது நிர்விதர்க்க ஸமாதி நிலைக்கு இட்டுச்செல்லும். மனதாலும் கூட வாக்கியங்களை நினைத்தல் இந்த ஸமாதி நிலையில் இருக்காது. தியானிக்கப்படும் பொருள் தியானிக்கப்படும் பொருளாகவே இந்த ஸமாதியில் புத்தியினால் கிரகிக்கப்பட வேண்டும்.
2 நிர்விசார நிலையில் அறிவில் விளங்கும் பொருள் எவ்வாறாக இருக்கும் எனக்கூறினார். இதற்கு அடுத்த படியாக இந்த பகுதியில் யோக-தத்துவப்படி உலகின் பொருட்கள் எவ்வாறு இருக்கும் எனும் கருத்து கூறப்படுகிறது. இதன் மூலம் பௌத்தர்கள் உலகினைப் பற்றியும் உலகின் பொருட்களையும் பற்றி கொண்டுள்ள கருத்து நிராகரிக்கப்படுகிறது. பௌத்தர்களின் கருத்துப்படி உலகம் என்பதே ஒரு கற்பனை ஆகும். உலகம் சிந்தையில் மட்டுமே உள்ளது. அது உண்மையில் இல்லை என்பது அவர்களின் கருத்து.
3 தியானிக்கப்படுவது ஒரு பசு என்று எடுத்துக்கொண்டால், இது ஒரு பசு என்று ஒரே ஒரு அறிவு மட்டும் தோன்றும். பசு தொடர்பான வேறு எண்ணங்கள் எதுவுமே இருக்காது.
4 தியானிக்கப்படுவது ஒரு எண்ணம் அல்லது ஒரு கருத்தாகவோ இருக்காது. அது ஒரு பொருளாகத்தான் இருக்கும்.
5 அடுத்துவரும் பகுதியில் தியானிக்கப்படும் பொருள் பகுதிகளால்/அவயவங்களால் ஆனது என நிரூபிக்க உள்ளார் வ்யாஸர். அதற்காக இந்த வாக்கியத்தினாலேயே பூத-ஸூக்ஷ்மங்கள் எனும் பகுதிகளால் ஆனது தியானிக்கப்படும் பொருள் என குறிப்பிடுகிறார்.
6 உலகில் பல்வேறு பொருட்கள் உருவாவதற்கு பூத-ஸூக்ஷ்மங்களின் வடிவமைப்பில் மாற்றம் தான் காரணம். ஒரு குடம் ஏற்பட பூத-ஸூக்ஷ்மங்களின் வடிவமைப்பு மாறுபடும். ஒரு மரம் ஏற்பட அதன் வடிவமைப்பு மாறுபடும்.
7 பூத-ஸூக்ஷ்மங்கள் ஒன்றொன்றிற்கும் ஒவ்வொரு தன்மை இருக்கும். அதாவது வாசனை-தன்மாத்ரத்திற்கு வாசனை எனும் தன்மை இருக்கும். சுவை-தன்மாத்ரத்திற்கு சுவை எனும் தன்மை இருக்கும். ஆனால் மாம்பழம் எனும் (தன்மாத்ரங்களால் ஆன) பொருளில் வாசனை, சுவை ஆகிய இரண்டுமே இருப்பதால் அது வாசனை தன்மாத்ரத்திலிருந்தும், சுவை தன்மாத்ரதிலிருந்தும் வேறாக இருக்கும். அவயவங்களைக் கொண்ட ஒருபொருள் (அவயவீ) தனது அவயவங்களைக் காட்டிலும் தனிச்சிறப்பான தன்மைகள் கொண்டதாக இருக்கும். இல்லை என்றால் அவயவத்திற்கும் அவயவிக்கும் வேறுபாடு எதுவும் இருக்காது. அவயவீ என ஒன்று உள்ளது எனக் கூறுவது தேவைப்படாது. ஆனால் உலகில் காணக்கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் அவயவீயாகத்தான் புலப்படுகின்றன. அவைகளும் தத்தம் அவயவங்களை விட தனிச்சிறப்பான குணங்கள் கொண்டதாகத்தான் அறியப்படுகின்றன.
8 அவயவீ தனது அவயவங்களிலிருந்து முழுமையாக வேறுபட்டது எனில் எந்த அவயவங்களிலிருந்x எந்த அவயவீ தோன்றியது என கூற இயலாமல் போய்விடும். ஆகையால் தான் அவயவங்களின் தன்மை பொருந்தியிருக்கும் எனக்கூறப்படுகிறது.
9 இது ஒரு பசு எனத் தனியாக அறியப்படுகிறது. அந்தப் ’பசு’ எனும் அறிவின் அடிப்படையில் தான் அது தொடர்பான செயல்களும் சொற்களும் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட ‘இது ஒரு பசு’ எனும் அறிவினாலும் அது தொடர்பான செயல்களாலும் இது (பசு) தனது காரணங்களாகிய தன்மாத்ரங்களிலிருந்து வேறானது என்பது ஊகித்து அறியப்படுகிறது. காணப்படும் பொருள் பசுவாகவே காணப்படுவதால், தன்மாத்ரங்களாக காணப்படாததால், காணப்படும் இந்தப் பசு காணப்படாத அதன் காரணங்களாகிய தன்மாத்ரங்களிலிருந்து வேறுபட்டது என ஊகித்தறியமுடிகிறது. அவயவங்களிலிருந்து அவயவீ எவ்வாறு வேறாக உணரப்படுQ றது என்பது இந்த வாக்கியத்தால் தௌிவு படுத்தப்பட்டுள்ளது.
10 அவயவீ தனது காரணமாகிய அவயவங்களால் தான் அறியப்படுகிறது. நீ ‘உன்னுடைய தந்தையின் மகன் தான்‘ என்று ஒரு வாக்கியம் உள்ளது. ஆம் அனைவரும் அவரவர் தந்தையின் செல்வங்கள் தான். ஆகையால் இந்த வாக்கியம் எதனைக் குறிப்பிடுகிறது என்றால்? ஆம் நீ உன் தந்தைக்கு மகன் தான் எனக்கூறும் போது தந்தையின் குணாதிசயங்கள் உன்னிலும் அறியப்படுகின்றன என்பது பொருள். அவரைப் போலவே பேசுகிறாய் அல்லது செயல்படுகிறாய் என்பது வாக்கியத்தின் பொருள். அதே போலத்தான் இங்கேயும். அவயவீ தனது காரணங்களிலிருந்து வேறாகத் தெரிந்தாலும் அது தனது காரணங்களாகிய அவயவங்களைச் சார்ந்தே இருக்கும் என்பது இதன் அபிப்ராயமாகும்.
11 வெண்ணெய் உள்ளது. அதே வெண்ணெயினைக் காய்ச்சும் போது வேறு குணாதிசயங்கள் தோன்றுகின்றன ஆகையால் அது மறைந்து போய்விடுகிறது (இல்லாமல் போவதில்லை) . நெய்யாக மாறிவிடுகிறது.
1 மேலே, கீழே, பக்கவாட்டில் போன்ற தன்மைகள் இங்கு குறிக்கப்படுகின்றன.
2 நிகழ்காலம்.
3 வடிவம்-எனும் தன்மாத்ரம் பற்றிய ஞானம் (ஸவிசார ஸமாதியில்) ஏற்படக் காரணம் பின் வருமாறு விளக்கப்படுகிறது - நெருப்பினை (தேஜஸ்) பற்றிய ஸமாதி (மன ஒருமைப்படு) ஏற்படுகிறது. பின்னர் அதன் காரணம் யாது என்பது பற்றி தியானிக்க விரும்பும் யோகி வடிவ (ரூப) தன்மாத்ரத்தை பற்றி தியானிக்கத் துவங்குகிறார். இது ஸவிசார- ஸமாபத்தி. இந்த நெருப்பினை (தேஜஸ்) பற்றிய ஸமாதி (மன ஒருமைப்படு) தான் அடுத்த நிலையான ஸவிசார நிலைக்கு இட்டுச்செல்கிறது. ஆகவே அது தான் காரணமாகும்.
4 முன்பு அவை இருந்த தன்மை பற்றியோ, அல்லது எதிர்காலத்தில் அவை எப்படி இருக்கலாம் என்பது பற்றியோ எண்ணங்கள் தோன்றாது.
5 இது போன்ற உயரிய நிலைகளுக்கான பயிற்சிகள் தேர்ந்த குருவின் வழிகட்டுதலில் செய்யப்பட வேண்டும். அப்போது இவை பற்றிய தௌ்ளிய ஞானம் ஏற்படும்.
1 நுண்ணிய பொருட்களைப் பற்றி மனதினை ஓருமுகப்படுத்துதல் என்பது கடந்த ஸூத்ரத்தில் கூறப்பட்டது. நுண்ணிய பொருட்கள் என்பது பூதசூக்ஷ்மங்கள் மட்டும் தானா அல்லது அவைகளை விட நுண்ணிய பொருட்கள் உள்ளனவா எனும் கேள்விக்கு பதிலாக அமைகிறது இந்த ஸூத்ரம். அலிங்கம் எனப்படும் ப்ரதானம் வரையில் நுண்ணிய பொருட்கள் உள்ளன என்பது இந்த ஸூத்திரத்தின் கருத்தாகும்.
2 பானை உருவாக மண் எப்படிக் காரணமாகிறதோ அது போல லிங்கத்திற்கு அலிங்கம் காரணமாகிறது. ஆனால் குடம் உருவாவதற்கு ’குடம் உருவாகும் குயவரின் சக்கரத்தை இயக்க பயன்படும் கழி எவ்வாறு காரணமோ அந்தக் கருவி போல புருஷன் லிங்கத்திற்குக் காரணம் என்பது பொருள். அலிங்கமாகிய ப்ரக்ருதி தான் பௌதிக உலகின் மூல காரணமாகும். புருஷன் பௌதிக உலகைச் சேர்ந்தவன் அல்ல. அவன் உணர்வுமயமானவன் (சைதன்யம்) . ஆகையால் அவனுக்கும் ப்ரக்ருதிக்கும் காரணம்- விளைவு எனும் தொடர்பு ஏற்பட வாய்ப்பில்லை.
1 நதிக்கரையில் ஐந்து பழங்கள் உள்ளன என நம்பிக்கைக்கு உரியவர் ஒருவர் கூறினால். பொதுவாக ஐந்து பழங்கள் உள்ளன என்று மட்டுமே தெரியவரும். அப்பழங்களின் வடிவம் போன்ற தனிச்சிறப்பான விஷயங்கள் நேரில் பார்த்தாலே அன்றி அறிய முடியாதன. ஊகிக்கப்படும் பொருட்களிலும் கூட இவ்வாறு தான்.
1 விதை என்பது (செடியாக) விளையக்கூடியது. ஆனால் இந்த ஸமாதி நிலையிலிருந்து வேறு எந்தவிதமான மாறுதலும் விளையாது என்பதனால் இந்த ஸமாதி நிலை விதையற்ற ஸமாதி நிலை எனப்படுகிறது.
2 ரிதம்பரா ப்ரஜ்ஞாவும், அது உருவாக்கிய ஸம்ஸ்காரங்களும் அவை ஏற்படுத்தும் விளைவுகளும் விளக்கப்பட்டன. இவை இரண்டும் (ரிதம்பரா-ப்ரஜ்ஞா, அதனால் உருவான ஸம்ஸ்காரங்கள்) இருக்கும் வரை யோகத்தின் மிக உன்னத நிலையான நிர்பீஜ ஸமாதியை எய்துவது சாத்தியமாகாது. இவ்விரண்டின் நிரோதம் ஏற்பட்டால் தான் அந்நிலை எய்தப்படும். அது இந்த ஸூத்ரத்தில் விளக்கப்படுகிறது.
3 பற்றற்ற தன்மையின் (வைராக்யம் ) பயிற்சியினால், அதன் தீவிரத் தன்மைக்கு ஏற்ப ஸம்ஸ்காரங்கள் ஏற்படுகின்றன (இவை தான் நிரோத-ஸம்ஸ்காரங்கள் எனப்படுகின்றன). இந்த ஸம்ஸ்காரங்கள் தான் ரிதம்பரா ப்ரஜ்ஞாவினால் ஏற்படும் ஸம்ஸ்காரங்களைத் தடுக்கின்றன. வைராக்யம் ரிதம்பரா-ப்ரஜ்ஞாவை மட்டும் தான் தடுக்கும். ரிதம்பரா-ப்ரஜ்ஞாவினால் உருவான ஸம்ஸ்காரங்களை வைராக்யத்தினால் உருவான ஸம்ஸ்காரங்களால் தான் தடுக்கும் இயலும். (ஸம்ஸ்காரங்களால் தான் ஸம்ஸ்காரங்கள் தடுக்கப் படும் என்பது 1.50 ஸூத்ரத்தில் கூறப்பட்டுள்ளது). வைராக்யத்தினால் உண்டான ஸம்ஸ்காரங்களை நேரடியாக அறியமுடியாது. வைராக்ய உணர்வு மேலோங்கி இருக்கும் போது வ்ருத்திகளின் நிரோத நிலை இருப்பதால், நிரோதம் சித்தத்தில் பதிவினை ஏற்படுத்துவது நேரடியாக அறிய முடியாமல் போகிறது. அதனால் நிரோத ஸம்ஸ்காரங்களை ஊகித்தறிய வேண்டியுள்ளது. இதற்கு நிரோத நிலையின் கால அளவில் உள்ள வேறுபாடு உதவுகிறது. நிரோத நிலை சிறிது நேரமே இருந்தால் அதற்குரிய (வைராக்ய ) ஸம்ஸ்காரங்களிலிருந்து அது தோன்றி உள்ளது எனவும் நிரோத நிலையின் கால அளவு அதிகமானால் அதற்கு தகுந்த ஸம்ஸ்காரத்தினால் அது தோன்றியுள்ளது என்று தான் ஊகிக்க வேண்டியுள்ளது. இவ்விதமான ஸம்ஸ்காரங்கள் இல்லை என்றால், நிரோத நிலையில் உள்ள காலஅளவின் வேறுபாட்டை விளக்க இயலாது.