floral-decor

வ்யாஸ-விரசிதம்

பாதஞ்ஜல-யோகஸூத்ர-பாஷ்யம்

தமிழில் : முனைவர் ம. ஜெயராமன்

All rights reserved to Krishnamacharya Yoga Mandiram. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of Krishnamacharya Yoga Mandiram, except in the case of brief quotations embodied in critical reviews and other non-commercial uses permitted by copyright law and with due credit to Krishnamacharya Yoga Mandiram. For permission requests, write to ceo@kym.org

அத யோகாநுஶாஸநம் ॥ 1 ॥
(இந்த நூலின்) தலைப்பு ‘யோகம் பற்றிய விளக்கங்கள்’ ஆகும்.
அத1 எனும் சொல் நூற்தலைப்பு (அதிகாரம்) என்பதனைக் குறிக்கிறது. யோகாநுஶாஸனம்2 எனும் தலைப்பிலான ஶாஸ்திரம் இது என தெரிந்து கொள்ள வேண்டும். யோகம் என்றால் ஸமாதி (உள்ளம் ஒருநிலைப்படுதல்)3. அது எல்லா சித்த-பூமி4களையும் உள்ளடக்கிய சித்தத்தின் (மனதின்) இயல்பு.5
க்ஷிப்தம் (நிலைகொள்ளாமை), மூடம் (சோம்பிக்கிடத்தல்), விக்ஷிப்தம் (அலைபாயும் ஆனால் எப்போதாவது நிலைபெறும் தன்மை), ஏகாக்ரம் (ஒருநிலைப்பாடு) , நிருத்தம் (ஒடுக்கப்பட்ட தன்மை) என்பன சித்த-பூமிகள் ஆகும். விக்ஷிப்த நிலையில் எப்போதாவது நிகழும் ஸமாதியானது யோகம் எனப்படுவதில்லை. மாறாக, ஏகாக்ர நிலையில் - உண்மைப்பொருளை ஒளிர்விக்கும், கஷ்டங்களைக் குறைக்கும், கர்மத்தினால் இறுகிய தளைகளை இளக்கி எண்ணங்களற்ற நிலையை நோக்கி மனதினை இட்டுச்செல்லும் மனதின் தன்மை தான் ஸம்பிரஜ்ஞாத-யோகம் எனப்படும்.
இப்படிப்பட்ட யோகமானது விதர்க்கம், விசாரம், ஆனந்தம், அஸ்மிதா ஆகிய நிலைகள் கூடியிருக்கும். இவை பற்றி வரக்கூடிய நூற்பகுதியில் விளக்கப்படும் (1.17). எல்லா விதமான உள்ளச்செயல்களும் ஒடுக்கப்பட்ட நிலைதான் அஸம்பிரஜ்ஞாத-ஸமாதி எனப்படும்.
ஸம்ப்ரஜ்ஞாதம் அஸம்ப்ரஜ்ஞாதம்

1 அத எனும் சொல்லுக்கு துவக்கம், மங்கலம் போன்ற அர்த்தங்களும் உள்ளன.

2 யோகாநுஶாஸனம் - யோகாநுஶாஸனம் - யோகம் எனும் சொல் வ்யாஸ-பாஷ்யத்தின் அடுத்த வாக்கியத்தால் விளக்கப்படுகிறது. அநுஶாஸனம் - ஶாஸனம் என்றால் வகுத்து அளித்தல். ஹிரண்ய-கர்ப்பர் (பிரம்மதேவர்) யோகத்தின் முதல் ஆசிரியராகக் கருதப்படுகிறார்.. அவருடைய கருத்துகளைப் பின்பற்றி யோகஸூத்ரங்கள் இயற்றப்பட்டுள்ளதால் அநுஶாஸனம் எனப்படுகிறது. - தத்வவைஶாரதி

3 ஸமாதி எனும் சொல்லுக்கு உள்ளம் ஒருநிலைப்படுதல் என்பது பொதுவான பொருளாகும். இதன் தௌிவான விளக்கம் யோக-ஸூத்ரங்களின் மூன்றாவது அத்தியாத்தின் மூன்றாவது ஸூத்ரத்தில் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது- தியானிக்கப்படும் பொருளைப் பற்றியே இடைவிடாத எண்ணப் பிரவாகம் ஏற்படும் போது மனது, எண்ணும் பொருளின் வடிவை அடைந்து தனது சுயவடிவை இழந்தது போல் ஆகிவிடுதல் தான் ஸமாதி.

4 சித்த-பூமி - மனதின் நிலைகள், ஸம்ஸ்காரங்களினால் (முன்பு ஏற்பட்ட பதிவுகளினால்) எந்தெந்த நிலைகளில் மனம் இருக்கிறதோ அது சித்த-பூமி எனப்படுகிறது. - பாஸ்வதி

5 பின்னால் கூறவிருக்கின்ற - ‘க்ஷிப்தம் முதலிய நிலைகளிலும் கூட மனது ஓரளவாவது ஒருநிலைப்படும்’. - யோக-வார்த்திகம். ஆனால் ஏகாக்ர-நிலையில் தான் முழுமையான ஒருநிலைப்பாடு ஏற்படும்

அதன் (யோகத்தின்) இலக்கணத்தை வரையறுக்க விழைகிறது இந்த ஸூத்ரம்
யோகஶ்சித்தவ்ருத்திநிரோத: ॥ 2 ॥
சித்த--வ்ருத்திகளை (உள்ளச்செயல்களை) ஒடுக்குதல் யோகம்.
வ்ருத்திகள் (உள்ளச்செயல்கள்) ‘எல்லாவற்றையும்’ ஒடுக்குதல்தான் யோகம் எனக் கூறப்படாததால் ஸம்பிரக்ஞாத நிலையும்1கூட யோகம் என்றே கூறப்படுகிறது. உள்ளம், (ஞான) ஒளி பொருந்தி இருத்தல் (ப்ரக்யா), செயல்கள் புரிதல் (ப்ரவ்ருத்தி) , நிலையாக இருத்தல் (ஸ்திதி) ஆகிய தன்மைகள் கொண்டமையால் முக்குணம்2 படைத்தது எனப்படுகிறது.
ஒளிமயமான தன்மை பொருந்திய ஸத்வகுணம் கொண்ட சித்தம்3 ரஜஸ்-தமஸ் ஆகியவைகளுடன் சேரும்போது ஐஶ்வர்யத்தையும்4 புலனின்பங்களையும் நாடும். அதுவே தமோ (தமஸ்) குணத்துடன் இணையும் போது அதர்மம், அஞ்ஞானம், புலனின்பங்களில் பற்று ஆகியவற்றோடு ஐஶ்வர்யம் அல்லாதவற்றையும் நாடத்துவங்கும். அதே சித்தம் அறியாமை எனும் திரை விலகிய பின் ஒளிமயமாக இருக்கும். சிறிதளவே ரஜோகுணம் இருக்கும் அந்த நிலையில் மனது, அறம், அறிவு, புலனின்பங்களில் பற்று இல்லா நிலை, மற்றும் ஐஶ்வர்யத்தையும் நாடியிருக்கும்.
அந்தச் சிறிதளவு ரஜோகுணத்தின் மாசு கூட இல்லாமல் போகும் போது, சித்தம் தனது (ஸத்வ-குணம் பொருந்தியதான) இயல்பில் இருக்கும். ஸத்வமும் (ஸத்வகுணம் பொருந்திய சித்தமும்) புருஷனும் வேறு வேறு என்ற தௌிவு மட்டும் இருக்கும் (விவேக-க்யாதி) 5. அப்போது சித்தம் தர்ம-மேகம் எனும் தியான நிலையை எய்தும். இந்த நிலை ‘மிக உன்னதமான வைராக்யம்’ (பரம் ப்ரஸங்யானம்) என்றும் தியான வல்லுனர்களால் அழைக்கப்படுகிறது.6
சிதி-ஶக்தி7 (புருஷன்) என்பது மாற்றமில்லாதது, அசைவற்றது. இதற்கு உலகின் வஸ்துகள் காண்பிக்கப்படும். இது தூய்மையானது, எல்லையற்றது. ஆனால் ஸத்வ-குணம் பொருந்திய சித்தமும், புருஷனும் வேறு எனும் தௌிவு (விவேக-க்யாதி) இதற்கு நேர்மாறானது.8 ஆகையால் அதனின்றும் பற்றை விலக்கி (யோகப்பயிற்சியினால் பண்பட்ட)சித்தம் அந்தத் தௌிவினையும் தடுத்து விடுகிறது. அந்நிலையில் சித்தத்தில் முன்செய்த செயல்களின் பதிவுகள் (ஸம்ஸ்காரம்) மட்டும் எஞ்சியிருக்கும் (வ்ருத்திகள் ஏதும் ஏற்படாது.). அது விதை9யற்ற (நிர்பீஜ) ஸமாதி எனப்படுகிறது. அந்நிலையில் வேறு எதுவும் அறியப்படுவதில்லை. ஆகையால் ‘ஏதும் அறியாத நிலை’ (அஸம்பிரஜ்ஞாத) என்று அது குறிப்பிடப்படுகிறது.
ஆகையால் வ்ருத்திகளை (உளச்செயல்களை) ஒடுக்கும் இந்த யோகமானது (ஸம்பிரஜ்ஞாதம், அஸம்பிரஜ்ஞாதம் என்று) இரண்டு வகைப்படும்.

1 ஸம்ப்ரஜ்ஞாத யோக நிலையில் உள்ளம் ஒரு குறிப்பிட்ட பொருளில் லயித்து இருப்பதால் அது தொடர்பான செயல்பாடுகள் இருந்து கொண்டு தான் இருக்கும். அந்த நிலையில் சித்த-வ்ருத்திகள் இருக்கின்றன, அதனால் அது யோகமாகாது என்று கூற இயலாது என்பதனைத் தௌிவுபடுத்துகிறது இவ்வாக்கியம். சித்த-வ்ருத்திகள் சில இருந்தாலும், தியானிக்கப்படும் பொருளில் மனம் லயித்திருந்தால் அது யோகமாகும். அனைத்து சித்த-வ்ருத்திகளும் ஒடுங்கிய நிலை தான் யோகம் என்பதில்லை என்பது இங்கே தௌிவு படுத்தப்படுகிறது.

2 ஸத்வம் , ரஜஸ், தமஸ் என்ற குணங்கள் தான் இங்கு குறிப்பிடப்படுகின்றன. ஒளி - அறிவுத் தௌிவு, மகிழ்வு போன்றவைகளைக் குறிக்கிறது. செயல்படுதல் - ஆசை, கோபம் போன்று உள்ளத்தில் பொங்கும் உணர்வுகள் இதனால் குறிப்பிடப்படுகின்றன. செயலற்று இருத்தல் - மந்தமாகவும், சிந்திக்கும் திறனற்று ஜடமாகவும் உள்ளம் இருத்தலை இது குறிக்கிறது.

3 சித்தம் முக்குணங்களால் ஆனது. அப்படிப்பட்ட சித்தத்தில் ஸத்வ-குணத்தைவிட குறைவாக ரஜஸ் தமஸ் குணங்கள் இருக்கும் நிலை இங்கு குறிப்பிடப்படுகிறது. ஸத்வ-குணத்தை விட குறைவாக இருந்தாலும் ரஜஸ் மற்றும் தமோ குணங்கள் சரிசமமான அளவில் இருக்கும் நிலை இது. -தத்வ-வைஶாரதி

4 ஐஶ்வர்யம் எனும் சொல்லுக்கு - உலகியல் அதிகாரம், அணிமா முதலிய சித்திகள் என்ற அர்த்தங்கள் வ்யாச-பாஷ்யத்தை ஒட்டி எழுதப்பட்ட பாஸ்வதி, தத்வ-வைஶாரதி போன்ற யோக-ஸூத்ர உரைகளில் வழங்கப்பட்டுள்ளன.

5 ஸத்வ-குணம் மட்டுமே சித்தத்தில் மேலோங்கி வலுப்பெற்றிருக்கும் நிலையில் தான் விவேக-க்யாதி ஏற்படும்.- பாஸ்வதி

6 சித்தம் இந்த நிலையினை அடைந்த பிறகு, அடுத்த நிலை (இது தான் கடைசி நிலை) புருஷன் தனது இயல்பில் நிலைபெறுவது. ஆகையால் அடுத்தபடியாக புருஷனுடைய இயல்பு வர்ணிக்கப்படுகிறது.

7 சைதன்யம்/ consciousness . யோக ஸூத்ரங்களில் படைப்பு, புருஷன், ப்ரக்ருதி என இருவகைப் படுத்தப்படுகிறது. அறிபவர் (த்ரஷ்டா) புருஷன், அறியப்படுவது (த்ருஶ்யம்) ப்ரக்ருதி ஆகும். த்ருஶ்யத்தின் தாக்கத்தினால் த்ரஷ்டா தனது சுய இயல்பினை அறிய முடியாமல் போய்விடுகிறது. அதற்கு முக்கிய காரணம் த்ருஶ்யப் பிரிவினைச் சார்ந்த சித்தத்தின் செயல்பாடுகள் ஆகும். அதுதான் த்ருஶ்ய உலகின் கருத்துக்களை அறிபவராகிய புருஷனில் ப்ரதிபலிக்கச் செய்கிறது. ஆகையால் சித்தத்தின் செயல்பாடுகள் ஒடுங்கினால் அறிபவராகிய புருஷனுடைய உண்மை இயல்பு வௌிப்படும். இது தான் யோக-ஶாஸ்த்ரம் கூறும் அடிப்படைக் கருத்தாகும்.

8 விவேக-க்யாதி எனும் வ்ருத்தி மற்ற வ்ருத்திகளை விட உயர்ந்தது என்றாலும், அதுவும் சித்தத்தில் உண்டாகிறபடியால் சித்தத்தினுடைய குணங்கள் கொண்டதாகவே இருக்கும். ஆகையால் அதுவும் ஒடுக்கப்பட வேண்டியதுதான்.

9 துன்பமயமான பிறப்பினை அளிக்கவல்ல, சித்தத்தில் படிந்திருக்கும் வினைப்பயன்களின் பதிவுகள் தான் விதை.

அந்நிலையில் (அஸம்பிரஜ்ஞாத-யோகத்தில்) உள்ளத்தில் வேறு ஏதும் இருப்பதில்லை என்பதால் அறிவை அறிபவனாக விளங்கும் புருஷன் எப்படிப்பட்ட இயல்பினனாக இருப்பான்?
ததா த்ரஷ்டு: ஸ்வரூபே(அ)வஸ்தாநம் ॥ 3 ॥
அப்போது த்ரஷ்டா1 இயல்பான நிலையில் இருக்கிறார்.
சிதிஶக்தி (உணர்வு எனும் சக்தி, புருஷன்) கைவல்யத்தில்2 இருப்பது போலத் தன் இயல்பான நிலையில் நிலைத்திருக்கும். செயல்கள் ஒடுக்கப்படாத சித்தம் இருக்கும் போதும் கூட புருஷன் இப்படித்தான் இருக்கிறான். ஆனால் (சித்தத்தின் செயல்பாடுகள்) அவ்வாறு அல்லாமல் (அதனை அறியாவண்ணம் மறைத்து விடுகின்றன) செய்து விடுகின்றன.

1 இதற்கு முந்தைய பக்கத்தின் முதல் அடிக்குறிப்பினைப் பார்க்கவும்

2 யோகத்தின் கடைசி நிலை

அப்படியெனில் (வ்ருத்திகளால் புருஷனின் இயல்பான நிலை மறைக்கப்படுமாயின்) எவ்விதமாக (புருஷன் தோற்றமளிப்பான்) ?
(உலகின்) பொருட்கள் (புலன்களினால் கிரகிக்கப்பட்டு மனதினை அடைந்து அதன் வழியே புருஷனுக்கு) காண்பிக்கப்படுவதால் ---
வ்ருத்திஸாருப்யமிதரத்ர ॥ 4 ॥
(யோகம் இல்லா) பிற நிலையில் வ்ருத்திகளை ஒத்த வடிவம் (த்ரஷ்டாவிற்கு இருப்பதாக அறியப்படுகிறது) .
‘வ்யுத்தான’ நிலையில்1 ஏற்படும் வ்ருத்திகளின் வடிவோடு ஒன்றி விடுகிறது புருஷனின் வடிவம். இது பற்றி (பஞ்ச-ஶிகாசார்யர் இயற்றிய) சூத்திரம் ஒன்று வருமாறு -
(புருஷன்-உள்ளம் இவைகளுடைய) ஞானம்2 என்பது ஒன்றே தான். அறிந்து கொள்ளுதல் தான் ஞானமாகும்.
(ஈர்ப்பு சக்தி கொண்டதனால்) காந்தக்கல் போன்ற சித்தம் அதன் அருகாமையினாலேயே உதவுகிறது. இவ்விதமே யஜமானனாகிய புருஷனின் உடமை ஆகிவிடுகிறது சித்தம். ஆகையால்3, புருஷன் வ்ருத்திகளை (தன்னுடையது என) உணர்வதற்கு (புருஷனுக்கும் சித்தத்திற்கும் இடையே உள்ள) துவக்கமற்ற4 (காந்தக்கல்-இரும்பு ஆகியவைகளிடையே உள்ளது போல இப்படிப்பட்ட) தொடர்பே காரணமாகிறது.

1 உள்ளம் வ்யுத்தானம், நிரோதம் எனும் இருவிதமான செயல்பாடுகள் கொண்டது என யோக-ஸூத்ரங்கள் தெரிவிக்கின்றன (3.9) . வ்யுத்தானம் - வௌியுலகிற்கு ஆட்பட்டு செயல்படும் உளத்தன்மையை குறிக்கிறது . நிரோதம் - உள்ளம் உள்நோக்கி திருப்பப்பட்டு அதன் செயல்கள் ஒடுக்கப்படும் தன்மையை நோக்கிச் செல்வதைக் குறிக்கிறது

2 புருஷன் ஞானமே வடிவானவன். ஞானம் அவனுக்கு ஏற்படுவது இல்லை. மாறாக அவனுடைய இயல்பு ஞானமாகும். புத்திக்கு ஞானம் ஏற்படுகிறது. அந்த ஞானத்தை ஏற்படுத்தும் உளச்செயல்கள் ஜடத்தன்மையுடைய ப்ரக்ருதியிலிருந்து தோன்றுவதால் அதுவும் ஜடமானதுதான். ஆகையால் இவ்விரண்டும் எவ்வாறு ஒன்றாக முடியும் என்று கேட்டால் - இங்கு கூறப்பட்ட ஞானம் வ்ருத்திகளால் ஏற்படுவதாகும். புலன்கள் வௌியுலகப் பொருட்களைக் கிரகித்து சித்தத்திற்கு அனுப்புகின்றன. சித்தம் செயல்பட்டு அந்த பொருளின் வடிவத்தினை அடைகிறது. அதன் பிரதிபிம்பம் சித்தத்திற்கு ஆதாரமாக உள்ள புருஷனில் ஏற்படுகிறது. ஒரே பொருளின் வடிவமும்- பிரதிபிம்பமும் முறையே உள்ளம், புருஷன் இவைகளில் ஏற்படுவதால்தான், (புற உலகப் பொருட்களின்) ஞானம் ஒன்று தான் என மேலே கூறப்பட்டது. இந்த பஞ்சஶிகாசார்யர் கருத்து புருஷன் யோகமற்ற பிற நிலையில் உளச்செயல்களுக்கு ஒத்த வடிவினை அடைகிறான் எனும் யோக-ஸூத்ர கருத்துடன் ஒத்திருப்பதால் வ்யாஸபாஷ்யத்தில் மேற்கோளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 புருஷன் சித்தத்திற்கு யஜமானன் ஆகிவிட்டபடியால், சித்தம் புருஷனின் உடமை ஆகிவிட்டபடியால்

4 இரும்பிற்கு காந்தத்தால் ஈர்க்கப்படுதல் எனும் இயல்பு இருக்கிறபடியால், காந்தத்திற்கும் இரும்பினை ஈர்த்தல் எனும் இயல்பு இருக்கிறபடியால் இரண்டிற்கு இடையேயும் ஈர்ப்பு ஏற்படுகிறது. இந்தத் தொடர்பு இரும்பும் காந்தமும் இருக்கும் காலத்திலிருந்து இருக்கிறது. அதே போல சித்தம் ‘அறியப்படுதல்’ எனும் அடிப்படை இயல்பு கொண்டது, புருஷனும் ‘அறிபவன்’ எனும் அடிப்படை இயல்பு கொண்டவன் ஆகையால் இவ்விரண்டிற்குமிடையே தொடர்பு இயல்பானது. புருஷனும் சித்தமும் இருக்கும் காலத்திலிருந்து இருக்கிறது. புருஷன் துவக்கமற்றவன், ப்ரக்ருதியும் துவக்கமற்றது என்பதனால் இந்தத் தொடர்பு துவக்கமற்றதுதான்.

ஒடுக்கப்பட வேண்டிய வ்ருத்திகள் எண்ணிலடங்காதவை என்றாலும்
வ்ருத்தய: பஞ்சதய்ய: க்லிஷ்டாக்லிஷ்டா: ॥ 5 ॥
வ்ருத்திகள் ஐந்து வகைப்படும். (இந்த ஐவகை வ்ருத்திகள்) துன்பம் அளிப்பவை (க்லிஷ்ட), துன்பம் அளிக்காதவை (அக்லிஷ்ட) (என இருவகைப்படும்).
1க்லேஶங்களிலிருந்து தோன்றக்கூடிய, கர்ம-ஆஶயங்களுக்கு2 விளைநிலமான வ்ருத்திகள் ‘க்லிஷ்ட-வ்ருத்திகள்’ எனப்படும்.
(புருஷன் வேறு ப்ரக்ருதி வேறு எனும்) அறிவுத்தௌிவினை ஏற்படுத்தவல்ல, குணங்களின்3 செயல்பாடுகளை எதிர்க்கும் தன்மையுடைய வ்ருத்திகள் ‘அக்லிஷ்ட-வ்ருத்திகள்’4 எனப்படும். க்லிஷ்ட-வ்ருத்திகளின் பிரவாகத்தினூடே தோன்றினாலும் தன்மை மாறாதிருப்பவை அக்லிஷ்ட-வ்ருத்திகள். அக்லிஷ்ட-வ்ருத்திகளின் இடையிடையே தோன்றினாலும் க்லிஷ்ட-வ்ருத்திகள் தமது தன்மையை மாற்றிக்கொள்ள மாட்டா.5
மேற்கூறிய (க்லிஷ்ட, அக்லிஷ்ட) இயல்பினை கொண்ட ஸம்ஸ்காரங்கள் (மனப்பதிவுகள்) (க்லிஷ்ட, அக்லிஷ்ட) வ்ருத்திகளால் உண்டாகின்றன. இது போன்ற வ்ருத்திகளுக்கோ ஸம்ஸ்காரங்களே காரணமாகின்றன. இவ்விதமாக வ்ருத்தி-ஸம்ஸ்கார சக்கரமானது ஓய்வு ஒழிவின்றி சுழல்கின்றது. இவ்விதமான செயல்பாடுகள் கொண்ட சித்தம் (யோகப் பயிற்சியினால் ) இச் செயல்களைச் செய்யமுடியாத நிலையை அடையும் போது ஆன்மாவினை (புருஷனை) ஒத்த வடிவினை அடைகிறது அல்லது தனது காரணப் பொருளுடன்(ப்ரக்ருதியுடன்) ஒன்றிவிடுகிறது.

1 அஞ்ஞானம் (அவித்யா), அறிபவரும் (புருஷனும்), அறியப்படுவதும் (ப்ரக்ருதி) வெவ் வேறாயினும் அவை இரண்டும் ஒன்றே எனத் தவறாக புரிந்து கொள்ளுதல் (அஸ்மிதா) , பற்று (ராகம்) , வெறுப்பு (த்வேஷம்) , இயற்கையாகவே அனைவருக்கும் இருக்கும் உயிர்மேல் ஆசை (அபினிவேஶம்) இவை ஐந்தும் க்லேஶங்கள் என இரண்டாம் பாதம் மூன்றாம் ஸூத்ரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2 மனிதன் பொருட்களை (சித்த வ்ருத்திகளால்) அறிகிறான். அதன் பின்னர் தான் அதன் மீது பற்றோ அல்லது வெறுப்போ அடைகிறான். அதன் அடிப்படையில் செயல்படுகிறான். புண்ணியத்தையோ, பாவத்தையோ சேர்க்கிறான். இந்தப் புண்ணிய பாவங்களின் (மனக்)கிடங்கு தான் கர்மாஶயம் எனப்படுகிறது. இந்த கர்மாஶயங்கள் தான் அவனுடைய எதிர்கால வாழ்க்கையின் இன்பத்தையோ, துன்பத்தையோ நிர்ணயிக்கிறது.

3 ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்கள் மனிதனைச் செயல்களில் ஈடுபடுத்தும். அதனால் மனப்பதிவுகள் ஏற்படும். இதன் காரணமாக துன்பம் வந்து சேரும். புருஷன் வேறு ப்ரக்ருதி வேறு எனும் தௌிவு உண்டான பின் குணங்களின் செயல்பாடுகள் இல்லாமல் போய்விடும்.

4 இந்த வ்ருத்திகள் வேதங்களின், நல்லாசிரியரின், வழிகாட்டுதலினால் செய்யப்படும் பயிற்சிகளாலும், பற்றின்மையை வளர்த்துக் கொள்வதாலும் ஏற்படுகின்றன.

5 க்லிஷ்ட- வ்ருத்திகள் இடையே தோன்றும் அக்லிஷ்ட- வ்ருத்திகள் தங்களது தன்மையை மாற்றிக்கொள்ளாமல் இருக்கும். யோகப் பயிற்சி தீவிரமடையும் போது க்லிஷ்ட- வ்ருத்திகளுக்கு இடையே) ஏற்படும் அக்லிஷ்ட பதிவுகள் படிப்படியாக வலுப்பெற்று க்லிஷ்டவ்ருத்திகளே ஏற்படாமல் தடுத்துவிடும். அதே போல யோகப்பயிற்சியினால் அக்லிஷ்டவ்ருத்திகள் தொடர்ந்து இருந்தாலும் மனது அலைபாயும்போது அவைகளிடையே க்லிஷ்டவ்ருத்திகள் ஏற்படும். இந்நிலை தொடரும்போது படிப்படியாக அக்லிஷ்ட- வ்ருத்திகள் மறைந்து போய் க்லிஷ்ட- வ்ருத்திகளால் மனது சூழப்பட்டு துன்பத்தில் உழலும்.

ப்ரமாணவிபர்யயவிகல்பநித்ராஸ்ம்ருதய ॥ 6 ॥
ப்ரமாணம் (சரியான அறிவு) , விபர்யயம் (தவறான அறிவு) , விகல்பம் (கற்பனை) , நித்ரா (தூக்கம்) , ஸ்ம்ருதி (ஞாபகம்) (ஆகியவை ஐவகை வ்ருத்திகள் ஆகும்) .
ப்ரமாணம் விபர்யயம் விகல்பம் நித்ரா ஸ்ம்ருதி
அவற்றுள் –
ப்ரத்யக்ஷாநுமாநாகமா: ப்ரமாணாநி ॥ 7 ॥
ப்ரத்யக்ஷம் (புலன்களினால் ஏற்படும் அறிவு) , அனுமானம் (ஊகித்தறிதல்) , ஆகமம் (நம்பிக்கையானவர்களின் வாக்கினால் ஏற்படும் அறிவு) ஆகியவை ப்ரமாணங்கள்.
ப்ரத்யக்ஷம் என்பது (புற உலக) பொருட்களைப் பற்றிய சித்தத்தின் வ்ருத்திகள் ஆகும். (புறப்) பொருட்களைப் பற்றிய வ்ருத்திகள் புலன்கள் வழியாக ஏற்படுகின்றன. புலன்களின் வழியாக (புறப்) பொருட்களின் தனிச்சிறப்பான1 குணாதிசயங்களும், பொதுவான குணாதிசயங்களும் அறியப்படுகின்றன. புலன்களினால் உள்வாங்கப்படும் (புறப்) பொருட்களின், (பொதுவான குணாதிசயங்களும் உள்வாங்கப்படும் எனினும்) முக்கியமாக, தனிச்சிறப்பான குணங்களை உறுதிப்படுத்தும் வண்ணம் ஏற்படும் வ்ருத்தி தான் ப்ரத்யக்ஷம்.
(ப்ரத்யக்ஷ-வ்ருத்தியின்) பலனாவது - (ப்ரமாணம் போன்ற) இந்த சித்த-வ்ருத்திகள் வேறு அல்ல, தான் வேறு அல்ல என புருஷன் உணர்தல்.2 புத்தியில் பிரதிபலிப்பதை உணரகூடிய தன்மை புருஷனில் உள்ளது என்பதனை வரும் பகுதிகளில் விளக்கவிருக்கின்றோம்.
அனுமானம் எனும் வ்ருத்தியினால், முக்கியமாக, ஒரு பொருளின் பொதுவான குணாதிசயங்கள்தான் மனதில் உறுதிப்படுத்தப்படுகின்றன.
ஊகிக்கப்படுவதன் (பொருளின்/கருத்தின்) தொடர்பு அதன் வகையைச் சேர்ந்தவைகளிடையே நிலவுகிறது. அதன் வகை அல்லாதவற்றிடமிருந்து விலகி நிற்கிறது எனும் விதமாக மனதில் உதிக்கும் வ்ருத்தி தான் அனுமானம். உதாரணமாக - சந்திரனும், நட்சத்திரங்களும் (ஆகாயத்தின்) வெவ்வேறு இடங்களில் (வெவ்வேறு நாட்களில்) தென்படுவதனால் நகரும் தன்மை உடையவை, சைத்ரனைப் போல. விந்திய மலையோ வேறு இடங்களில் காணப்படாததால் நகரும் தன்மையற்றது.3
நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமானவரால் ஒரு விஷயம் பார்க்கப்படுகிறது அல்லது ஊகிக்கப்படுகிறது. அந்த விஷயம் பற்றிய தன்னுடைய அறிவு பிறருக்கும் ஏற்பட வேண்டும் எனும் உத்தேசத்துடன் அவரால் அது சொற்களால் விவரிக்கப்படுகிறது. கேட்பவருக்கு அச்சொற்களினால் ஏற்படும் வ்ருத்தி ‘ஆகமம்’ எனப்படுகிறது. எங்கு கூறுபவர் (கேட்பவருக்கு) நம்பிக்கைக்கு உரியவர் இல்லையோ, கூறப்படும் பொருள் கூறப்படுபவரால் நேரில் பார்க்கப்படாமலோ, ஊகிக்கப் படாமலோ உள்ளதோ அதனால் ஏற்படும் ஆகமம் நிலையானதாக இருப்பதில்லை. கூறுபவரால் (கூறப்படும் பொருள்) நேரில் பார்க்கப்பட்டோ ஊகிக்கப்பட்டோ இருக்குமாயின் அந்தச் சொற்கள் அசைக்க முடியாதவையாகிவிடும்.
படம் 3:
ப்ரத்யக்ஷம் அனுமானம் ஆகமம்

1 ஒரு பொருளின் வடிவம், நிறம் போன்றவை அதன் தனிச்சிறப்பான குணாதிசயங்களாகும். ஒரு பொருள் எந்த வகையைச் சேர்ந்தது என்பன போன்றவற்றைக் குறிப்பவை அதன் பொதுவான குணாதிசயங்களாகும். உதாரணம் - ஒரு பசு. அதன் நிறம், வடிவம் ஆகியவை அதன் தனிச்சிறப்பான குணாதிசயங்களாகும். பசு எனும் வகையைச் சேர்ந்த பிராணி இது என்பதனைக் குறிக்கும் கொம்பு, திமில், அதன் கழுத்துக்குக் கீழே தொங்கும் சதை மடிப்பு ஆகியவை பொதுவான குணாதிசயங்களாகும்.

2 ஒரு பானை கண்களால் காணப்படுமாயின், அது சித்தத்தில் அறிவாக உருப்பெற்று, புருஷனில் பிரதிபலிக்கும் போது ' நான் இந்த பானையை அறிகிறேன்’ என புருஷனில் ஏற்படும் உணர்தல் தான் ப்ரத்யக்ஷத்தின் ப்ரயோஜனமாகும்.

3 இங்கு - சந்திரனும் நட்சத்திரங்களும் நகரும் தன்மை உடையவை என்பது ஊகிக்கப்படுகிறது (அனுமானம்) . மனிதனும் (இங்கு சைத்ரன் எனும் பெயர் உதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது) ஒர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லும் தன்மை பெற்றவன் என்பது தெரிந்ததே. சைத்ரன் வெவ்வேறு இடங்களில் காணப்படுவதால் அவன் நகர்ந்து/நடந்து சென்றான் என்பது தௌிவாகிறது. அதே போலத்தான் சந்திரனும் நட்சத்திரங்களும். சந்திரனும் நட்சத்திரங்களும் (ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்லும் விஷயத்தில்) சைத்ரனின் வகையைச் சேர்ந்தவை. விந்தியமலையோ மற்ற இடங்களில் காணக் கிடைப்பதில்லை. அது இருக்கும் இடத்திலேயே இருக்கிறது. ஆகையால் அது நகரும் தன்மை அற்றது. ஆகையால், சந்திரனும் நட்சத்திரங்களும் விந்தியமலையின் வகையினைச் சேர்ந்தவை அல்ல. இவ்வாறாக ஊகிக்கப்படும் ‘நகரும் தன்மை’ தன் வகையைச் சேர்ந்த சைத்ரன் போன்றவர்களுடன் தொடர்புடையது, தன் வகையைச் சாராத விந்தியமலையுடன் தொடர்பற்றது என்பது பற்றிய வ்ருத்தி தான் அனுமானம் எனப்படுகிறது.

விபர்யயோ மித்யாஜ்ஞாநமதத்ரூபப்ரதிஷ்டம் ॥ 8 ॥
விபர்யயம் என்பது தவறான அறிவாகும். அது அறியப்படும் பொருளின் உண்மை வடிவின் அடிப்படையில் உண்டானது அல்ல.
விபர்யயம் ப்ரமாணமாகாதா? (ஆகாது), ஏனெனில் அது ப்ரமாணத்தால் நிராகரிக்கப்படுகிறது. ப்ரமாணம் என்பது இருக்கும் பொருளைப் பற்றியது ஆகும். ப்ரமாணமல்லாதவை ப்ரமாணத்தால் நிராகரிக்கப்படுவது கண்கூடு. இரு நிலவுகளைப் பார்த்தேன் எனும் அறிவு, உண்மைப் பொருளாகிய ஒரே ஒரு நிலவினை அறியும் போது இல்லாமல் போகிறது.
இந்த அவித்யையானது ஐந்து நிலைகளைக் கொண்டது. அவித்யா1 அஸ்மிதா2, ராகம்3, த்வேஷம்4, அபினிவேஶம்5 ஆகிய ஐந்தும் க்லேஶங்கள் எனப்படுகின்றன. இந்த ஐந்திற்கும் தமஸ், மோஹம், மஹாமோஹம், தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம் எனும் பெயர்களும் உண்டு. சித்தத்தின் மலங்களைப் பற்றிய பகுதியில்6 இவை விவரிக்கப்படும்.

1 அழியும் பொருட்களை நிலையானவை என எண்ணுதல், இழிந்தவற்றை தூய்மையானவை என எண்ணுதல் என்பது போன்ற எதிர்மறையான கண்ணோட்டம்.

2 அறிபவனையும், அறியப்படுவதனையும் ஒன்றே என தவறாகப் புரிந்துகொள்ளுதல். புருஷனில் ப்ரக்ருதியின் குணங்களைப் பார்த்தல்.

3 பற்று

4 வெறுப்பு

5 உயிர்மேல் ஆசை

6 யோகஸூத்ரம் 2.3-2.--9

ஶப்தஜ்ஞாநாநுபாதீ வஸ்துஶூந்யோ விகல்ப: ॥ 9 ॥
விகல்பம் (கற்பனை) என்பது சொற்களின் அடிப்படையிலே மட்டும் ஏற்படும் வ்ருத்தியாகும். அச்சொற்கள் குறிப்பிடும் (விதத்தில்) பொருட்கள் உண்மையில் (உலகிலெங்குமே) இருக்காது.
இது ப்ரமாணங்களிலும்1 சேராது, விபர்யயத்திலும்2 சேராது. பொருள் இல்லையெனிலும் சொற்பிரயோகம் உண்டாக்கும் (கற்பனையான பொருள் பற்றிய) அறிவினை அடிப்படையாகக் கொண்டு பேசும் வழக்கம் உள்ளது.
சைதன்யம் (உணர்வு) புருஷனுடைய உண்மை இயல்பு’ என்பது போல. சைதன்யமே தான் புருஷன் எனும் போது, புருஷனையும் சைதன்யத்தையும் (இவை இரண்டும் இரு வேறு பொருட்கள் அல்ல எனும் போது) தொடர்பு படுத்திக் கூறுவது எப்படி? ‘சைத்ரனுடைய பசு’ எனும் வாக்கியத்தில் அது சாத்தியம். (சைத்ரனும் அவனுடைய பசுவும் வேறு வேறு என்பதனால்)
(த்ருஶ்ய) பொருட்களின் குணாதிசயங்கள் அற்றவன், செயல்கள் அற்றவன் புருஷன் (த்ரஷ்டா) எனும் வாக்கியத்திலும் அவ்வாறே (இந்த வாக்கியமும் விகல்ப-வ்ருத்தியைத்தான் ஏற்படுத்தும்.) 3
பாணன் நிற்கிறான், நிற்பான், நின்றான் எனும் வாக்கியத்தில் வேர் சொற்பொருளான ‘செல்லுதல் இல்லாமை’ மட்டுமே புலப்படுகிறது.4 அதே போலத்தான் ‘பிறப்பற்றவன் புருஷன்’ எனும் சொற்றொடரும். இவ்வாக்கியத்தால் பிறப்பின்மை மட்டுமே புலப்படுகிறது. இதனால், (பிறப்பின்மை எனும்) குணாதிசயம் புருஷனில் இருப்பதாக ஆவதில்லை. ஆனாலும் இந்த விகல்பம் எனும் வ்ருத்தியினால் அந்த குணாதிசயம் புருஷனிடம் இருப்பது போலத் தோன்றுகிறது. ஆகையால் சொற்றொடரின் பிரயோகமும் உள்ளது.

1 ப்ரமாணம் என்பது இருக்கும் பொருளை பற்றியது. விகல்ப வ்ருத்தி இல்லாத ஒரு பொருளைப் பற்றியது (உதா.- முயற்கொம்பு)

2 இது விபர்யயத்திலும் சேராது. தவறான அறிவு என தெரிந்த பின் ஒரு பொருள் தவறாகவே குறிப்பிடப்படுவதில்லை. சிப்பியினை தவறாக வௌ்ளி என ஒருவர் அறிகிறார். வெயில் பிரதிபலிப்பினால் அவ்வாறு தோன்றியது எனத் தெரிந்த பின் அது சிப்பி என கூறுவாரே தவிர மீண்டும் அதனை வௌ்ளி எனக் கூறமாட்டார். ஆனால் தவறான அறிவெனத் தௌிந்த பிறகும் அதை அவ்வண்ணமே கூறுதல் விகல்பமாகும். முயற்கொம்பு, ஆகாயத்தாமரை என்பன இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் இவை இவ்வாறே பேச்சு வழக்கில் இருப்பதைக் காணலாம். ஆகையால் தான் இது விபர்யயத்தில் சேராது.

3" புருஷனிடம் செயல்கள் இல்லாமை (அபாவம்) எனும் குணாதிசயம் இருக்கிறது' என்பது இவ்வாக்கியம் வௌிப்படுத்தும் பொருளாகும். இதுவும் விகல்பமே. ஏனெனில் ஸாங்க்ய தத்துவ கொள்கைப்படி ‘இல்லாமை‘ (அபாவம்) என்பது இருக்க (பாவம்) முடியாது. ஆகையால் செயல்கள் இல்லாமை புருஷனிடம் இருக்கிறது எனும் இவ்வாக்கியம் (வஸ்து ஶூன்யம் ஆகையால்) விகல்பமே ஆகும்.

4 விகல்பத்திற்கு இது இன்னொரு உதாரணம். இவ்வாக்கியத்தில் பாணன் என்பவனிடம் செல்லுதல் இல்லாமை இருக்கிறது, இருக்கும், இருந்தது எனக் கூறுவதும் முன்னர் கூறிய எடுத்துக்காட்டு போல இல்லாமை இருக்கிறது எனக் கூறுவதன் மூலம் விகல்பம் ஆகிறது. இவ்வாக்கியத்தில் மேன்மேலும் விகல்பங்கள் உள்ளன. இல்லாமை இருக்கிறது என்பதே விகல்பம் ஆகும் போது அது பாணனிடம் உள்ளது. அதனை பாணன் நிகழ்காலம், எதிர்காலம், இறந்தகாலம் ஆகியவைகளில் செய்பவன் ஆகிறான் என்பவை தொடர்ச்சியாக சகஜமாக எவ்வாறு அன்றாட பேச்சு வழக்கில் விகல்பம் எனும் வ்ருத்தி உள்ளது என்பதனை தௌிவாக எடுத்துகாட்டுகிறது. ஆகையால் விகல்பம் என்பது ப்ரமாணத்திடமிருந்தும், விபர்யயத்திடமிருந்தும் மாறுபட்ட ஒரு வ்ருத்தியாகும்.

அபாவப்ரயயாலம்பநா வ்ருத்திர்நித்ரா ॥ 10 ॥
(விழிப்பு நிலை, கனவுநிலை ஆகியவை) இல்லாமல் போவதற்கான காரணத்தை (தமோ-குணத்தை) பற்றிக் கொண்டு எழும் வ்ருத்தி நித்ரா ஆகும்.
அது (நித்திரை) பற்றிய எண்ணம் விழித்தெழும் போது மனதில் தோன்றுவதால் (நித்திரை) ஒரு வ்ருத்தியாகும். எப்படி ?
சுகமாக உறங்கினேன். மனது மகிழ்வுடன் உள்ளது. எனது அறிவு தௌிந்தும், விரிந்தும் உள்ளது.
மிகவும் துன்பத்துடன் உறங்கினேன். மனது செயலற்று உள்ளது. அது நிலை கொள்ளாமல் சுழல்கிறது.
மிகவும் ஆழமாக, ஒன்றும் அறியாமல் உறங்கினேன். உடலின் அங்கங்கள் கனக்கின்றன. மனம் சோர்வுடன் உள்ளது. அது சோம்பேறித்தனமாகவும், செயலற்றும் உள்ளது (என்பது போன்ற நினைவுகள் தோன்றுகின்றன).
(விழிப்பு, கனவு ஆகியவை இல்லாமல் போவதற்கான) காரணம்1 அனுபவத்திற்கு வராமல் போயிருந்தால் அது (அந்நிலையில் ஏற்பட்ட அனுபவம்) பற்றி நினைவு கூர்தல் எவ்வாறு சாத்தியமாகும், அவ்வனுபவங்களைப் பற்றிய நினைவுகளும் எவ்வாறு சித்தத்தில் இருக்கும்?
ஆகையால் ‘நித்ரா’ என்பது ஓர் வ்ருத்தியாகும். ஸமாதி நிலையை அடையவேண்டுமெனில் அதுவும் ஒடுக்கப்பட வேண்டும்.

1 தமோகுணம் பொருந்திய நித்ரா எனும் வ்ருத்தி

அநுபூதவிஷயாஸம்ப்ரமோஷ: ஸ்ம்ருதி: ॥ 11 ॥
(சித்தத்தினால் முன்பு) அறிந்த விஷயத்தை அறிந்த விதமே மீட்டு அளிக்கும் வ்ருத்தி ஸ்ம்ருதி எனப்படும்.
சித்தம் எதை நினைவில் வைத்துக்கொள்கிறது? (ஒரு பொருளைப் பற்றிய) அறிதல் எனும் செயலினையா? (அந்தப்) பொருளையா?2 அறியப்படும் பொருளின் பிரதிபலிப்பினைக் கொண்ட அறிவில் அறிதல், அறியப்படும் பொருள் ஆகிய இரு அம்சங்களும் இருக்கும். ஆகையால், அதனைப் போலவே (இவ்விரு அம்சங்கள்) உள்ள பதிவினை (ஸம்ஸ்காரத்தை) உருவாக்குகிறது.
அந்த ஸம்ஸ்காரம், அது உருவாகக் காரணமான (இரு அம்சங்கள்) கொண்ட அறிவினை ஒத்தது. ஆகையால் அறியப்படும் பொருள், அறிதல் ஆகிய இரு அம்சங்கள் கொண்ட நினைவினை உருவாக்குகிறது. அறிதல்3 எனும் செயலைப் பிரதானமாகக் கொண்டது புத்தி எனப்படுகிறது.
அறியப்படும் பொருளைப் பிரதானமாகக் கொண்டது ஸ்ம்ருதி ஆகும்.
ஸ்ம்ருதி இருவகைப்படும் - கற்பனையான நினைவு, கற்பனையற்ற நினைவு என்று. கனவு நிலையில் கற்பனையான நினைவுகள் தோன்றும். விழித்திருக்கையில் கற்பனையற்ற நினைவுகள் தோன்றும்.
இந்த எல்லா ஸ்ம்ருதிகளுமே ப்ரமாண-விபர்யய-விகல்ப-நித்ரா-ஸ்ம்ருதி ஆகிய வ்ருத்திகளினால்தான் தோன்றுகின்றன. இந்நினைவுகள் அனைத்தும் சுகம் (இன்பம்) , துக்கம் (துன்பம்) , மோஹம் (அஞ்ஞானம்) ஆகியவை கூடியது தான். சுகம், துக்கம், மோஹம் ஆகியவை பற்றிய விளக்கங்கள் க்லேஶங்களைப்4 பற்றிய பகுதியில் காணலாம். இன்பத்தைத் தொடர்ந்து ஏற்படுவது பற்று (ராகம்). துன்பத்தை தொடர்ந்து ஏற்படுவது வெறுப்பு (த்வேஷம்), மோஹம் என்பது அவித்யை ஆகும்.
இந்த வ்ருத்திகள் அனைத்துமே ஒடுக்கப்பட வேண்டும். இந்த வ்ருத்திகள் ஒடுக்கப் பட்டால் ஸம்ப்ரஜ்ஞாத-ஸமாதியோ அல்லது அஸம்ப்ரஜ்ஞாத-ஸமாதியோ ஏற்படும்.5

1 ஸம்ப்ரமோஷம் என்றால் திருடுதல் என்று பொருள். ‘அஸம்ப்ரமோஷ’என்ற சொல்லுக்கு திருடாமை என்பது பொருளாகும். பாஸ்வதி, தத்வ-வைஶாரதி ஆகிய உரைகள் இதனைப் பின் வருமாறு விளக்குகின்றன - மாற்றான் செல்வத்திற்கு ஆசைப்படுதல் திருட்டாகும் (ஸம்ப்ரமோஷ:). அவ்வாறு இல்லாமல் இருப்பது திருடாமை (அஸம்ப்ரமோஷ). இதனோடு ஒத்தாற்போல் கருத்துக்கள் இருப்பதனால் ஸ்ம்ருதி பற்றிய ஸூத்ரத்தில் ‘அஸம்ப்ரமோஷ’ எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பொருள் அறியப்பட்ட போது அது பற்றி எந்தெந்த விஷயங்கள் உள்வாங்கப்பட்டனவோ அவற்றை மட்டுமே (ஸம்ஸ்காரங்களிலிருந்து மீட்டு) அளிக்கும் வ்ருத்தி ஸ்ம்ருதியாகும். வேறு அனுபவங்கள் ஏற்படுத்திய பதிவுகள் (மாற்றான் செல்வம்) இந்த வ்ருத்தியில் இல்லை என்பதனால் ஸ்ம்ருதி எனும் வ்ருத்தியினை விளக்குகையில் அஸம்ப்ரமோஷ எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது.

2 ஸ்ம்ருதி எனும் வ்ருத்தி குடம் எனும் பொருளை நினைவுபடுத்தும் போது குடம் எனும் பொருளை மட்டும் நினைவு படுத்துகிறதா அல்லது குடம் பற்றி முன்பு ஏற்பட்ட அறிவினையும் நினைவிற்கு கொண்டுவருகிறதா? என்பது கேள்வியின் பொருள். ஸ்ம்ருதி இவ்விரண்டையுமே நினைவு படுத்துகிறது எனும் கருத்தைத் தெரிவிக்க இந்தக் கேள்வியை எழுப்புகிறார் வ்யாஸர் என்பதாக பாஸ்வதி, யோகவார்த்திகம் ஆகிய உரைகளில் விளக்கம் அளிக்கப்படுகிறது.

3 முன்பே அறியப்பட்ட பொருள் மீண்டும் அறியப்படுவதில்லை. அது நினைவிற்கு வருகிறது எனப்படுகிறது. ஆகையால் அறிதல் என்பது ஸ்ம்ருதியில் பிரதானமானது அல்ல. அது புத்தியில் (முதல் முறை ஒரு பொருளினை அறிதல்) பிரதானமாகிறது.

4 யோகஸூத்ரம் 2.3-2.9

5 இந்த வ்ருத்திகள் அனைத்தும் ஒடுக்கப்பட்டு ஒரு தியான-விஷயத்தை பற்றி சித்தம் திருப்பப்பட்டால் ஸம்ப்ரஜ் ஞாத-ஸமாதி. எந்த வித வ்ருத்திகளுமே இல்லாமல் போகும்படி யோகப் பயிற்சி செய்தால் அஸம்ப்ரஜ் ஞாத-ஸமாதி ஏற்படும்.

இவைகளை (வ்ருத்திகளை) ஒடுக்கும் உபாயம் தான் என்ன ?
அப்யாஸவரைாக்யாப்யாம் தந்நிரோத: ॥ 12 ॥
பயிற்சியினாலும், பற்றின்மையாலும் அவற்றை (மேற்கூறிய ஐவகை வ்ருத்திகள்) ஒடுக்கலாம்.
அப்யாஸத்தினாலும் (பயிற்சி) வைராக்யத்தினாலும் (பற்றின்மை) வ்ருத்திகளை ஒடுக்கலாம். சித்தம் எனும் நதியானது இருவழிப் பிரவாகம் கொண்டது. அது நன்மையை நோக்கிப் பெருகுகிறது. தீமையை நோக்கியும் பாய்கிறது. கைவல்யத்தில் (வீடுபேறு) நாட்டத்துடன் தௌிந்த அறிவுடன் பெருகுவது புண்ணியப் பிரவாகம். உலக வாழ்வில் நாட்டத்துடன் தௌிவற்ற அறிவுடன் பாய்வது பாவத்தை அளிக்கும் பிரவாகம்.
வைராக்யத்தினால் (புறஉலக) விஷயங்களை நோக்கிய பிரவாகத்திற்கு அணை போடப்படுகிறது. (புருஷனும் புத்தியும்1 வேறு வேறு என்ற) தௌிந்த அறிவினை பயிற்சி (அப்யாஸம்) செய்வதனால் விவேகம் எனும் மடை திறக்கப்படுகிறது. ஆகையால் இவ்விரண்டும் (பயிற்சி, பற்றின்மை) இருந்தால் தான் சித்தத்தின் வ்ருத்திகளை ஒடுக்க இயலும்.
படம் 4:
நிரோதம்
அப்யாஸம் வைராக்யம்

1 சித்தம் தான் புத்தி.

தத்ர ஸ்திதௌ யத்நா(அ)ப்யாஸ: ॥ 13 ॥
அவ்விரண்டிடையே - மனதை அமைதிப்படுத்தும் முயற்சியே பயிற்சி (அப்யாஸம்).
வ்ருத்திகளற்ற சித்தத்தின் அமைதியான ஆற்றொழுக்கு ஸ்திதி (நிலைகொள்ளுதல் எனப்படும்). அதற்காக செய்யப்படும் பிரயத்னம் -- (முயற்சி) என்பது ஆற்றல், உற்சாகம் பொருந்தியதாக இருக்கும். அந்நிலையை (ஸ்திதியை) எய்தும் விருப்பத்துடன் அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுதல் அப்யாஸமாகும்.
ஸ து தீர்ககாலநரைந்தர்யஸத்காராஸவேிதோ த்ருடபூமி: ॥ 14 ॥
அது (அப்யாஸமானது) நெடுங்காலம், இடைவிடாமல், பெருமதிப்புடன் விடாமுயற்சியுடன் செய்யப்படுமாயின் திடமானதாகிவிடும்.
விடாமுயற்சியுடன் நெடுங்காலம் பயிற்சி, இடைவிடாத பயிற்சி, தவத்தாலும், பிரம்மச்சரியத்தாலும், சிரத்தையாலும் ஏற்படும் பெருமதிப்புடன் கூடிய பயிற்சி திடமானதாகிவிடும். புறஉலக எண்ணங்களைத் தூண்டும் ஸம்ஸ்காரங்களால் எளிதில் அடக்கி ஆட்கொள்ள முடியாததாகிவிடும் இப்படிப்பட்ட அப்யாஸம் -- என்பது (இந்த ஸூத்ரத்தின்) பொருள்.
த்ருஷ்டாநுஶ்ரவிகவிஷயவித்ருஷ்ணஸ்ய வஶீகாரஸம்ஜ்ஞா வரைாக்யம் ॥ 15 ॥
இவ்வுலக இன்பங்களிலும், அவ்வுலக இன்பங்களிலும் நாட்டமற்றவருக்கு வஶீகாரம்1 எனும் பெயருடைய வைராக்யம் (பற்றின்மை) ஏற்படும்.
பெண்கள், உணவு, செல்வம் ஆகிய கண்கூடான (இவ்வுலக) இன்பங்களிலும், சுவர்க்கம், விதேஹ நிலை2, ப்ரகிருதி-லயம்3 ஆகியவைகளை அடைதல் போன்ற வேதங்களில் கூறப்பட்டுள்ள விஷயங்களிலும் ஆசையற்றவராக இருக்கின்றவருக்கு (வைராக்யம் ஏற்படும்). புலனின்பங்கள் குறைபாடுகள் கொண்டவை என தௌிந்த அவருக்கு லௌகிக, தெய்விக சுகபோகத்திற்கான பொருட்களுடன் தொடர்பு ஏற்பட்டாலும், இந்த அறிவுத்தௌிவின் பலத்தால், புலன் நுகர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட, விருப்பு வெறுப்புகளைக் கடந்த வஶீகாரம் எனும் பெயருடைய வைராக்யம் (பற்றின்மை) ஏற்படும்.

1 பற்றின்மை (வைராக்யம்) நான்கு நிலைகள் கொண்டது. அவை - யதமான, வ்யதிரேக, ஏகேந்த்ரிய, வஶீகார என்பனவாகும். யதமான-நிலை என்பது - பற்றினைz துறக்க மேற்கொள்ளப்படும் (துவக்க) முயற்சியைக் குறிக்கிறது. வ்யதிரேக-நிலை - சில பொருட்கள் விஷயத்தில் பற்றின்மை ஏற்பட்டுவிட்டது. இன்னும் சில விஷயங்களில் பற்று உள்ளது என பாகுபடுத்தி உணர்தலைக் குறிக்கிறது. ஏகேந்த்ரிய-நிலை- பற்று மெலிந்து போய் மனதில் மட்டும் ஓர் ஆவலாக இருப்பதைக் குறிக்கிறது. வஶீகார-நிலை - அப்படி மனதில் ஆவலாக இருக்கும் பற்றும்கூட அழிந்தொழிந்துவிடும் உன்னதமான நிலையினை இது குறிக்கிறது.

2 சிலர் பஞ்ச-பூதங்களையோ அல்லது புலன்களையோ இது தான் ‘ஆத்மா ’ (உண்மைப்பொருள்) என உபாசிப்பார்கள். மரணத்திற்கு பின் அவர்கள் உபாசித்த பொருளிலேயே ஒன்றிவிடுவார்கள். அவர்கள் மனதில் முற்பிறவிகளின் பதிவுகள் மட்டும் இருக்கும். அவர்களுக்கு உடல் இருக்காது. அவர்களது உபாசனையின் பலன் தீர்ந்து போகும் வரை பல காலம் வீடுபேறு போன்ற நிலையில் அவர்கள் இருப்பார்கள். அதன் பின்னர் மீண்டும் பிறவி எடுப்பார்கள். இவர்கள் விதேஹர்கள் எனப்படுவார்கள்.

3 த்ருஶ்ய-உலகின் மூலகாரணமான ப்ரக்ருதியையோ அல்லது அதனிடமிருந்து தோன்றிய ஆதார தத்துவங்களான மஹத், அஹங்காரம், பஞ்ச-மாத்ரங்கள் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றினையோ உபாசித்து மரணத்திற்கு பின் அதனுடன் ஒன்றிவிடுவார்கள். இவர்களும் கூட தங்களது உபாசனையின் பலன் தீர்ந்து போகும் வரை பல காலம் வீடுபேறு போன்ற நிலையில் இருப்பார்கள். அதன் பின்னர் மீண்டும் பிறவி எடுப்பார்கள்.

தத்பரம் புருஷக்யாதரே்குணவதே்ருஷ்ண்யம் ॥ 16 ॥
புருஷனுடைய உண்மை இயல்பை உணர்வதனால் குணங்களில் (ஸாதகனுக்கு ) ஏற்ப திதிதிதிதிதிதிதிதிதிதிதிதிதி டும் பற்றின்மை தான் மிக உயர்ந்ததாகும்.
கண்கூடான பலன்களிலும், வேதங்களில் கூறப்படும் பலன்களிலும் குறைபாடு1 காண்பவர் பற்றற்றவர் ஆகிறார். அவர் புருஷனை நேரிடையாக உணர்கிறார். இந்த உணர்தலின் பயிற்சியினால் புருஷன் வேறு (ப்ரக்ருதி வேறு) எனத் தௌ்ளத் தௌிவாக அறிகிறார். அதனால் அவரது புத்தி மகிழ்ச்சி அடைகிறது. இப்படிப்பட்டவர் வௌிப்படையாகத்2 தெரியக்கூடிய, வௌிப்படையாக தெரியாத (நுண்ணிய) குணங்களில் பற்றினை இழக்கிறார். இவ்விரண்டும் வைராக்யம்தான்.
அவ்விரண்டில் இரண்டாவது (அப்பழுக்கற்ற) அறிவுத் தௌிவு மட்டுமே ஆகும். இதனை அடைந்தவர் பின்வருமாறு எண்ணுகிறார் - ‘அடைய வேண்டியது அடையப்பட்டுவிட்டது. தீர்ந்து போக வேண்டிய க்லேசங்கள் (துன்பங்கள்) தீர்ந்தன. இறுகிய (கர்மவினைகள் எனும்) முடிச்சுகள் கொண்ட உலகயாத்திரை அழிந்தொழிந்தது. இது இருப்பதனாலன்றோ பிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும் ஏற்படுகின்றது.’ ஞானத்தின் மிக உன்னத நிலைதான் வைராக்யம். இவ்வைராக்யத்திற்கு அடுத்தபடியாக உடனடியாக கைவல்யம் (வீடுபேறு) ஏற்பட்டு விடுகிறது.

1 கண்கூடான சுகபோகங்கள் , வேதங்களில் கூறப்படும் யாகங்களினால் ஏற்படும் சுவர்க்கத்தை அடைதல்- போன்றவை, குறுகிய காலத்திற்கு மட்டுமே இன்பத்தை அளிக்கவல்லவை. இதுதான் குறைபாடு.

2 குணங்கள் எனும் சொல் இங்கு ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகியவைகளைக் குறிக்கிறது. இவ்வுலகிலும் மேலுலகிலும் இக்குணங்களின் (மகிழ்ச்சி, கோபம், சோம்பல் போன்ற) செயல்பாடுகள் வௌிப்படையாக அறியப்படுகின்றன . ஓரு யோகி இந்த நிலையிலும் குணங்களின் செயல்பாடுகளில் பற்றற்றவராக இருக்கிறார். ஆனால் விதேகம், ப்ரக்ருதி-லயம் போன்ற நிலைகளை அடைந்தவர்களிலும் இந்த மூன்று குணங்கள் இருந்தாலும், அந்த நிலையின் நுண்ணிய தன்மையினால் அக்குணங்களின் செயல்பாடுகள் வௌிப்படையாக அறியப்படுவதில்லை . யோகி இந்த நிலையிலும் குணங்களின் மீது பற்றறவராக இருக்கிறார்

மேற்கூறிய இரு உபாயங்களால் சித்த-வ்ருத்திகள் ஒடுக்கப்படுவதனால் ஸம்ப்ரஜ்ஞாத-ஸமாதி எவ்வாறு ஏற்படுகிறது எனக் கூறப்படுகிறது? ---
விதர்கவிசாராநந்தாஸ்மிதாரூபாநுகமாத்ஸம்ப்ரஜ்ஞாத: ॥ 17 ॥
விதர்க்கம், விசாரம், ஆனந்தம், அஸ்மிதா ஆகியவை கூடியது ஸம்ப்ரஜ்ஞாதம்.
தியானிக்கப்படும் பொருளின் தூலமான1 வடிவத்தில் மனதினை நிலைநிறுத்துதல் விதர்க்கமாகும். தியானிக்கப்படும் பொருளின் நுண்ணிய2 வடிவத்தில் மனதினை நிலைநிறுத்துதல் விசாரமாகும். மகிழ்ச்சி3 தான் ஆனந்தம். ஒன்று4 என்ற உணர்வு அஸ்மிதா ஆகும்.
ஸம்ப்ரஜ்ஞாத- ஸமாதிகளில் முதலாவது ஸவிதர்க்கம் எனப்படும். இந்த ஸமாதியில் விதர்க்கத்திலிருந்து துவங்கி அஸ்மிதா வரையில் அனைத்து அனுபவங்களும் (படிப்படியாக) ஏற்படும். இரண்டாவதான ஸவிசார ஸமாதியில் விசாரத்திலிருந்து துவங்கி அஸ்மிதா வரையிலான அனுபவங்கள் ஏற்படும். (தூலமான) விதர்க்கத்தின் அனுபவம் இந்நிலையில் ஏற்படாது. மூன்றாவதான ஸானந்த ஸமாதியில் ஆனந்தம் அஸ்மிதா ஆகிய அனுபவங்கள் மட்டுமே ஏற்படும். (வௌியுலகப் பொருட்களைப் பற்றிய விதர்க்கம் ) விசாரம் (ஆகிய இரண்டும்) இருக்காது. அஸ்மிதா மட்டும் நான்காம் ஸமாதியில் இருக்கும். இந்த ஸமாதிகள் அனைத்துமே ஏதேனும் ஒரு (எண்ணத்தின்/தியானத்திற்கான பொருளின்) பிடிப்பின் உதவியோடுதான் ஏற்படுகின்றன.
படம் 5 விதர்க்கம்
விசாரம்
ஆனந்தம்
அஸ்மிதா

1 தூலமான வடிவம் என்பது பஞ்ச-பூதங்கள் (நிலம். நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) , பத்து புலன்கள் (கர்மேந்த்ரியங்கள் (5) - பேச்சு, கைகள், கால்கள், மலம், மூத்திரம் வௌியேற்ற துவாரங்கள் இரண்டு. ஞானேந்த்ரியங்கள் (5) - பார்த்தல், (காதால்) கேட்டல், சுவைத்தல், (மூக்கினால்) நுகர்தல் தொடுவுணர்வு ஆகியவற்றிற்கான திறன்கள்.) , மற்றும் மனது ஆகியவை கூடிய 16 உலகின் கட்டுமான பொருட்களால் ஆனது. தியானிக்கும் பொருளில் இவற்றின் வௌிப்பாட்டினை முழுமையாக உணர்வது விதர்க்கமாகும். ஒரு ‘பூ’ தியானிப்பதற்கான விஷயமானால் அந்தப் பூ இந்தப் பதினாறு பொருட்களால் ஆனது என உன்னிப்பாக கவனித்து உணர்தல் விதர்க்கமாகும்..

2 மேற்கூறிய 16 பொருட்கள் உண்டாகக் காரணமான ஐந்து தன்மாத்ரங்கள் ,அஹங்காரம், மஹத், ப்ரக்ருதி ஆகியவை பற்றி தியானித்தல் விசாரமாகும். உலகம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச-பூதங்களால் ஆனது. பொருட்கள் குணங்களால் ஆனது. இந்த பஞ்ச-பூதங்களுக்கு குணங்கள் உண்டு. நிலத்திற்கு வாசனை, சுவை, வடிவம், தொடுஉணர்வு, ஒலி ஆகியவை குணங்களாகும். அவற்றுள் வாசனை என்பது நிலத்தின் தனிச் சிறப்பான குணமாகும். நீர், சுவை, வடிவம், தொடுஉணர்வு , ஒலி ஆகிய நான்கு குணங்கள் கொண்டதாகும். நெருப்பு - வடிவம், தொடுஉணர்வு, ஒலி ஆகிய மூன்று குணங்கள் கொண்டதாகும். காற்று - தொடுஉணர்வு, ஒலி ஆகிய இரண்டு குணங்கள் கொண்டதாகும். ஆகாயம் ஒலி எனும் ஒரே ஒரு குணம் கொண்டதாகும். அதாவது நிலம் முதலிய பஞ்ச-பூதங்கள் என்பது வாசனை, சுவை, வடிவம், தொடுஉணர்வு, ஒலி ஆகிய அணுக்களால் ஆனது என்பது இதன் பொருள். இந்த வாசனை முதலிய ஐந்தும் தான் தன்மாத்ரங்கள் எனக் கருதப்படுகின்றன. இது தன்மாத்ரம் பற்றிய எளிய விளக்கமாகும். இந்த தன்மாத்ரங்கள் அஹங்காரம் எனும் தத்துவத்திலிருந்து உண்டாகின்றன. அஹங்காரம் மஹத் எனும் தத்துவத்திலிருந்து உருவாகிறது. மஹத் ப்ரதானம் /ப்ரக்ருதியிலிருந்து உண்டாகிறது. ப்ரக்ருதி தான் அனைத்திற்கும் மூல காரணமாகும். இது உலகக் கட்டமைப்பு பற்றி யோகஸூத்ரங்கள் ஏற்கும் ஸாங்க்ய கருத்தாகும்.

3 சித்தம் விசாரநிலையை அடைவதனால் மனதில் ஸத்வகுணம் ஓங்குகிறது. அதனால் மனதில் மகிழ்வு ஏற்படுகிறது. அந்த மகிழ்வில் மனதை நிலை நிறுத்துதல் ஆனந்த நிலையாகும். - வார்த்திகம். விதர்க்கம் விசாரம் ஆகிய நிலைகளில் மனது தியானிக்கப்படும் பொருளை ஆராய்கிறது. இதற்கு அடுத்த நிலையான ஆனந்த நிலையில் தியானிக்கப்படும் பொருளிலிருந்து கவனம் தியானத்திற்கு உபகரணமான மனதை நோக்கி நகர்கிறது. மனதில் தியானத்தால் உண்டாகும் மகிழ்வு தியானப்பொருளாகிறது. - தத்வவைஶாரதி

4 அஸ்மிதா நிலையில் தியானத்தின் பொருளான ‘ஆனந்த’த்திலிருந்து தியானத்தைச் செய்பவரான புருஷனை நோக்கி கவனம் நகர்கிறது. ‘ஒன்று’ எனும் சொல் தனியானது எனும் பொருளைக் கொடுக்கிறது. அது, உண்மையில் (ப்ரக்ருதியிலிருந்து)வேறான/தனியான புருஷனைக் குறிக்கிறது. இந்த அஸ்மிதா நிலையில் புருஷனின் தூய்மையான பிரதிபலிப்பு மட்டுமே ஸத்வகுணம் ஓங்கியிருக்கும் சித்தத்தில் இருக்கும். - வார்த்திகம்

அடுத்தபடியாக, அஸம்ப்ரஜ்ஞாத-ஸமாதியை அடைவதற்கு உபாயம் யாது? அதன் தன்மை தான் எவ்வாறானது ?
விராமப்ரத்யயாப்யாஸபூர்வ: ஸம்ஸ்காரஶஷேோ(அ)ந்ய: ॥ 18 ॥
விராம-ப்ரத்யயத்தின் (எண்ணங்களை ஓயவைக்கும்) பயிற்சியினால், ஸம்ஸ்காரங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் (அஸம்ப்ரஜ்ஞாதம் எனும்) ஸமாதி நிலை ஒன்று உள்ளது.
எல்லா வ்ருத்திகளும் அஸ்தமனமாகிய பின் ஸம்ஸ்காரங்கள் மட்டுமே மீதமுள்ள போது உள்ள சித்தத்தின் நிலையே அஸம்ப்ரஜ்ஞாதம் எனப்படும். மிகச் சிறந்த வைராக்யம் தான் அதை அடைவதற்கு உபாயமாகும்.
(தியானநிலை ஏற்படுவதற்கு ஏதேனும் ஒரு பிடிப்பு வேண்டும் என ஸம்ப்ரஜ்ஞாத நிலையினை விளக்கும் போது கூறப்பட்டது.) ஆனால் அஸம்ப்ரஜ்ஞாத நிலையை அடைய ஏதேனும் ஒரு பிடிப்பின் உதவியோடு செய்யப்படும் பயிற்சி வழி வகுக்காது.
ஆகையால் அஸம்ப்ரஜ்ஞாத நிலையை அடைய விராம-ப்ரத்யயம்1 தான் வழி. அந்த எண்ணத்தில் (தூய்மையான புருஷனின் பிரதிபலிப்பைத் தவிர வேறு) பொருளேதும் இருக்காது.
அந்த எண்ணத்தின் பயிற்சியினால் சித்தம் உதவியேதும் இல்லாமல், ‘தான் இல்லாமல் போய்விட்டது’ போன்ற நிலையை அடையும். இந்த நிர்பீஜ-ஸமாதி2 நிலை தான் அஸம்ப்ரஜ்ஞாதம் எனப்படுகிறது.

1 விராமம் எனும் சொல்லுக்கு ஓய்வு என்பது பொருள். ப்ரத்யயம் என்பதன் பொருள் எண்ணம் என்பதாகும். புலன்களாலும், மனதாலும் கிரகித்து தரப்படும் பொருட்கள் இங்கு இருக்காது. அவை ஓய்ந்து விடும். ஆனால் த்ரஷ்டாவாகிய புருஷனின் தூய்மையான வடிவத்தின் பிரv பலிப்பு அந்த எண்ணத்தில் இருக்கும்.

2 பீஜம் என்ற சொல்லுக்கு விதை என்பது நேரிடையான பொருள். இச்சொல்லுக்கு வாசஸ்பதி மிஶ்ரர் - க்லேஶம், முன்செய்த கர்மவினைகள் உருவாக்கிய பதிவுகளின் கிடங்கு (ஆஶயம்) என்பது பொருளாகும் எனக் கருதுகிறார்.

இந்த ஸமாதி உபாய-ப்ரத்யயம், பவ-ப்ரத்யயம் என இரு வகைப்படும்.
யோகிகளுக்கு உபாய-ப்ரத்யயமானது ஏற்படும் (அடுத்து வருகின்ற ஸூத்ரங்களில் கூறப்படும் ஶ்ரத்தா முதலிய உபாயங்களால் ஏற்படும் அஸம்ப்ரஜ்ஞாத-ஸமாதி உபாய-ப்ரத்யயம் ஆகும்) .
பவப்ரயயோ விதஹேப்ரக்ருதிலயாநாம் ॥ 19 ॥
விதேஹர்களும், ப்ரக்ருதி-லயர்களும் அடையும் அஸம்ப்ரஜ்ஞாத-ஸமாதிக்கு காரணம் (ப்ரத்யயம்) (வைராக்யத்தினால் ஏற்படும்)
ஸம்ஸ்காரங்கள் (பவ) ஆகும்.
விதேஹ-நிலையை1 அடைந்த தேவர்களுக்கு ஏற்படும் அஸம்ப்ரஜ்ஞாத-ஸமாதி பவ-ப்ரத்யயம்2 எனப்படுகிறது. இவர்கள் தங்கள் (வைராக்ய3) ஸம்ஸ்காரத்தால் தங்கள் சித்தத்தின் வழியே கைவல்யம் (வீடுபேறு) போன்ற நிலையில் இருந்துகொண்டு, அதற்கு தகுந்தகாலம் வரை (ஸமாதியின்) பலனை அனுபவிப்பார்கள்.
ப்ரக்ருதி-லயம்4 ஆனவர்களும்கூட வினைப்பயன்கள் முற்றுப் பெறாமலேயே ப்ரக்ருதியில் ஒன்றியிருக்கும் சித்தத்தினால் கைவல்ய-நிலை போன்ற ஸமாதியை அனுபவிப்பார்கள். அவர்களுடைய சித்தம் புற உலக எண்ணங்களுக்குத் திரும்பும் வரை அந்நிலையில் அவர்கள் நீடிப்பார்கள்.

1 இதற்கான விளக்கம் 15வது ஸூத்ரத்தின் அடிக்குறிப்பில் உள்ளது.

2 வியாஸரின் கூற்றுப்படி பவ - என்றால் (வைராக்யத்தினால் ஏற்பட்ட) ஸம்ஸ்காரங்கள் என்று பொருள். ப்ரத்யயம் என்றால் காரணம் என்று பொருள். எந்த ஸமாதிநிலைக்கு பவம் காரணமோ அந்த ஸமாதி பவ-ப்ரத்யயம் எனப்படுகிறது.

3 இவர்களது வைராக்யம் புருஷனை அடையும் குறிக்கோள் கொண்டதாக இருக்காது. இவர்கள் புறஉலகப் பொருட்களிலிருந்து மனதை விடுவித்து மனதை ப்ரக்ருதியிடமோ, ஐம்பூதங்களிலோ, புலன்களிலோ செலுத்துவார்கள்.

4 இதற்கான விளக்கமும் 15வது ஸூத்ரத்தின் அடிக்குறிப்பில் உள்ளது.

ஶ்ரத்தாவீர்யஸ்ம்ருதிஸமாதிப்ரஜ்ஞாபூர்வக இதரஷோம் ॥ 20 ॥
மற்றவர்களுக்கு (யோகப்பயிற்சி செய்துவருபவர்களுக்கு) ஶ்ரத்தா, வீர்யம், ஸ்ம்ருதி, ஸமாதி, ப்ரக்ஞா ஆகிய (உபாயங்களால்) அஸம்ப்ரஜ்ஞாத-ஸமாதி ஏற்படுகிறது.
யோகிகளுக்கு உபாயங்களினால் ஸமாதி ஏற்படும். ஶ்ரத்தா என்பது (ப்ரக்ருதி வேறு புருஷன் வேறு எனும் விவேகத்தை அடைய) சித்தத்தில் இருக்கும் தீவிரமான ஆசையைக் குறிக்கிறது. தாயைப் போன்ற மங்களகரமான ஶ்ரத்தை யோகியைக் காக்கிறது.
ஶ்ரத்தையுடன் விவேகத்தை நாடுபவருக்கு ஆற்றல் (வீர்யம்) உண்டாகிறது. அப்படி ஆற்றல் பெற்றவருக்கு ‘ஸ்ம்ருதி’ (முன்னர் குருவிடம் பயின்ற ஆன்மாவைப் பற்றிய கல்வி, ஆன்மாவைப் பற்றிய வேதக்கருத்துக்கள்ஆகியவை பற்றிய நினைவு) உண்டாகிறது. ஸ்ம்ருதி இருக்கும் போது சஞ்சலம் இன்றி சித்தம் நிலைபெறுகிறது (ஸமாதி). ஸமாதியை அடைந்த சித்தத்தில் சிறந்த அறிவுத்தௌிவு (ப்ரஜ்ஞா) உண்டாகிறது. இப்படிபட்ட சித்தம் உள்ளது உள்ளபடி அறிகிறது. இத்தகைய அறிவினை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து, இவ்விஷயமான (உள்ளதை உள்ளபடி அறிதலினால் ஏற்படும்) வைராக்யத்தை வளர்த்துக் கொண்டால் அஸம்ப்ரஜ்ஞாத-ஸமாதி ஏற்படுகிறது.
இந்த நிலையை அடையும் யோகிகள் 9 வகைப்படுவர். முன் கூறப்பட்ட உபாயங்களை மென்மையாகவும் (ம்ருது) , மிதமாகவும் (மத்ய) , தீவிரமாகவும் (அதிமாத்ர) பயிற்சி செய்வதால் இது போன்ற வேறுபாடு உண்டாகிறது. மென்மையாக உபாயங்களை கையாள்பவர்கள், மிதமாக உபாயங்களை கையாள்பவர்கள், தீவிரமாக உபாயங்களைக் கையாள்பவர்கள் முதல் மூவர். அவர்களுள் மென்மையாக உபாயங்களை கையாள்பவர்கள் மூன்று வகைப்படுவார்கள். மென்மையாக முயற்சி செய்பவர்கள், மிதமாக முயற்சி செய்பவர்கள், தீவிரமாக முயற்சி செய்பவர்கள் என. இதே போல மிதமாக உபாயங்களை கையாள்பவர்களும், தீவிரமாக உபாயங்களைக் கையாள்பவர்களும் மும்மூன்று வகைப்படுவார்கள்.
படம் 6:
ம்ருது மத்ய அதிமாத்ர
அந்த தீவிரமான முயற்சியாளர்களில் -
தீவ்ரஸம்வகோநாமாஸந்ந: ॥ 21 ॥
தீவிரமாக முயற்சி மேற்கொள்பவர்களுக்கு வெகு விரைவில் (யோகம் பலன் அளிக்கும்)
(இவர்களுக்கு)ஸமாதி நிலையினை எய்துதல், அதன் பலன்களை அடைதல் ஆகியவை (வெகு விரைவில்) ஏற்படும்.
ம்ருதுமத்யாதிமாத்ரத்வாத்ததோ(அ)பி விஶஷே: ॥ 22 ॥
தீவிரமாக பயிற்சி செய்பவர்களிலும் ம்ருது, மத்ய, அதிமாத்ர என்ற நிலைகள் உண்டு என்பது கவனிக்கத்தக்கதாகும்.
தீவிரமாக உபாயங்களைக் கையாள்பவர்களும் மூவகைப்படுவார்கள் - மென்மையான தீவிர முயற்சியாளர், மிதமான தீவிர முயற்சியாளர், தீவிரமான தீவிர முயற்சியாளர் என. இம்மூவருள் முதலாமவருக்கு ஸமாதியின் பலன்கள் அருகாமையில் இருக்கும். இரண்டாமவருக்கு அதைவிட அருகாமையில் ஸமாதியின் பலன்கள் கிட்டும். மூன்றாமவருக்கோ மிக மிக அருகாமையில் ஸமாதியும் அதன் பலன்களும் ஏற்படும்.
ஸமாதி ஏற்பட இவை தான் மிகவும் நெருங்கிய உபாயங்களா? அல்லது ஸமாதி நிலையை அடைய வேறு ஏதேனும் உபாயம் உண்டா?
ஈஶ்வரப்ரணிதாநாத்வா ॥ 23 ॥
ஈஶ்வரனிடம் பக்தி செலுத்துவன் மூலமும் (ஸமாதியை எய்தலாம்) .
மிகச் சிறந்த பக்தியினால் கவரப்பட்ட ஈஶ்வரன், எண்ணும் மாத்திரத்திலேயே அருள் பாலித்து விடுகிறார். அவரை தியானிப்பதாலும்கூட யோகியானவருக்கு மிக விரைவிலேயே ஸமாதி நிலையை அடைதலும், ஸமாதியின் பலன்களைப் பெறுதலும் சாத்தியமாகின்றது.

1 ஈஶ்வரன் எனும் சொல் அடுத்த ஸூத்ரத்தில் (1.24) விளக்கபட்டுளது

ப்ரதானம், புருஷன் இவ்விரண்டு1மல்லாத இந்த ஈஶ்வரன் யார் ?
க்லஶேகர்மவிபாகாஶயரைபராம்ருஷ்ட: புருஷவிஶஷே ஈஶ்வர: ॥ 24 ॥
க்லேஶங்கள் (துன்பங்கள்) , கர்மம் (முன்வினைகள்) , விபாகம் (கர்மபலன்கள்) , ஆஶயம் (கர்மபலன்களை அனுபவிப்பதனால் ஏற்படும் ஸம்ஸ்காரங்களின் சேமிப்பு) ஆகியவைகளால் தீண்ட இயலாதவர் ஈஶ்வரன்.
அவித்யை முதலியவை க்லேஶங்கள் ஆகும். செயல்கள் (கர்மம்) நன்மை, தீமை வடிவிலானவை. கர்மங்களின் பலன்கள் ‘விபாகம்’2 எனப்படும். விபாகத்தின் தன்மைக்கு ஏற்றவாறு (சித்தத்தில்) ஏற்படும் வாசனைகள்3 தான் ஆஶயம் என்பது.
மேற்கூறிய அனைத்தும் சித்தத்தில் இருந்தாலும் அவை ‘புருஷனால் அனுபவிக்கப்படுகின்றன ஆகையால் அவை புருஷனில் இருக்கின்றன’ என உருவகப்படுத்தப்படுகின்றன. வீரர்களுக்கு ஏற்படும் வெற்றியோ, தோல்வியோ மன்னனுக்கு ஏற்படுவதாகக் கூறப்படுவது போலத்தான் இதுவும்.
இப்படிப்பட்ட (க்லேஶங்கள் முதலிய) போகங்களால் (உருவகப்படுத்தும் விதமாகக்கூட)4 தீண்ட இயலாத புருஷன்தான் ஈஶ்வரன்.
வீடுபேற்றை அடைந்த யோகிகள் பலர் இருக்கின்றார்கள். அவர்கள் மூன்று வகையான5 தளைகளை அறுத்துப் பின் அந்நிலையை எய்துகின்றனர். ஆனால் ஈஶ்வரனுக்கு அத்தளைகளின் தொடர்பு இருந்ததில்லை இருக்கப்போவதும் இல்லை. வீடுபேற்றை அடைந்தவர்களுக்கு முற்காலத்தில் தளைப்பட்டவர்கள் என்ற நிலை இருந்தது என அறியப்படுவது போல ஈஶ்வரனுக்கு எந்த முற்காலத்திய நிலையும் கிடையாது. ‘ப்ரக்ருதி-லயம்’ அடைந்தவர்கள் பிற்காலத்தில் தளைப்படுவார்கள் எனும் நிலை இருக்கிறது. ஆனால் ஈஶ்வரனுக்கு அது போன்ற பிற்கால நிலை ஏதும் கிடையாது. அவர் எப்போதும் வீடுபேற்றில் இருப்பவர். எப்போதும் ஈஶ்வரன் தான்.
(தூய்மையான ஸத்வகுணம் பொருந்திய) தலைசிறந்த அறிவினைக் கொண்டபடியால் ஈஶ்வரன் நிரந்தரமான மேன்மை உடையவராகக் கூறப்படுகிறதே, இந்த மேன்மைக்கு ஆதாரம் ஏதேனும் உண்டா அல்லது ஆதாரமற்றதா இந்த மேன்மை? ஶாஸ்திரங்கள்6 தான் இதற்கு ஆதாரம்.
அந்த ஶாஸ்திரங்களுக்கு காரணம் எது ? ஈஶ்வரனின் அந்த தலைசிறந்த அறிவு தான்.7 ஈஶ்வரனின் தலைசிறந்த அறிவில் இருக்கும் அவரின் மேன்மைக்கும் (அதற்கு ஆதாரமான) ஶாஸ்திரங்களுக்கும் உள்ள தொடர்பு ஆதியற்றது. அந்த ஶாஸ்திரங்களின் வாயிலாக ஈஶ்வரன் எப்போதும் உள்ளார், முக்தி நிலையிலே தான் உள்ளார் என்பது அறியப்படுகிறது.
ஈஶ்வரனின் அந்த ஐஶ்வர்யம் (விரும்புவது விரும்பும்வண்ணம் தடையின்றி நிறைவேறுதல் எனும் மேன்மை) ஒப்பும் மிகையும் அற்றது. வேறொரு ஐஶ்வர்யத்தால் விஞ்சப்படுவதில்லை. எது எல்லாவற்றையும் விஞ்சி நிற்கிறதோ அதுவே அது (ஈஶ்வரனின் ஐஶ்வர்யம்). ஆகையால் எது ஐஶ்வர்யத்தின் மிக உயர்ந்த நிலையோ அங்கு ஈஶ்வரன் உள்ளார். அது போன்ற ஐஶ்வர்யம் வேறெங்கும் இல்லை. அது எதனால்? சமமான இருவர் ஒரே விஷயம் பற்றி ‘இது புதிதாக இருக்கட்டும்’, ‘இது பழையதாகிப் போகட்டும்’ என இருவேறு கருத்துகள் கொண்டிருக்கையில் அவற்றில் ஒரு கருத்து வெற்றி பெற்றால், மற்றவருக்கு அது தோல்வி. அதனால் அவரது மதிப்பு குறைகிறது. மேற்கூறிய இருவருடைய விருப்பமும் ஒரு சேர நிறைவேறட்டும் என்று எடுத்துக்கொண்டாலோ? இருவரும் ஒரு பொருளைப் பற்றி எதிர்மறையான கருத்தையல்லவோ கொண்டிருக்கிறார்கள். ஆகையால் அது சாத்தியமாகாது. ஆகையால் ஒப்பும் மிகையும் அற்றவரே ஈஶ்வரன் ஆவார். அவரே தான் புருஷனும் கூட.

1 யோகஶாஸ்த்ரம் பெரும்பாலும் ஸாங்க்யகொள்கையினை அடியொற்றியே இயற்றப்பட்டுள்ளது. ப்ரதானம், புருஷன் என இரண்டு தான் உலகின் அடிப்படையான தத்துவங்கள் என்பது ஸாங்க்யகொள்கை. ஆனால் இவ்விரண்டிடமிருந்தும் மாறுபட்ட ஈஶ்வரன் எனும் தத்துவம் யோகஸூத்ரத்தில் கூறப்படுகிறது. ஸாங்க்ய-யோக கருத்துக்கள் மாறுபடுவது இங்கு தான். அப்படிப்பட்ட ஈஶ்வரன் எனும் தத்துவம் விளக்கப்படுவது இந்த ஸூத்ரம் மூலமாகத்தான்.

2 விபாகம் என்பது யோகஸூத்ரத்தின் இரண்டாம் பாதத்தின் 13 ஸூத்ரத்தால் விளக்கப்படுகிறது. கர்ம பலனாகிய விபாகம் மூன்று விதமாக வௌிப்படும், ஜாதி, ஆயுள்,போகம் என்பதாக. ஒருவன் செய்யும் செயல்களால் அவன் எந்த உயிரினமாக பிறப்பான் என்பது முடிவாகிறது (ஜாதி). அவனது கர்மங்களுக்கேற்ப அவனுடைய ஆயுள் எவ்வளவு என்பது முடிவாகிறது. ஒரு பிறவியில் அவன் அடையவேண்டிய சுகதுக்கங்களும் கூட முன் செய்த கர்மங்களால் தான் முடிவாகிறது. ஒருவன் தனது கர்மங்களுக்கு ஏற்ப ஜாதி,ஆயுள் மற்றும் போகம் ஆகியவைகளை அடைவது தான் விபாகம்.

3 கர்ம பலன்களை ஜாதி ஆயுள் போகம் என்பதாக மூன்று விதமாக அனுபவிப்பதனால் அதற்கு தகுந்த வாசனைகள் மனதில் பதிகின்றன. பேச்சு வழக்கிலும் கூட படிப்பு வாசனை, முன்ஜென்ம வாசனை போன்ற சொற்கள் உள்ளன. கடந்த பிறவியில்/பிறவிகளில் அனுபவித்த ஜாதி ஆயுள் போகம் ஆகியவை சித்தத்தில் விட்டுச்செல்லும் பதிவுகள் தான் வாசனை/ஆஶயம் எனப்படுகிறது. இந்த வாசனைகளினால் தான் ஒரு மனிதனின் குணாதிசயங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

4 ஜீவாத்மாவிற்கு மேற்கூறிய (மன்னன்-வீரர்கள்) விதமாக க்லேஶங்கள் முதலிவற்றின் தொடர்பு உள்ளது. ஆனால் இப்படிப்பட்ட தொடர்பு கூட ஈஶ்வரனுக்கு கிடையாது என்பது உரையாசிரியர் தெரிவிக்க விழையும் கருத்தாகும்.

5 மூன்றுவிதமான தளைகள் - ப்ராக்ருத-பந்தம் - ப்ரக்ருதிலயம் அடைந்தவர்கள் ப்ரக்ருதியினால் தளை. வைகாரிக-பந்தம் - விதேஹ-நிலையை அடைந்தவர்கள் அவர்கள் தியானம் செய்த ஐம்பூதங்களினாலோ, புலன்களாலோ ஏற்படும் தளை. தாக்ஷிண-பந்தம் - தக்ஷிணை ஆகியவைகளை அளித்து செய்யப்படும் யாகம் ஆகியவற்றால் ஏற்படும் பலவிதமான பலன்களால் ஏற்படும் தளை.

6 வேதங்கள், ஸ்ம்ருதிகள், இதிஹாஸங்கள், புராணங்கள் ஆகியவை ஶாஸ்திரங்கள். - தத்வவைஶாரதி

7 ஸத்வ குணம் பொருந்திய ஈஶ்வரனின் தூய்மையான அறிவிலிருந்து உருவானபடியால் ஶஸ்திரங்கள் உண்மையானது. இப்படிப்பட்ட ஶஸ்திரங்கள் ஈஶ்வரனின் மேன்மை பற்றி கூறுவதனால் ஈஶ்வரனின் மேன்மையும் உண்மையானது தான்.

மேலும் -
தத்ர நிரதிஶயம் ஸர்வஜ்ஞபீஜம் ॥ 25 ॥
அங்கு (ஈஶ்வரனிடம்) ஸர்வஜ்ஞபீஜம் எல்லையற்று விளங்குகிறது.
புலன்களுக்கு அப்பாற்பட்ட ஒரு பொருளைப் பற்றியோ அல்லது பல பொருட்களைப் பற்றியோ அது இறந்தகாலத்தில் எவ்வாறு இருந்தது, நிகழ்காலத்தில் எவ்வாறு உள்ளது எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கும் என்பது பற்றிய ஞானம் (யோகசாதனைகளில் ஈடுபட்டிருக்கும் மகான்களில்) சிறிதளவோ அல்லது அதிக அளவோ இருக்கும். இது தான் முற்றும் உணர்ந்த தன்மையை ஊகிக்க உதவும் குறிப்பாகும் (ஸர்வஜ்ஞபீஜம்) . (சிலருக்கு இந்த ஸர்வஜ்ஞபீஜம் ஓரளவிற்கு இருக்கும் (ஒரு சில பொருட்களைப் பற்றித்தான் அவர்களுக்கு முக்காலத்திலும், புலன்களை கடந்த ஞானம் இருக்கும்) . மேலும் சிலருக்கு இது அதிகமாக இருக்கும்) . இந்த ஸர்வஜ்ஞ-பீஜம் யாரிடம் எல்லையற்று இருக்கிறதோ அவர்தான் முற்றும் உணர்ந்தவர் (ஸர்வஜ்ஞர்) .
ஸர்வஜ்ஞ-பீஜம் எல்லையற்று இருப்பது சாத்தியமே. அது விஞ்சக்கூடியதாக இருப்பதனால். (மேலே கூறியது போல ஒருவருடைய ‘புலன்களுக்கப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றிய ஞானம்’ அவரை விட அதிக யோக சாதனைகளில் ஈடுபட்ட மற்றவரால் விஞ்சக்கூடியது தானே.)
எந்த குணாதிசயத்தில் விஞ்சக்கூடிய தன்மை உள்ளதோ அது எல்லையற்றதாகவும் இருக்கும், ஒரு பரிமாணத்தைப் போல.1
ஞானம் எங்கே இது போன்ற உச்ச (எல்லையற்ற) நிலையை அடைகிறதோ அவர் தான் அனைத்தும் அறிந்தவர். அவர் தான் புருஷர்களுள் சிறந்தவர்.
(மேற்கூறிய) ஊகம் (ஈஶ்வரன் பற்றிய) பொதுவான அறிவினை மட்டுமே கொடுக்க உதவும் (அதாவது, அனைத்தும் அறிந்தவர் ஒருவர் உள்ளார் என்பதனை மட்டுமே அறிவிக்கவல்லது) . ஆனால் (அவரது பெயர் முதலிய) தனிச்சிறப்பான அம்சங்களைத் தெரியப்படுத்த அதனால் இயலாது. அவருடைய தனிச்சிறப்பான பெயர் போன்ற விசேஷமான (குறிப்பிட்ட) தன்மைகள் ஆகமத்திலிருந்து (வேதத்திலிருந்து) தான் தெரிந்து கொள்ளப்பட வேண்டும்.
அவருக்கு தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தேவை இல்லாத போதும் மற்ற உயிரினங்களை மேம்படுத்துவேன், ஞானம், தர்மம் ஆகியவைகளை உபதேசித்து ‘கல்ப-பிரளயம்’2 மஹா-பிரளயம்3 ஆகிய நேரங்களில் புருஷர்களுக்கு நல்வழி காட்டுவேன் எனும் குறிக்கோள் உள்ளது. இதே கருத்து (பஞ்ச-ஶிகாசார்யர் என்பவரால்) பின் வருமாறு கூறப்பட்டுள்ளது-
‘முதல் அறிஞரான, ஸர்வஶக்தி வாய்ந்தவரான, தலை சிறந்த ரிஷியான (கபில) பகவான், தன்னால் உருவாக்கப்பட்ட மனதில்4 புகுந்து விஷயம் தௌிய வேண்டி வந்த ஆஸுரிக்கு (ஒரு யோகி) கருணயினால் தந்திரத்தை (ஸாங்க்ய- யோகத்தை) உபதேசித்தார். ’ - என்று

1 தாமரை, நெல்லிக்கனி, வில்வம் ஆகியவற்றில் அளவு (size ) எனும் குணாதிசயம் இருக்கிறது. முன் கூறிய மூன்று பொருட்களில் அந்த அளவு(size ) எனும் குணாதிசயம் ஒன்றைவிட மற்றொன்றில் அதிகமாக இருக்கிறது. அதாவது அளவு எனும் குணாதிசயம் விஞ்சக்கூடியதாக இருக்கிறது. அளவு (size ) எனும் அதே குணாதிசயம் ஆகாயத்திலும், ஆன்மாவிலும் எல்லையற்றதாக உள்ளது. எந்த குணாதிசயத்தில் விஞ்சக்கூடிய தன்மை உள்ளதோ அது அளவிற்கடங்காமலும் இருக்கும் எனும் ஊகம் இதனால் ஏற்படுகிறது.அதே போல ஸர்வஜ் ஞ-பீஜம் என்பது விஞ்சக்கூடியதாக உள்ளபடியால் அது எல்லையற்றதாகவும் இருக்க முடியும் என ஊகித்தறிய முடிகிறது -- தத்வ-வைஶாரதி

2 கல்பம் என்பது ப்ரஹ்மாவின் ஒரு பகற்பொழுதாகும். அது 43,20,000 ஆண்டுகள் ஆகும். அதன் முடிவில் உலகம் அழிந்து விடும். அப்போது ப்ரஹ்மலோகம் (ஸத்யலோகம்) மட்டும் எஞ்சியிருக்கும்.

3 மஹாப்ரளயம் என்பது ப்ரஹ்மாவின் 100 வருடங்கள் கழிந்த பின் ஏற்படும். (ப்ரஹ்மாவின் ஒரு பகல் 43,20,000 ஆண்டுகள், ஒரு இரவின் கால அளவும் 43,20,000 ஆண்டுகள். இவ்விதம் 100 ஆண்டுகள்) . இந்த பிரளயத்தின் போது ஸத்யலோகமும் அழிந்து விடும் - தத்வ-வைஶாரதி.

4 ஞானிகளுடைய சித்தத்தில் ஸம்ஸ்காரங்கள் இருக்காது என்றபடியால் அவர்களுடைய மனம் தானாகவே புறச் செயல்களில் ஈடுபடாது. ஆகையால் அவர்கள் தங்களுடைய அஸ்மிதாவினால் ஒரு மனதினை உருவாக்கிக்கொண்டு (உலக நன்மைக்காக) செயல்படுவார்கள் . இப்படி உருவாக்கப்பட்ட மனது தான் நிர்மாண- சித்தம் எனப்படுகிறது.)

பூர்வஷோமபி குரு: காலநோநவச்சதோத் ॥ 26 ॥
இவர் (ஈஶ்வரன்) முன்னோர்களுக்கெல்லாம் குரு. அவர் காலத்தினால் மட்டுப்படுத்தப்பட முடியாதவர் என்பதனால்.
முற்காலத்தில் வாழ்ந்த குருமார்கள் அனைவரின் வாழ்க்கையும் காலத்தினால் வரையறுக்கப்பட்டதுதான். யாருடைய வரையறை காலத்தினால் நிர்ணயிக்க முடியாதோ அவர் தான் முற்காலத்தைய குருமார்களுக்கும் குரு ஆவார். இந்தப் படைப்பின் ஆதியில் அவர் இருந்தார் என்பது எவ்வாறு தலைசிறந்த ஆதாரத்தால் அறியப்பட்டதோ (வேதங்களினால்) அதே போல இதற்கு முந்தைய படைப்புகளின் ஆதியிலும் அவர் இருந்தார் என்று அறிந்து கொள்ளப்பட வேண்டும்.

தஸ்ய வாசக: ப்ரணவ: ॥ 27 ॥
அவரைக் குறிக்கும் சொல் ப்ரணவம்.

ப்ரணவத்தினால் (ஓம்) குறிக்கப்படுபவர் ஈஶ்வரன். குறிக்கப்படுபவருக்கும் குறிக்கப் பயன்படும் சொல்லுக்கும் இடையிலான தொடர்பு எவ்வாறானது? பேச்சுவழக்கினால் ஏற்பட்டதா? அல்லது விளக்கு-ஒளி இவைகளின் தொடர்பு போல இயற்கையாகவே இருந்ததா?
இங்கு குறிப்பிடப்படும் பொருளுக்கும் குறிக்கும் சொல்லுக்கும் உள்ள தொடர்பு ஏற்கனவே உள்ளது தான். ஆகையால் குறிக்கும் சொல் குறிக்கப்படும் பொருளான ஈஶ்வரனை வௌிக்காட்டும் செயலை மட்டுமே செய்கிறது. தந்தைக்கும் மகனுக்கும் ஏற்கனவே உள்ள உறவை ‘இவனுடைய தந்தை இவர்’, ‘இவருடைய மகன் தான் இவன் ’ என்ற சொற்றொடர் எவ்வாறு குறிக்கிறதோ அது போலத்தான் இதுவும். குறிக்கும் சொல்லிற்கும் குறிக்கப்படும் பொருளிற்கும் இடையே நிலவும் தொடர்பு இதே போல வேறு படைப்புகளிலும் (சிருஷ்டி) தொடரும்.1 ஒரு பொருளைக் குறிக்க ஒரு சொல்லைப் பயன்படுத்துவது (ஸம்ப்ரதிபத்தி) நிரந்தரமாகத் (காலங்காலமாக) தொடர்வதால், சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு நிரந்தரமானது என வேதங்களைப் பின்பற்றுபவர்கள் (ஆகமிகள்) ஆணித்தரமாக வலியுறுத்துகின்றனர்.

1 இவ்வாக்கியம் எதனால் கூறப்படுகிறது என்றால் மகாபிரளய சமயத்தில் அனைத்தும் பிரதானத்தில் ஒடுங்கி விடுகின்றன. சொற்களும் பிரதானத்தின் விளைவுகளே ஆகும். ஆகையால் அவையும் பிரதானத்தில் ஒடுங்கிவிடும் ஆகையால் சொற்களும் அது குறிக்கும் பொருட்களும் எவ்வாறு எப்போதும் ஒன்றாக இருக்கும்? இக்கருத்தை மனதிற்கொண்டுதான் இவ்வாக்கியம் கூறப்பட்டது. இதற்கான பதிலை வாசஸ்பதி மிஸ்ரர் கூறுகிறார் - மழை இல்லாமல் போனால் நிலத்திலிருந்து தோன்றுபவை (தவளைகள், செடிகள் ஆகியவை) பட்டுப் போய் பூமியோடு ஒன்றிவிடுகின்றன. ஆனால் மழை பெய்த பின் அவை முன்பு போலவே பூமியிலிருந்து தோன்றுகின்றன. இதே போலத்தான், சொற்கள் மகாபிரளய சமயத்தில் பிரதானத்துடன் ஒன்றிவிட்டாலும் மீண்டும் படைப்பு துவங்கும்போது அதே போல அதே அர்த்தத்துடன்தான் தோன்றுகின்றன.

சொல்லிற்கும் அது குறிக்கும் பொருளிற்கும் உள்ள தொடர்பை அறிந்த யோகி-
தஜ்ஜபஸ்ததர்தபாவநம் ॥ 28 ॥
அதன் ஜபத்தையும் (உருப்போடுதல்) அதன் பொருளைப் பற்றிய சிந்தனையையும் (செய்ய வேண்டும்)
ப்ரணவத்தினுடைய (ஓம்காரம்) ஜபமும், அது குறிக்கும் ஈஶ்வரனைப் பற்றிய சிந்தனையும் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் யோகியின் சித்தம் ஒருநிலைப்படுகிறது.
அக்கருத்து பின் வருமாறு கூறப்படுகிறது -
‘‘ஸ்வாத்யாயத்தால் (ஈஶ்வரன் பற்றி ஜபம், தியானம், படித்தல்) யோகத்தைச் செய்ய வேண்டும் யோகத்தால் ஸ்வாத்யாயத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். ஸ்வாத்யாயம்-யோகம் ஆகிய இரண்டாலும் தான் பரம்பொருள் காணப்படுகின்றது.’’
இதனால் என்னவாகும்?
தத: ப்ரத்யக்த்சதேநாதிகமோ(அ)ப்யந்தராயாபாவஶ்ச ॥ 29 ॥
இதனால் உள்ளிருக்கும் ஆன்மாவை உணர முடியும். (யோகப்பயிற்சிக்கு ஏற்படும்) இடையூறுகளும் விலகும்.
அந்தராயம் (தடை) என குறிக்கப்படும் ‘வ்யாதி’ முதலியவை விலகிவிடும். தன்னைத் தானே அறிதலும் இதனால் ஏற்படுகிறது. எப்படி (தியானிக்கப்படும்) புருஷனாகிய ஈஶ்வரன், தூய்மையானவரோ, துன்பங்கள் அற்றவரோ, குணாதிசயங்களுக்கு அப்பாற்பட்டவரோ, கர்மவினைகளால் தீண்ட இயலாதவரோ அதே போலத்தான் என்னுள்ளுறையும், அறிவின் செயல்பாடுகளுக்குச் சாட்சியாக விளங்கும் புருஷனும் உள்ளான் என்ற ஞானம் ஏற்படுகிறது.
சித்தத்தை திசை திருப்பக்கூடிய தடைகள் எவை? அவை எத்தனை வகைப்படும்? -
வ்யாதிஸ்த்யாந​ஸம்ஶயப்ரமாதாலஸ்யா​விரதிப்ராந்திதர்ஶநாலப்த​பூமிகத்வாநவஸ்திதத்வாநி சிதவிக்ஷபோஸ்தே(அ)ந்தராயா: ॥ 30 ॥
1வ்யாதி, ஸ்த்யானம், ஸம்ஶயம், ப்ரமாதம், ஆலஸ்யம், அவிரதி, ப்ராந்திதர்ஶனம், அலப்தபூமிகத்வம், அனவஸ்திதத்வம் ஆகியவை சித்தத்தை திசை திருப்பக்கூடியவை. இவை இடையூறுகள்.
ஒன்பது விதமான தடைகள் சித்தத்தினைத் திசை திருப்பும். சித்தத்தின் வ்ருத்திகளுடன் இவையும் சேர்ந்திருக்கும். சித்தவ்ருத்திகள் இல்லாதபோது இவையும் இருப்பதில்லை.
அவைகளுள் ‘வ்யாதி’ என்பது - சரீரத்திலுள்ள வாத-பித்த-கபங்கள், உண்ட உணவின் சாரம், புலன்கள் - ஆகியவை தமது இயற்கை நிலைக்கு மாறான நிலையை அடைதல் என்பதாகும். ‘ஸ்த்யானம்’ என்பது - சித்தம் செயல்களைச் செய்ய விரும்பாத நிலையாகும். ‘ஸம்ஶயம்’ என்பது ஒரு கருத்து இவ்விதமா? அல்லது அவ்விதமா? என்ற இருவிதமான சிந்தனை. ‘ப்ரமாதம்’ என்றால் யோகஸாதனங்களைக் கடைபிடிக்காதிருத்தல். ‘ஆலஸ்யம்’ என்பது - உடலும், சித்தமும் கனப்பது போன்ற உணர்வு. அதனால் செயல்களில் ஈடுபாடற்ற தன்மை.
‘அவிரதி’ என்றால் சித்தம் ஓய்வின்றி விஷயங்களின் பின்னாலேயே செல்லும் பேராசை. ‘ப்ராந்தி-தர்சனம்’ என்பது எதிர்மறையான அறிவைக் குறிக்கும். ‘அலப்த-பூமிகத்வம்’ ஸமாதிப் படிகளை அடையாதிருத்தல் ஆகும். ‘அனவஸ்திதத்வம்’ என்பது ஸமாதிக்கான வழி கிடைத்தாலும் சித்தம் அதில் நிலையாமையைக் குறிக்கும். சித்தம் ஸமாதி நிலையை அடைந்தால் தான் நிலை கொள்ளும். சித்தத்தைத் திசை திருப்பும் இவை ஒன்பதும் ‘யோக-மலங்கள்’, ‘யோகத்தின் எதிரிகள்’, ‘யோகத்திற்குத் தடைக்கற்கள்’ எனவும் கூறப்படுகின்றன.

1 இந்தச் சொற்களுக்கான விளக்கம் வியாஸரின் உரையில் தௌிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால் இங்கு அச்சொற்களுக்குகான மொழிபெயர்ப்பு கொடுக்கப்படவில்லை.

து:கதௌர்மநஸ்யாங்கமஜேயத்வஶ்வாஸப்ரஶ்வாஸா விக்ஷபேஸஹபுவ: ॥ 31 ॥
துக்கம், தௌர்மனஸ்யம், அங்க-மேஜயத்வம், ஶ்வாஸ--ப்ரஶ்வாஸம் ஆகியவை சித்த-விகே்ஷபங்களோடு கூடத் தோன்றும்.
‘துக்கம்’ என்பது தன்னாலேயோ1(ஆத்யாத்மிக--), பிற உயிரினங்களாலோ2(ஆதிபௌதிக), இயற்கை அல்லது தெய்விக சக்தியாலோ((ஆதிதைவிக)3 ஒருவனுக்கு ஏற்படும் கஷ்டங்களாகும். இப்படிப்பட்ட துக்கங்களால் பீடிக்கப்படும் உயிரினங்கள் அதிலிருந்து விடுபட விழைகின்றன. ‘தௌர்மனஸ்யம்’ என்பது விருப்பத்திற்கு மாறான செயல்கள் நடைபெறும்போது மனதில் உண்டாகும் கலக்கமாகும். ‘அங்க-மேஜயத்வம்’ உடல் அவயவங்களில் நடுக்கமாகும். ‘ஶ்வாஸ--ப்ரஶ்வாஸ’4 என்பது காற்றைச் சுவாசித்தலும் வௌியே விடுதலும் ஆகும்.
இவை ‘விகே்ஷப’ங்களுடன் தோன்றும். ஒருநிலை பெறாத சித்தத்தில் இவை இருக்கும். ஒருநிலை பெற்ற அமைதியான சித்தத்தில் இவை இருக்காது.

1 தலைவலி, ஜுரம் முதலியவை

2 திருடர்கள், புலி முதலிய கொடிய மிருகங்களால் ஆகியவற்றால் ஏற்படும் துன்பம்

3 வௌ்ளம், பூகம்பம் முதலியன இவை மூன்றும் ஸம்ஸ்க்ருதத்தில் ‘தாபத்ரயம்’ (மூன்று வித கஷ்டங்கள்) எனப்படும்.

4 விருப்பத்திற்கு மாறாக மூச்சுக்காற்று உட்செல்வதும் வௌியேறுதலும் ஶ்வாஸ-ப்ரஶ்வாஸ எனும் சொற்களால் குறிக்கப்படுகிறது.

இந்த விகே்ஷபங்கள் ஸமாதி நிலைக்கு எதிரிகள். அப்யாஸத்தினாலும், வைராக்யத்தினாலும் இவை ஒடுக்கப்பட வேண்டும். அப்யாஸம் பற்றி கருத்துக்களை நிறைவு செய்யும் விதமாகக் கூறுகிறார் -
தத்ப்ரதிஷதோர்தமகேதத்த்வாப்யாஸ: ॥ 32 ॥
விகே்ஷபங்கள் வரவிடாமல் தடுக்க சித்தம் ஒருதத்துவத்தை1 அண்டியிருத்தல் எனும் பயிற்சினை (ஏக-தத்வாப்யாஸ) மேற்கொள்ள வேண்டும்.
சித்தம் அலைபாயாமல் (விகே்ஷபம் அடையாமல்) தடுக்க அது, ஒரு தத்துவத்தை பற்றியிருக்கும் வண்ணம் பயிற்சி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு2 பொருளை அறிய ஒவ்வொரு சித்தம் உருவாகிறது. சித்தம் என்பது எண்ணங்கள் மட்டுமே. சித்தம் கண நேரமே இருக்கக் கூடியது என ஒருவர் கூறுவாரேயானால் இக்கருத்தின் படி சித்தங்கள் அனைத்துமே ஒருநிலை பெற்றவை தான். விகே்ஷபம் என்று எதுவுமே இருக்காது.
அனைத்திலிருந்தும் பின்வாங்கி உள்முகப்படுத்தி ஒரு விஷயத்தில் சித்தம் பொருத்தப்படுமேயானால் அது ஒருநிலைப்படுகிறது என்று (பௌத்தர்கள்) கூறினால், ஒவ்வொரு பொருளைக் கிரகிக்க ஒவ்வொரு சித்தம் உருவாகிறது எனும் (அவர்களுடைய) கருத்து தவறு என்றாகிவிடுகிறது.
ஒரே கருத்தைக் கொண்ட சித்தங்கள் தொடர்ச்சியாக உருவாவது தான் மனதினை ஒருமுகப்படுத்துதல் என வாதிட்டால் அது சாத்தியம் ஆகாது. ஒருமுகப்படுதல் (மனதின்) ஒரு குணாதிசயம் எனில் (அது ஏதாவது ஒரு பொருளில் இருக்க வேண்டும்.3 அது சித்தத்தில் இருக்க இயலாது. சித்தம் கணமாத்திரமே இருக்கக் கூடியது என்பதனால். (சித்தமே கண மாத்திரம் இருக்கக் கூடியது எனக் கூறும் பௌத்தர்கள் அந்த சித்தம் ‘ஒரே கருத்தினைக் கொண்டு தொடர்ச்சியாகத் (பல காலம்) தோன்றும் சித்தங்களின் பிரவாகமான மன ஒருமைப்பட்டைக் கொண்டிருக்க முடியும் எனக் கூறுவது எப்படிப் பொருந்தும்?’)
(ஒருநிலைப்படுதல் என்பது எண்ணப் பிரவாகத்தின் குணாதிசயம் எனக்கொண்டால்தானே மேற்கூறிய தவறு ஏற்படும்? ஆகையால்) ஒருநிலைப்பாடு என்பது எண்ணப் பிரவாகத்தின் அங்கமான எண்ணங்களின் குணாதிசயம் எனக் கொண்டால், ஒரே மாதிரியான எண்ணங்கள் ஆயினும், பல விதமான எண்ணங்களின் பிரவாகமாயினும், ஒருநிலைப்பாடு என்பது எண்ணங்களின் குணாதிசயம் ஆகிவிட்டபடியால் சித்தத்தில் விகே்ஷபம் என்பதே இல்லை என ஆகிவிடும். (ஆகையால் இது போன்ற பௌத்தர்களின் வாதங்கள் தவறானவை என உணர்த்தப்படுகிறது.)
ஆகையால் சித்தம் என்பது ஒன்றே ஆகும், அது நிலையானது ஆகும், பல பொருட்களைக் கிரகிக்கும் தன்மை கொண்டது ஆகும்.
ஒரு சித்தத்தைச் சேராதவையான, இயற்கையிலேயே மாறுபாடுகள் கொண்ட எண்ணங்கள் ஏற்படுமாயின், ஒரு எண்ணத்தால் காணப்பட்டதை வேறு ஒரு எண்ணம் எவ்வாறு நினைவு கொள்ள முடியும் ? வேறு ஒரு எண்ணத்தினால் சேகரிக்கப்பட்ட கர்ம-வினைகளை மற்றொரு எண்ணத்தினால் எவ்வாறு அனுபவிக்க முடியும்? இந்தப் பிரச்சினைக்கு ஒரு விதமாக சமாதானம் சொன்னாலும் அது ‘கோமய-பாயஸ-ந்யாயம்’4 போலத் தான் ஆகும்.
மேலும் சித்தம் பல என்று கூறினால் ’தான்’ அனுபவித்ததையே இல்லை எனக் கூறும் நிலை ஏற்பட்டுவிடும். அது எவ்வாறு?
சித்தங்கள் பல எனக் கூறினால் ‘எதை நான் பார்த்தேனோ அதை நான் தொடுகிறேன்’, ‘எதை நான் தொட்டேனோ அதை நான் பார்க்கிறேன்’என்பது பேன்ற இடங்களில் எண்ணங்கள் வேறாயினும் ‘நான்’ என்ற எண்ணங்களை அனுபவிப்பவர் பற்றி ஒன்று போல எண்ணம் ஏற்படுமா என்ன? ‘நான்’ எனும் எண்ணம் ஒரே விஷயத்தைக் கொண்டது, வேறுபாடற்ற வடிவம் கொண்டது. சித்தங்கள் வேறுபட்டனவாகவும் பலவாகவும் இருந்தால் அதனுடைய எண்ணங்கள் ‘நான்’ எனும் ஒரே அறிபவரை எவ்வாறு அண்டியிருக்கக் கூடும்?
ஒருவர் தன்னுடைய சுய அனுபவத்தால் ‘நான்’ எனும் எண்ணம் பேதங்களற்ற ஒன்றைக் குறிக்கிறது என்பதை உணர முடியும். நேரிடையாக அனுபவித்து அறிந்ததை வேறு எந்த விதத்தில் மாற்றிக் கூற இயலும் ? உண்மையான அறிவினை அளிக்கும் வேறு பிரமாணங்களும் (சரியாக அறியும் வழிகளும்) கூட நேரிடையான அனுபவத்தை அண்டியே பயன்படுத்தப்படுகின்றன. ஆகையால் சித்தம் ஒன்றே, அது நிலையானதே, பல பொருட்களைக் கிரகிக்கும் தன்மை கொண்டதே.

1 இங்கே ஏக-தத்வம் எனும் சொல்லுக்கு உரையாசிரியர்கள் பல விதமாக விளக்கம் அளிக்கின்றனர்.
1) பாஸ்வதி - ஈஶ்வர ப்ரணிதானம் செய்ய வேண்டும் என கூறினால்.ஈஶ்வரனைப் பற்றி பலவிதமான கருத்துகள் மனதில் தோன்றும். அவர் க்லேஶங்கள் அற்றவர். அனைத்தும் அறிந்தவர். எங்கும் நிறைந்தவர் என்பது போல பல கருத்துக்கள் தோன்றும். இதனால் மனம் அலைபாயும். ஆகையால் இது போன்ற விஷயங்களைத் தடுத்து ஈஶ்வரனைப் பற்றி ஒரே விதமாக சிந்தித்தல் ஏகதத்வாப்யாஸமாகும். இந்த ஏகதத்வாப்யாஸம் செய்வதற்கு ’அஹம் (நான்) ’ எனும் சிந்தனை மிகவும் உகந்தது. நானும் ஈஶ்வரனைப் போன்றவன் தான் எனும் கருத்தினை தியானிக்கலாம்.
2) தத்வ-வைஶாரதி- ஏக-தத்வம் (ஓர் உண்மை) என்பது ஈஶ்வரன் தான். ஏனெனில் முந்தைய ஸூத்ரங்களில் அது பற்றி தான் விளக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வருவதனால் ஏக-தத்வம் என்பது ஈஶ்வரனைத் தான் குறிக்கிறது.
3) வார்த்திகம் - ஏகதத்துவம் என்பது (மனதினை நிலை கொள்ளச் செய்ய உதவும்) தூலமான ஏதாவது ஒரு பொருள். இதன் பொருள் ஈஶ்வரன் என கொள்ள முடியாது ஏனெனில் முந்தைய ஸூத்ரங்களிலேயே ஈஶ்வரனை தியானிக்க வேண்டும் என்பது கூறப்பட்டுவிட்டது. மீண்டும் அதனையே இந்த ஸூத்ரம் கூறுகிறது எனக் கொண்டால் கூறியதனையே மீண்டும் கூறுதல் ஆகிவிடும். புதிதாக ஏதும் இருக்காது.

2 சித்தம் பற்றிய பௌத்தர்களுடைய கருத்து இங்கே நிராகரிக்கப்படுகிறது

3 கோபம் ஒரு குணாதிசயம் எனில் அது மனிதனில் இருக்க வேண்டும். மனிதன் இருந்தால் தான் கோபம் இருக்க இயலும்.

4 பாலும் பசுவிடமிருந்து தான் பெறப்படுகிறது. சாணமும்கூட பசுவிடமிருந்து தான் கிடைக்கிறது. ஆகையால் பாலும் பசுஞ்சாணமும் ஒன்று தான்.

சித்தத்தினைத் தூய்மைப்படுத்த பல உபாயங்கள் இந்த ஶாஸ்திரத்தில் கூறப்படுகின்றன. அவை எப்படிப்பட்டவை?
மதை்ரீகருணாமுதிதோபகே்ஷாணாம் ஸுகது:கபுண்யாபுண்யவிஷயாணாம் பாவநாதஶ்சிதப்ரஸாதநம் ॥ 33 ॥
மகிழ்ச்சியாக இருப்பவர்களிடம் நட்புணர்வு, துன்பப்படுபவர்களிடம் பரிவு, நல்ல செயல்களைச் செய்பவர்களிடம் மகிழ்ச்சி, தீயசெயல்களில் ஈடுபடுபவர்களிடம் அக்கறை கொள்ளாதிருத்தல் ஆகிய எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுவதனால் சித்தத்தை தூய்மைப்படுத்தலாம்.
சுகத்தை அனுபவிக்கும் எல்லா உயிரினங்களிடத்தும் நட்புணர்வு (மைத்ரீ) எனும் எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். துன்பப்படுபவர்களிடம் பரிவு (கருணா) எனும் எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நற்செயல்கள் செய்பவர்களைக் கண்டு மகிழ்வுணர்வை (முதிதா) ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தீய செயல்களைச் செய்பவர்களிடம் அக்கறையின்மை ஆகிய எண்ணங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட எண்ணங்களை வளர்த்துக் கொள்பவருக்கு தூய எண்ணங்கள் ஏற்படுகின்றன. அதனால் சித்தம் தௌிவினை அடைகிறது. தௌிவினை அடைந்த சித்தம் ஒருநிலைப்படுகிறது.
ப்ரச்சர்தநவிதாரணாப்யாம் வா ப்ராணஸ்ய ॥ 34 ॥
சுவாசக்காற்றை வௌியேற்றுவதனாலும், கட்டுப்படுத்துவதனாலும்கூட (சித்தத்தை நிலையாகச் செயல்படச் செய்யலாம்)
நுரையீரலில் இருக்கும் சுவாசக் காற்றை முனைந்து நாசி துவாரம் வழியே வௌியேற்றுதல் ப்ரச்சர்தனம் ஆகும். விதாரணம் என்பது (நுரையீரலிலிருந்து வௌியேற்றிய) பிராணனை (மீண்டும் உள்ளே நுழையாவண்ணம்) கட்டுப்படுத்துதல் ஆகும். இவ்விரு கிரியைகளாலும் மனதை நிலைப்படுத்தலாம்.
விஷயவதீ வா ப்ரவ்ருத்திருத்பந்நா மநஸ: ஸ்திதிநிபந்தநீ ॥ 35 ॥
(புலன்களின்) 1 விஷயங்களில் சித்தத்தை (யோகிகளின் வழிகாட்டுதலின் பேரில்) செலுத்துவதனால் மனதில் ஒரு சிறப்பான உணர்வு (ப்ரவ்ருத்தி) ஏற்படும். அது மனதினை நிலைப்படுத்தும்.
மூக்கின் நுனியில் மனதினைக் குவித்தால் ஏற்படும் தெய்விக வாசனையின் அனுபவம் ‘கந்த-ப்ரவ்ருத்தி’ எனப்படும். நாவின் நுனியில் மனதினை ஒருநிலைப்படுத்தினால் சுவை பற்றி தெய்விக ஞானம் ஏற்படும். வாயின் உட்பகுதியின் மேற்புறத்தில் மனதினைக் குவித்தால் தெய்விக வடிவம் பற்றி ஞானம் ஏற்படும். நாவின் நடுவில் தியானிப்பதன் மூலம் தெய்விக தொடு உணர்வின் ஞானம் ஏற்படும். நாவின் வேர் பகுதியில் தியானிப்பதன் மூலம் தெய்விகமான ஒலிகளின் ஞானம் ஏற்படும். இது போன்ற ப்ரவ்ருத்திகள் ஏற்பட்டு சித்தத்தினை நிலையாக இருக்கும்வண்ணம் கட்டிப்போடுகின்றன. சந்தேகங்களை அழித்து விடுகின்றன. ஸமாதி நிலையினை நோக்கி சித்தத்தினை இட்டுச் செல்கின்றன. இதே போலத்தான் சந்திரன், சூரியன், கோள்கள், ரத்தினம் போன்ற கற்கள், விளக்கொளி ஆகியவை பற்றி தியானிப்பதும் கூட மேற்கூறியது போன்ற ப்ரவ்ருத்திகளை ஏற்படுத்தும்.
மேற்கூறப்பட்ட விஷயங்கள் அனைத்தும் ஶாஸ்திர முறைப்படியான அனுமானத்தாலும்2, ஆசிரியர்களின் வாக்கின்படியும் உண்மைதான். ஆயினும் மேற்கூறப்பட்ட தியான விஷயங்களில் ஏதேனும் ஒரு விஷயம் பற்றி தானே அறிந்து உணராவிடில் புலன்களுக்கு அப்பாற்பட்ட, நுண்ணிய இவற்றைப் பற்றித் அசைக்க முடியாத ஞானம் ஏற்படாது. ஆகையால் ஶாஸ்திர முறைப்படி அமைந்த அனுமானம், ஆசிரியரின் உபதேசம் ஆகியவை உண்மைதான் என உணர ஏதேனும் ஒரு விஷயம் நேரிடையாக அனுபவித்துத் தெரிந்து கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு ஒரு சிறு விஷயம் பற்றி நேரிடையான அனுபவம் ஏற்பட்டால் வீடுபேறு வரை ஶாஸ்திரங்கள் கூறும் அனைத்து நுண்ணிய விஷயங்களிலும் நம்பிக்கை ஏற்பட்டுவிடும். இதற்காகத்தான் சித்தத்தினைத் திருத்தி நல்வழிப்படுத்த வழிமுறைகள் கூறப்படுகின்றன.
கட்டுக்கோப்பற்ற சித்த வ்ருத்திகள் கட்டிற்குள் வந்த பின்பு சித்தம் அடுத்த நிலையில் உள்ள மேன்மையான விஷயங்களை உணர்ந்து கொள்ளத் தகுதி பெறுகின்றது. அப்போது சிரத்தை, ஆற்றல், நன்நினைவுகள் ஆகிய நற்குணங்கள் தடையின்றி உண்டகின்றன.

1 மெய் வாய் கண் மூக்கு செவி ஆகியவை புலன்களாகும். தொடுதல், சுவைத்தல், பார்த்தல், நுகர்தல், கேட்டல் ஆகியவை முறையே அவைகளின் விஷயங்களாகும்.

2 ஶாஸ்த்ர முறைப்படியான அனுமானம் என்பது அந்தந்த ஶாஸ்த்ரம் அனுமானத்திற்கு/ ஊகத்திற்கு நிர்ணயித்திருக்கும் குறிக்கோளாகும். குறிக்கோளற்ற ஊகம் என்பது இருமுனை கத்தி போன்றது. அதனை பயன்படுத்துபவரையே அது பதம் பார்த்து விடக்கூடும்.

விஶோகா வா ஜ்யோதிஷ்மதீ ॥ 36 ॥
துன்பமற்ற ஜ்யோதிஷ்மதீ (எனும் ப்ரவ்ருத்தி மனதில் உண்டானால் அதுவும் மனதினை நிலைப்படுத்தும்)
‘மனதில் ஒரு சிறப்பான உணர்வு (ப்ரவ்ருத்தி) ஏற்படும். அது மனதினை நிலைப்படுத்தும்’ எனும் முன் சூத்திரத்தின் சொற்றொடர் இங்கும் பொருந்துகிறது. இதய கமலத்தில் தியானிக்கும் யோகியானவருக்கு அறிவொளி ஏற்படுகிறது. அந்த ஒளி மிகவும் பிரகாசமானது. அது சூரியன், சந்திரன், கோள்கள், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றின் ஒளிக்கு ஒப்பானது. இந்த அனுபவம் ஏற்பட்ட பின் - -‘இருக்கிறேன்’ (அஸ்மிதா) எனும் உணர்வை மட்டும் கொண்ட சித்தம் அலைகளற்றப் பெருங்கடல் போல் பரந்து விரிந்தும், அமைதியாகவும் இருக்கும். ‘இருக்கிறேன்’ என்ற உணர்வு மாத்திரம் அங்கு இருக்கும்.
இது பற்றி பின்வருமாறு கூறப்பட்டுள்ளது -
அணு அளவே இருக்கும் ஆன்மாவை அறிந்து கொண்டு, ‘இருக்கிறேன்’ என்று மட்டும் உணர்கிறார் (யோகி)’ (வேறு எந்த எண்ணமும் அப்போது தோன்றுவதில்லை).
இந்தச் சோகமற்ற நிலை (விஶோகா) இருவகைப்படும் - (சூரியன் சந்திரன் போன்ற ஒளிகளுக்கு ஒப்பான தன்மையுடையதான) விஷயங்கள் (அனுபவங்கள்) கொண்டது (விஷயவதீ) , ‘இருக்கிறேன்’ என்ற உணர்வு மாத்திரம் கொண்டது என்று. இந்நிலைகள் ‘ஜ்யோதிஷ்மதீ’ (ஒளி நிறைந்தது) எனப்படுகிறது. இதனால் யோகியின் சித்தம் நிலைபெறுகிறது.
வீதராகவிஷயம் வா சித்தம் ॥ 37 ॥
பற்றற்றவர்களைக் குறித்ததாக சித்தம் (இருந்தாலும் நிலை பெறும்)
பற்றற்றவர்களைப்1 பற்றி தியானிப்பதாலும் யோகியின் சித்தம் நிலை பெறுகிறது.

1 க்ருஷ்ண-த்வைபாயனர் (வ்யாஸர்) போன்ற மகான்கள் பற்றற்றவர்கள் -- -தத்த்வ-வைஶாரதி

ஸ்வப்நநித்ராஜ்ஞாநாலம்பநம் வா ॥ 38 ॥
கனவு, ஆழ்ந்த உறக்கம் ஆகியவைகளில் ஏற்படும் அனுபவங்களை தியானித்தாலும் (மனது நிலை பெறும்) .
கனவு, ஆழ்ந்த உறக்கம் ஆகிய நிலைகளில் மனதில் ஏற்பட்ட (நல்ல) அனுபவங்களைப் பற்றி தியானித்தாலும்கூட மனது அதனது வடிவத்தை அடைந்து நிலைபெறுகிறது.
யதாபிமதத்யாநாத்வா ॥ 39 ॥
விரும்பும் விஷயத்தினை தியானிப்பதாலும் (மனது ஒருநிலைபெ றும்)
யோகியானவர் தான் விரும்பும் விஷயத்தில் மனதை ஒருநிலைப்படுத்தலாம். அவ்வாறு அங்கே நிலைபெற்ற சித்தம் வேறு இடங்களிலும்1 நிலைபெறும்.

1 உயரிய யோகதத்துவ விஷயங்களிலும்

பரமாணுபரமமஹத்த்வாந்தோ(அ)ஸ்ய வஶீகார: ॥ 40 ॥
சித்தத்தில் மிக நுண்ணிய பொருளையும் மிக தூலமான பொருளையும் தியானிக்கும் திறன் ஏற்படுதல் மனக்கட்டுப்பாட்டின் உச்சநிலை.
நுண்ணிய பொருளை (யோகி) தியானிக்கத் துவங்கி உலகின் மிகவும் நுட்பமான பரமாணு வரை அவரது சித்தம் தங்கு தடையின்றிச் செல்லும் திறன் பெற்றால்; ஒரு தூலமான பொருளை (யோகி) தியானிக்கத் துவங்கி உலகின் மிகவும் தூலமான (பிரபஞ்சத்தின் பரந்து விரிந்த அண்டவௌி) பொருட்கள் வரை சித்தம் செல்லும் திறன் பெற்றால்;- அதுதான் மிகச் சிறந்த (மனக்) கட்டுப்பாடு. இப்படிப்பட்ட நிலையில் உள்ள சித்தத்தை உடையவருக்கு சித்தத்தைச் செப்பனிடும் வேறு பயிற்சி ஏதும் தேவைப்படாது.
நிலைபெற்ற சித்தமானது அடையும் மனநிலை (ஸமாபத்தி) எவ்வடிவினதாக இருக்கும்? அந்த மனநிலையின் பொருள் யாது? கூறுகிறோம் -
க்ஷீணவ்ருத்தரேபிஜாதஸ்யவே மணரே்க்ரஹீத்ருக்ரஹணக்ராஹ்யஷேு தத்ஸ்தததஞ்ஜநதா ஸமாபத்தி: ॥ 41 ॥
இயற்கையில் தூய்மையான படிகத்தைப் போன்று (அப்பழுக்கற்ற), வ்ருத்திகள் மெலிந்து போன சித்தம்- அறிபவர், அறியும் கருவிகள் (புலன்கள்) அறியப்படும் பொருள் ஆகியவற்றுடன் இருக்கும்போது அவற்றினை ஒத்த வடிவினை அடைவதுதான் ஸமாபத்தி.
‘இயற்கையில் தூய்மையான படிகத்தைப் போல என்பது எடுத்துக்காட்டாக கொள்ளப்படுகிறது. படிகம் அதனருகில் உள்ள பொருளைப் பிரதிபலித்து அதன் நிறத்தைப் பெறுவது போல, சித்தமும்கூட கிரகிக்கப்படும் பொருளினைப் பிரதிபலித்து அதன் வடிவினை உடையதாக ஆகிவிடுகிறது.
அதே போல பூத-ஸூக்ஷ்மத்தின்1 பிரதிபலிப்பினால் அதன் வடிவினை அடைந்து அதனைப் போலவே தோற்றம் பெறுகிறது. அதே போல பெரிய அளவு கொண்ட பொருளின் பிரதிபலிப்பினால் சித்தம் அதன் வடிவினையடைந்து அதனைப் போலவே தோற்றம் பெறுகிறது. அதே போல உலகத்தின் பல்வேறு பொருட்களை பிரதிபலித்து அவைகளின் வடிவினையடைந்து அதனைப் போலவே தோற்றம் பெறுகிறது.
அது போலவே அறிவுக் கருவிகளான புலன்களைப் பற்றியும் அறிந்து கொள்ளப் பட வேண்டும். சித்தம் அறிவுக் கருவிகளை பிரதிபலித்து அதன் வடிவினை அடைந்து, அதனைப் போலவே தோன்றுகிறது.
இதே விதமாக சித்தமானது அறிபவரைப் பிரதிபலித்து அவரின் வடிவினை அடைந்து அறிபவரைப் போலவே தோன்றுகிறது. சித்தம் 2முக்தியடைந்தவரைப் பிரதிபலித்து அவரின் வடிவினை அடைந்து அவரைப் போலவே தோன்றுகிறது.
ஆகவே இயற்கையில் தூய்மையான படிகம் போன்ற சித்தம் அறிபவர், அறியும் கருவி, அறியப்படுபவை ஆகியவைகளால் ஏற்படும் பிரதிபலிப்புகளினால் அவைகளின் வடிவினை அடைவது தான் இங்கு ஸமாபத்தி எனப்படுகிறது.

1 பூத-ஸூக்ஷ்மம் என்பது பஞ்ச-பூதங்களின் காரணப்பொருளென கருதப்படும் நுண்ணியவையான தன்மாத்ரங்கள் எனப்படும். ஸமாதியில் கிரகிக்கப்படும் பொருள் தூலமாகவும் இருக்கலாம் நுண்ணியதாகவும் இருக்கலாம் என்பது உணர்த்தப்படுகிறது - பாஸ்வதி

2 ஶுகர் (வ்யாஸரின் மகன்), ப்ரஹ்லாதன் ஆகியவர்கள் முக்தர்கள் - தத்த்வவைஶாரதி, யோகவார்த்திகம்

தத்ர ஶப்தார்தஜ்ஞாநவிகல்பை: ஸம்கீர்ணா ஸவிதர்கா ஸமாபத்தி: ॥ 42 ॥
அங்கு சொல், பொருள், அதனுடைய ஞானம் இவைகள் கலந்தது விதர்க்கம் கொண்ட ஸமாபத்தி எனப்படுகிறது.
‘பசு’ எனும் சொல், அது குறிக்கும் பொருள், அதனால் ஏற்படும் அறிவு ஆகியவை வேறுபட்டனவாயினும் ஒன்று போல ஒரே நேரத்தில் அவைகளைக் கிரகித்தல் ஏற்படுகிறது. ஆராய்ந்து நோக்கின், சொற்களின் குணாதிசயங்கள் வேறு, குறிக்கப்படும் பொருட்களின் குணாதிசயங்கள் வேறு, அதனால் ஏற்படும் அறிவின் குணாதிசயங்களும் வேறுபட்டனவாகவே இருக்கின்றன. இவ்வாறு இருக்கையில் யோகியின் ஸமாதி மனநிலையினில் சொல் அதன் பொருள், அதன் அறிவு ஆகியவை கலந்த வடிவத்தினை சித்தம் அடைகிறது. இந்நிலை தான் ஸவிதர்க்க ஸமாபத்தி எனப்படுகிறது.
சொற்களின் குறிப்பினால் உருவாகியிருந்த நினைவுகள் அகன்று போனால் அதன் அடிப்படையினால் ஆன ஆகமம், அனுமானம்1 ஆகியவை ஏற்படுத்தும் (கற்பனையான) எண்ணங்கள் இல்லாமல் போய்விடும். அப்போது சொல்லின் பொருளாகிய வடிவம் மட்டும் சித்தத்தினால் கிரகிக்கப்படுகிறது. இது தான் நிர்விதர்க்க ஸமாபத்தி (வேறு கருத்துக்கள் கலவாத ஸமாதி நிலை எனப்படுகிறது) . இது தான் சிறந்த நேரிடையான ஞானமும் (ப்ரத்யக்ஷம்) கூட.
இப்படிப்பட்ட ஞானம் சொற்களினால் ஏற்படும் ஞானத்திற்கும், ஊகித்துப் பெறப்படும் ஞானத்திற்கும் விதையாகிறது. இதிலிருந்து சொல்லால் ஏற்படும் ஞானமும், ஊகித்தறியும் ஞானமும் ஏற்படுகிறது.2
இப்படிப்பட்ட நிர்விதர்க்க நிலை ஆகமம், அனுமானம் இவை இருக்கும் வரையில் ஏற்படாது. ஆகையால் யோகியின் நிர்விதர்க்க ஸமாதி நிலையில் வேறு பிரமாணங்களின் (ஆகம-அனுமான-ஞானங்களின்) கலப்படம் இருப்பதில்லை.3

1 அனுமானம் ஆகமம் ஆகியவை பற்றி 7வது ஸூத்ரத்தில் விளக்கப்பட்டுள்ளது. அனுமானம், ஆகமம் ஆகியவை ஏற்பட சொற்கள் தான் காரணம். தனக்குத்தானே ஒரு ஊகம் (ஸ்வார்த்தானுமானம்) செய்து கொள்ள சொற்பிரயோகம் தேவைப்படாது எனினும் பிறருக்கு தமது ஊகத்தைத் தெரிவிக்க சொற்கள் தேவைப்படும். (பரார்த்தானுமானம்)

2 யோகிகளுக்கு தத்துவங்களைப் பற்றி இது போன்ற நேரிடையான அறிவு/அனுபவம் ஏற்படுகிறது. அவர்களது இந்த அனுபவத்தின் அடிப்படையில் தான் அவர்கள் சொற்களைப் பயன்படுத்தி பிறருக்கு தத்துவங்களை போதிக்கிறார்கள். சொற்களைக்கொண்டு போதிக்கும் போது ஆகம ஞானம் ஏற்படுகிறது. இப்படிபட்ட தத்துவஞானத்தை நேரிடையாக அறிந்தவர் தான் இவ்வாறு போதிக்க முடியும் என்று தத்துவங்களை ஊகித்தறிகிறார்கள் பிறர். ஆகையால் தான் இந்த நேரிடையான ஞானம் ஆகமத்திற்கும் அனுமானத்திற்கும் அடிப்படையாகிறது எனக் கூறப்பட்டது.

3 தாமரை எனும் சொல் தாமரை எனும் பொருளைக் குறிக்கிறது. அப்படிக் குறிக்கப்படும் பொருள் தாமரை எனும் அறிவை ஏற்படுத்துகிறது. தாமரை தொடர்பான அனுமான ஆகம ஞானமும் கூட தாமரை எனும் சொல் ஏற்படுத்தும் குறிப்பினால் தான் ஏற்படுகிறது. ஆனால் சொல் ஏற்படுத்தும் குறிப்பினால் உருவாகியிருந்த (அனுமானம் ஆகமம் ஆகியவற்றால் ஏற்பட்ட) நினைவுகள் (தியானப் பயிற்சியின் மூலம்) களையப்படுமாயின். தாமரை என்று தியானிக்கப்படும் பொருள் மட்டும் சித்ததில் வேறு எண்ணங்கள் கலவாமல் ஒளிரும். இது தான் நிர்விதர்க்க ஸமாபத்தி எனப்படுகிறது.

இந்த ஸமாபத்தியின் இலக்கணம் இந்த ஸூத்ரத்தினால் உணர்த்தப்படுகிறது -
ஸ்ம்ருதிபரிஶுத்தௌ ஸ்வரூபஶூந்யவோர்தமாத்ரநிர்பாஸா நிர்விதர்கா ॥ 43 ॥
நிர்விதர்க்க நிலையில் நினைவு தூய்மை அடையும்போது (மனது) தனது வடிவினை இழந்து போன்ற நிலையை அடைந்து கிரகிக்கப்படும் பொருளினை மட்டும் பிரதிபலிக்கும்.
(யோகபயிற்சியினால்) சொற்களின் குறிப்பு1 ஏற்படுத்தும் நினைவும் அதனால் உண்டாகும் அனுமானம் ஆகமம் ஆகிய ஞானங்களும் அகன்ற பிறகு அறிவு தியானிக்கப்படும் பொருளின் வடிவினை அடைந்துவிடும். (பல்வேறு) பொருட்களைக் கிரகிக்க தான் ஒரு கருவி எனும் நிலையை இழந்துவிட்டது போல, அறிவு கிரகிக்கப்படும் பொருளாகவே உருமாறிவிடும். இதுதான் நிர்விதர்க்க ஸமாபத்தி எனப்படுவது.
2இது பற்றி (முற்காலத்திய அறிஞர்களால் வருமாறு) விளக்கப்பட்டுள்ளது - அந்த ஸமாதி நிலையில் கிரகிக்கப்படும் பொருள், ஒரே ஒரு அறிவை மட்டுமே உருவாக்கும்.3 அப்பொருள் வௌியுலகில் இருக்கும் பசு, குடம் ஆகிய இவை போல (உயிருள்ளதாகவோ, ஜடமானதாகவோ) இருக்கும்.4 அப்பொருள் அணுக்களின் (பூத-ஸூக்ஷ்மங்களின்) சேர்க்கையினால் தூலமான உருவு கொண்டதாக இருக்கும்.5
இந்த (பூத-ஸூக்ஷ்மங்களின் பிரத்யேகமான அமைப்பினால் உண்டான) 6 வடிவமைப்பானது (பொருளானது) பூத-ஸூக்ஷ்மங்களின் குணாதிசயங்கள் ஒருங்கே அமையப்பெற்றதாக இருக்கும்.7 ஆனாலும் பூத-ஸூக்ஷ்மங்களின் வடிவினை விட வேறாக இல்லாமல் அவற்றின் தன்மைகள் பொருந்தியதாகவே இருக்கும்.8 தனியாகக் குறித்து அறியப்படுவதால் அது வேறு அதன் காரணங்கள் வேறு என்று ஊகித்தறியப்படுகிறது.9
அப்பொருள் அதனைத் தனியாக குறித்தறிய உதவும் காரணங்களால் அறியப்படுகிறது.10 இது போன்ற பொருள் (இந்த ஸமாதி நிலையில்) தோன்றும். அதே பொருளில் வேறு குணாதிசயங்கள் தோன்றும்போது அது மறைந்து போய்விடும்.11 இப்படிப்பட்ட பொருள்தான் அவயவீ (பகுதிகள் கொண்ட தொகுதி) எனப்படுகிறது.
இது ஒன்றாகவும், மிகப் பெரியதாகவும், மிக நுண்ணியதாகவும், தொட்டு உணரக்கூடியதாகவும், செயலில் ஈடுபடவல்லதாகவும், நிலையற்றதாகவும் இருக்கும். இப்படிப்பட்ட பகுதிகளால் ஆன பொருள் உலகில் புழங்கத் தகுதி கொண்டது.
ஆனால் (பூத-ஸூக்ஷ்மங்களின்) பகுதிகளின் சேர்க்கையினால் உண்டாகும் பொருள் பொருளே அல்ல (அவயவீ என்பது உண்மையானது அல்ல) என்று ஒருவர் கூறினால் (இது பௌத்தர்களின் கருத்து), அந்தப் பொருட்களால் ஏற்படும் அறிவும் கூட உண்மையான அறிவாக இருக்காது. ஏனெனில் (பகுதிகளால் ஆன பொருள் உண்மையில் இல்லை எனில் அதனால் ஏற்படும் அறிவு) இல்லாத ஒன்று இருப்பது போன்றதாகிவிடும். அது பொய்யான அறிவாகும். ஆகையால் உலகின் பொருட்கள் அனைத்துமே பொய்யானதாக ஆகிவிடும். ஏனெனில் உலகில் அறியப்படும் பொருட்கள் அனைத்துமே தொகுப்புகளாகத்தான் (அவயவீ) அறியப்படுகின்றன. மேலும் உலகில் அனைத்தும் பொய்யானது தான் என ஆகிவிட்டால் (பௌத்தர்கள் கூறும்) ‘உண்மையான ஞானமும் (ஸம்யக் ஞானம்) ‘ இல்லை என்று தான் ஆகிவிடும். மேலும் (பூதஸூக்ஷ்மங்கள் எனும்) பகுதிகள் கொண்ட தொகுப்பு பொய்யானது என்பதோடு, தொகுப்புக்குக் காரணமான பகுதியும் (பூத-ஸூக்ஷ்மங்களும்) அறிவிற்கு அப்பாற்பட்டது எனும் கருத்து இருந்தால் (இதுவும் பௌத்தர்களின் கொள்கையாகும்), விகல்பங்கள் அற்ற ஸமாதிகளில் (நிர்விதர்க்க, நிர்விசார) இல்லாத பூதஸூக்ஷ்மங்கள் இருப்பதாகக் கூறுவது ஏற்புடையது ஆகாது (அது விகல்பமே ஆகிவிடும்). ஆகையால் பெரியது (சிறியது, செயல்களில் ஈடுபடவல்லது) என்பது போன்ற குணாதிசயங்கள் கொண்ட தொகுப்பானது உள்ளது. இப்படிப்பட்ட பொருள்தான் நிர்விதர்க்க ஸமாபத்தியில் தோன்றுகிறது.

1 வாக்கியங்களற்ற (வாக்யரஹித-த்யானம்) தியானப்பயிற்சி என்பது ஒன்று உள்ளது என பாஸ்வதி உரையாசிரியர் தெரிவிக்கிறார். வாக்கியங்கள் இருந்தால் தான் சொற்கள் இருக்கும். சொற்கள் இருந்தால் அதன் குறிப்பினால் நினைவுகள், ஊகம், போன்றவை தோன்றும். ஆகவே வாக்கியங்களற்ற தியானப் பயிற்சி என்பது நிர்விதர்க்க ஸமாதி நிலைக்கு இட்டுச்செல்லும். மனதாலும் கூட வாக்கியங்களை நினைத்தல் இந்த ஸமாதி நிலையில் இருக்காது. தியானிக்கப்படும் பொருள் தியானிக்கப்படும் பொருளாகவே இந்த ஸமாதியில் புத்தியினால் கிரகிக்கப்பட வேண்டும்.

2 நிர்விசார நிலையில் அறிவில் விளங்கும் பொருள் எவ்வாறாக இருக்கும் எனக்கூறினார். இதற்கு அடுத்த படியாக இந்த பகுதியில் யோக-தத்துவப்படி உலகின் பொருட்கள் எவ்வாறு இருக்கும் எனும் கருத்து கூறப்படுகிறது. இதன் மூலம் பௌத்தர்கள் உலகினைப் பற்றியும் உலகின் பொருட்களையும் பற்றி கொண்டுள்ள கருத்து நிராகரிக்கப்படுகிறது. பௌத்தர்களின் கருத்துப்படி உலகம் என்பதே ஒரு கற்பனை ஆகும். உலகம் சிந்தையில் மட்டுமே உள்ளது. அது உண்மையில் இல்லை என்பது அவர்களின் கருத்து.

3 தியானிக்கப்படுவது ஒரு பசு என்று எடுத்துக்கொண்டால், இது ஒரு பசு என்று ஒரே ஒரு அறிவு மட்டும் தோன்றும். பசு தொடர்பான வேறு எண்ணங்கள் எதுவுமே இருக்காது.

4 தியானிக்கப்படுவது ஒரு எண்ணம் அல்லது ஒரு கருத்தாகவோ இருக்காது. அது ஒரு பொருளாகத்தான் இருக்கும்.

5 அடுத்துவரும் பகுதியில் தியானிக்கப்படும் பொருள் பகுதிகளால்/அவயவங்களால் ஆனது என நிரூபிக்க உள்ளார் வ்யாஸர். அதற்காக இந்த வாக்கியத்தினாலேயே பூத-ஸூக்ஷ்மங்கள் எனும் பகுதிகளால் ஆனது தியானிக்கப்படும் பொருள் என குறிப்பிடுகிறார்.

6 உலகில் பல்வேறு பொருட்கள் உருவாவதற்கு பூத-ஸூக்ஷ்மங்களின் வடிவமைப்பில் மாற்றம் தான் காரணம். ஒரு குடம் ஏற்பட பூத-ஸூக்ஷ்மங்களின் வடிவமைப்பு மாறுபடும். ஒரு மரம் ஏற்பட அதன் வடிவமைப்பு மாறுபடும்.

7 பூத-ஸூக்ஷ்மங்கள் ஒன்றொன்றிற்கும் ஒவ்வொரு தன்மை இருக்கும். அதாவது வாசனை-தன்மாத்ரத்திற்கு வாசனை எனும் தன்மை இருக்கும். சுவை-தன்மாத்ரத்திற்கு சுவை எனும் தன்மை இருக்கும். ஆனால் மாம்பழம் எனும் (தன்மாத்ரங்களால் ஆன) பொருளில் வாசனை, சுவை ஆகிய இரண்டுமே இருப்பதால் அது வாசனை தன்மாத்ரத்திலிருந்தும், சுவை தன்மாத்ரதிலிருந்தும் வேறாக இருக்கும். அவயவங்களைக் கொண்ட ஒருபொருள் (அவயவீ) தனது அவயவங்களைக் காட்டிலும் தனிச்சிறப்பான தன்மைகள் கொண்டதாக இருக்கும். இல்லை என்றால் அவயவத்திற்கும் அவயவிக்கும் வேறுபாடு எதுவும் இருக்காது. அவயவீ என ஒன்று உள்ளது எனக் கூறுவது தேவைப்படாது. ஆனால் உலகில் காணக்கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் அவயவீயாகத்தான் புலப்படுகின்றன. அவைகளும் தத்தம் அவயவங்களை விட தனிச்சிறப்பான குணங்கள் கொண்டதாகத்தான் அறியப்படுகின்றன.

8 அவயவீ தனது அவயவங்களிலிருந்து முழுமையாக வேறுபட்டது எனில் எந்த அவயவங்களிலிருந்x எந்த அவயவீ தோன்றியது என கூற இயலாமல் போய்விடும். ஆகையால் தான் அவயவங்களின் தன்மை பொருந்தியிருக்கும் எனக்கூறப்படுகிறது.

9 இது ஒரு பசு எனத் தனியாக அறியப்படுகிறது. அந்தப் ’பசு’ எனும் அறிவின் அடிப்படையில் தான் அது தொடர்பான செயல்களும் சொற்களும் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட ‘இது ஒரு பசு’ எனும் அறிவினாலும் அது தொடர்பான செயல்களாலும் இது (பசு) தனது காரணங்களாகிய தன்மாத்ரங்களிலிருந்து வேறானது என்பது ஊகித்து அறியப்படுகிறது. காணப்படும் பொருள் பசுவாகவே காணப்படுவதால், தன்மாத்ரங்களாக காணப்படாததால், காணப்படும் இந்தப் பசு காணப்படாத அதன் காரணங்களாகிய தன்மாத்ரங்களிலிருந்து வேறுபட்டது என ஊகித்தறியமுடிகிறது. அவயவங்களிலிருந்து அவயவீ எவ்வாறு வேறாக உணரப்படுQ றது என்பது இந்த வாக்கியத்தால் தௌிவு படுத்தப்பட்டுள்ளது.

10 அவயவீ தனது காரணமாகிய அவயவங்களால் தான் அறியப்படுகிறது. நீ ‘உன்னுடைய தந்தையின் மகன் தான்‘ என்று ஒரு வாக்கியம் உள்ளது. ஆம் அனைவரும் அவரவர் தந்தையின் செல்வங்கள் தான். ஆகையால் இந்த வாக்கியம் எதனைக் குறிப்பிடுகிறது என்றால்? ஆம் நீ உன் தந்தைக்கு மகன் தான் எனக்கூறும் போது தந்தையின் குணாதிசயங்கள் உன்னிலும் அறியப்படுகின்றன என்பது பொருள். அவரைப் போலவே பேசுகிறாய் அல்லது செயல்படுகிறாய் என்பது வாக்கியத்தின் பொருள். அதே போலத்தான் இங்கேயும். அவயவீ தனது காரணங்களிலிருந்து வேறாகத் தெரிந்தாலும் அது தனது காரணங்களாகிய அவயவங்களைச் சார்ந்தே இருக்கும் என்பது இதன் அபிப்ராயமாகும்.

11 வெண்ணெய் உள்ளது. அதே வெண்ணெயினைக் காய்ச்சும் போது வேறு குணாதிசயங்கள் தோன்றுகின்றன ஆகையால் அது மறைந்து போய்விடுகிறது (இல்லாமல் போவதில்லை) . நெய்யாக மாறிவிடுகிறது.

ஏதயவை ஸவிசாரா நிர்விசாரா ச ஸூக்ஷ்மவிஷயா வ்யாக்யாதா ॥ 44 ॥
மேற்கூறியபடியே தான் ஸவிசார நிலையும், நுண்ணிய பொருட்களைப் பற்றிய நிர்விசார நிலையும் விளக்கப்பட்டதாக கருதவேண்டும்.
உலகின் பொருட்கள் உருவாவதற்குக் காரணமான பூத-ஸூக்ஷ்மங்களில் மனதினை ஒருநிலைப்படுத்தும்போது அவை அவைகளுடைய இடம்1, காலம்2, காரணம்3 ஆகியவைகளுடன் புலப்படுமாயின் ஸவிசார ஸமாபத்தி எனப்படும்.
இந்த ஸமாதி நிலையிலும் ஒரே ஒரு அறிவுதான் ஏற்படும். மேலும் ஸமாதி நிலையில் கிரகிக்கப்படும் பொருள் நிகழ்கால குணங்களுடன் மட்டுமே புலப்படும்.4
மேலே கூறியபடி அல்லாமல் காலம், இடம், காரணம் ஆகிய எதனாலும் குறிக்கப்படாத வண்ணம், ஆனால் அனைத்திலும் இரண்டறக் கலந்துள்ள தன்மையுடன் பூத-ஸூக்ஷ்மங்கள் பற்றி மனது ஒருநிலைப்படுமாயின் அது நிர்விசார-ஸமாபத்தி (ஸமாதி) எனப்படும்.5 அந்த நிர்விசார-ஸமாதி நிலையில் அறிவு உணர்வானது (ப்ரஜ்ஞா) தனது தன்மையை இழந்து, கிரகிக்கப்படும் பொருளாகிய பூதஸூக்ஷ்மங்களின் வடிவினை அடைந்திருக்கும்.
புலன்களால் கிரகிக்கப்படக்கூடிய பொருட்களைப் பற்றியது ஸவிதர்க்க, நிர்விதர்க்க ஸமாதிகள். புலன்களுக்கு அப்பாற்பட்ட பொருட்களைப் பற்றியது ஸவிசார, நிர்விசார ஸமாதிகள். இவ்வாறு நிர்விசார ஸமாதியினை விளக்கும் வகையில் இந்த இரு ஸமாதிகளிலும் (நிர்விதர்க்க, நிர்விசார) ’விகல்பம்’ என்பது இருக்காது என்பது விளக்கப்பட்டு விட்டது.

1 மேலே, கீழே, பக்கவாட்டில் போன்ற தன்மைகள் இங்கு குறிக்கப்படுகின்றன.

2 நிகழ்காலம்.

3 வடிவம்-எனும் தன்மாத்ரம் பற்றிய ஞானம் (ஸவிசார ஸமாதியில்) ஏற்படக் காரணம் பின் வருமாறு விளக்கப்படுகிறது - நெருப்பினை (தேஜஸ்) பற்றிய ஸமாதி (மன ஒருமைப்படு) ஏற்படுகிறது. பின்னர் அதன் காரணம் யாது என்பது பற்றி தியானிக்க விரும்பும் யோகி வடிவ (ரூப) தன்மாத்ரத்தை பற்றி தியானிக்கத் துவங்குகிறார். இது ஸவிசார- ஸமாபத்தி. இந்த நெருப்பினை (தேஜஸ்) பற்றிய ஸமாதி (மன ஒருமைப்படு) தான் அடுத்த நிலையான ஸவிசார நிலைக்கு இட்டுச்செல்கிறது. ஆகவே அது தான் காரணமாகும்.

4 முன்பு அவை இருந்த தன்மை பற்றியோ, அல்லது எதிர்காலத்தில் அவை எப்படி இருக்கலாம் என்பது பற்றியோ எண்ணங்கள் தோன்றாது.

5 இது போன்ற உயரிய நிலைகளுக்கான பயிற்சிகள் தேர்ந்த குருவின் வழிகட்டுதலில் செய்யப்பட வேண்டும். அப்போது இவை பற்றிய தௌ்ளிய ஞானம் ஏற்படும்.

ஸூக்ஷ்மவிஷயத்வம் சாலிங்கபர்யவஸாநம் ॥ 45 ॥
நுண்ணிய1 பொருட்கள் அலிங்கத்தில் முற்றுப் பெறுகின்றன.
பூமியின் அணுவிற்கு வாசனையின் தன்மாத்ரம் (நுண்ணிய) மூலப் பொருளாகும். நீரின் அணுவிற்கோ சுவையின் தன்மாத்ரம் (நுண்ணிய) மூலப் பொருளாகும். நெருப்பிற்கு வடிவத்தின் தன்மாத்ரம் (நுண்ணிய) மூலப் பொருளாகும். காற்றிற்கு தொடு உணர்வின் தன்மாத்ரம் (நுண்ணிய) மூலப் பொருளாகும். ஆகாயத்திற்கு ஒலியின் தன்மாத்ரம் (நுண்ணிய) மூலப் பொருளாகும். அஹங்காரம் இவையனைத்திற்கும் (நுண்ணிய) மூலப் பொருளாகும். லிங்கமெனப்படும் புத்தி அகங்காரத்திற்கு (நுண்ணிய) மூலப் பொருளாகும். இந்த லிங்கத்திற்கும் (நுண்ணிய) மூலப் பொருள் அலிங்கம் (ப்ரக்ருதி) ஆகும்.
அலிங்கத்தை விட நுண்ணியது ஏதுமில்லை. இல்லை, அதை விட நுண்ணிய புருஷன் உள்ளான் அல்லவா என்றால்? உண்மை. ஆனால் லிங்கத்தை விட எவ்வாறு அலிங்கம் நுண்ணியதோ இங்கு அது போல அல்ல புருஷனின் நுண்ணிய தன்மை. லிங்கத்திற்கு நேரிடையான காரணமாக அல்லாமல் புருஷன் கருவி போன்ற காரணமாக இருக்கிறான்.2 ஆகையால் பிரதானத்தின் (அலிங்கத்தின்) நுண்ணிய தன்மை விஞ்ச இயலாதது.

1 நுண்ணிய பொருட்களைப் பற்றி மனதினை ஓருமுகப்படுத்துதல் என்பது கடந்த ஸூத்ரத்தில் கூறப்பட்டது. நுண்ணிய பொருட்கள் என்பது பூதசூக்ஷ்மங்கள் மட்டும் தானா அல்லது அவைகளை விட நுண்ணிய பொருட்கள் உள்ளனவா எனும் கேள்விக்கு பதிலாக அமைகிறது இந்த ஸூத்ரம். அலிங்கம் எனப்படும் ப்ரதானம் வரையில் நுண்ணிய பொருட்கள் உள்ளன என்பது இந்த ஸூத்திரத்தின் கருத்தாகும்.

2 பானை உருவாக மண் எப்படிக் காரணமாகிறதோ அது போல லிங்கத்திற்கு அலிங்கம் காரணமாகிறது. ஆனால் குடம் உருவாவதற்கு ’குடம் உருவாகும் குயவரின் சக்கரத்தை இயக்க பயன்படும் கழி எவ்வாறு காரணமோ அந்தக் கருவி போல புருஷன் லிங்கத்திற்குக் காரணம் என்பது பொருள். அலிங்கமாகிய ப்ரக்ருதி தான் பௌதிக உலகின் மூல காரணமாகும். புருஷன் பௌதிக உலகைச் சேர்ந்தவன் அல்ல. அவன் உணர்வுமயமானவன் (சைதன்யம்) . ஆகையால் அவனுக்கும் ப்ரக்ருதிக்கும் காரணம்- விளைவு எனும் தொடர்பு ஏற்பட வாய்ப்பில்லை.

தா ஏவ ஸபீஜ: ஸமாதி: ॥ 46 ॥
இவை தான் ஸபீஜ-ஸமாதி ஆகும்
அந்த நான்கு ஸமாதிகளும் வௌியுலகப் பொருட்களை விதையாகக் (அடிப்படையாக) கொண்டபடியால், ஸமாதியும்கூட விதைகொண்ட ஸமாதி எனப்படுகிறது. அங்கு தூலமான பொருட்களினால் நிகழும் ஸமாதிகள் ஸவிதர்க்கமும், நிர்விதர்க்கமும் ஆகும். நுண்ணிய பொருட்களினால் நிகழும் ஸமாதிகள் ஸவிசாரமும், நிர்விசாரமும் ஆகும். ஆக, இவ்விதமாக நான்கு விதமான ஸமாதிகள் விளக்கப்பட்டன.
நிர்விசாரவஶைாரத்யே(அ)த்யாத்மப்ரஸாத: ॥ 47 ॥
ஸமாதி நிலையில் சிறந்த தேர்ச்சி ஏற்படுமாயின் தன்னொளி பிறக்கும்
மாசுகள் எனும் போர்வை அகற்றப்பட்ட ஒளிமயமான புத்தியானது ரஜோகுணம், தமோகுணம் ஆகியவைகளினால் தோற்கடிக்கப்படாமல், தூய்மையாக நிலையான எண்ணப்பிரவாகமும் கொண்டிருப்பதுதான் வைஶாரத்யம் எனப்படுவது. எண்ணங்களற்ற யோகி நிர்விசார ஸமாதியில் இந்த வைஶாரத்ய நிலையை அடையும்போது உள்ளது உள்ளபடி ஒரே நேரத்தில் (யோகியின் தொடர்புக்கு வரும்) அனைத்தும் புத்தியில் ஒளிரும்.
இதுபற்றி வருமாறு கூறப்பட்டுள்ளது- ‘‘அறிவுத் தௌிவு எனும் மாளிகையின் மீது ஏறிய துன்பங்களற்ற அறிஞர் -- மலை மீது ஏறியவர் பூமியில் உள்ளவர்கள் அனைவரையும் பார்ப்பது போல- துயரப்படுபவர்கள் அனைவரையும் பார்க்கிறார்.’’
ருதம்பரா தத்ர ப்ரஜ்ஞா ॥ 48 ॥
அந்நிலையில் ஏற்படும் அறிவுத் தௌிவானது ரிதம்பரா எனப்படும்.
அவ்வாறு நிலை பெற்ற சித்தத்தை உடைய யோகியானவருக்கு ‘ரிதம்பரா’ எனும் பெயருடைய அறிவுத்தௌிவு உண்டாகிறது. பெயருக்கு ஏற்றாற் போல அந்த அறிவுத்தௌிவு உண்மையின் உறைவிடமாக இருக்கிறது. தவறான அறிவின் சுவடே அப்போது இருப்பதில்லை.
இவ்விஷயம் பற்றி பின்வருமாறு கூறப்பட்டுள்ளது -
ஆகமம், அனுமானம், தியான பயிற்சியின் உயரிய அனுபவம் ஆகிய மூன்றினாலும் அறிவைத் தௌிவுபடுத்திக் கொள்கிறவர் சிறந்த யோகத்தை அடைகிறார்.
இந்த அறிவுத்தௌிவு -
ஶ்ருதாநுமாநப்ரஜ்ஞாப்யாமந்யவிஷயா விஶஷோர்தத்வாத் ॥ 49 ॥
ஆகமம், அனுமானம் ஆகியவற்றால் ஏற்படும் அறிவிலிருந்து வேறுபட்டது (இது). இதன் பொருள் பிரத்யேகமானது.
இவ்வறிவு ஆகமத்தினாலும் அனுமானத்தினாலும் ஏற்படும் அறிவை விட வேறுபட்டது. ஆகமத்தினால் உண்டாகும் அறிவு தனிச்சிறப்பான விஷயங்களை அறிவிக்கும் திறனற்றது. அது எவ்வாறு?
சொற்களுக்குச் தனிச் சிறப்பான பொருளினை குறிக்கும் திறன் இல்லை என்பதனால்.1 அனுமானத்தினாலும் கூட பொதுவான அறிவுதான் உண்டாகிறது. ஆகையால் ஆகமத்தினாலும் அனுமானத்தினாலும் ஏற்படும் அறிவு தனிச்சிறப்பான விஷயங்களை அறிவிப்பதில்லை.
இவ்விரு அறியும் முறைகளினால் நுண்ணிய, தடைக்கப்பாலுள்ள, தொலைவிலுள்ள பொருட்களை (நேரிடையாக) கிரகிக்க முடியாது. ஸமாதி நிலையில் ஏற்படும் அறிவுத் தௌிவினால் மட்டுமே உலகப் பொருட்களிலும், புருஷனிலும் உள்ள நுண்ணிய தனிச்சிறப்பான விஷயங்கள் கிரகிக்கப்படும். ஆகையால் ஆகமத்தினாலும் அனுமானத்தினாலும் கிரகிக்கப்படும் பொருட்களை விட வேறுபட்ட அறிவுப்பொருளைக் கொண்டது அது (ரிதம்பரா ப்ரஜ்ஞா). மேலும் அது அந்த அறிவில் தோன்றும் பொருட்களின் குறிப்பிட்ட தனிச்சிறப்பான குணாதிசயங்களை அறிவிக்க வல்லது.

1 நதிக்கரையில் ஐந்து பழங்கள் உள்ளன என நம்பிக்கைக்கு உரியவர் ஒருவர் கூறினால். பொதுவாக ஐந்து பழங்கள் உள்ளன என்று மட்டுமே தெரியவரும். அப்பழங்களின் வடிவம் போன்ற தனிச்சிறப்பான விஷயங்கள் நேரில் பார்த்தாலே அன்றி அறிய முடியாதன. ஊகிக்கப்படும் பொருட்களிலும் கூட இவ்வாறு தான்.

ஸமாதியினால் கைகூடும் அறிவுத்தௌிவு ஏற்பட்டால் யோகியானவருக்குப் புதிய புதிய ஸம்ஸ்காரங்கள் (பதிவுகள்) அமையும்-
தஜ்ஜ: ஸம்ஸ்காரோ(அ)ந்யஸம்ஸ்காரப்ரதிபந்தீ ॥ 50 ॥
அதனால் (அறிவுத்தௌிவினால்) உண்டாகும் பதிவுகள் (ஸம்ஸ்காரங்கள்) மற்ற பதிவுகளைத் தடுத்துவிடுகின்றன.
ஸமாதியினால் ஏற்படும் அறிவுத்தௌிவின் ஸம்ஸ்காரங்கள் மனதினை வௌிப்புறம் நோக்கி இட்டுச் செல்லும் ஸம்ஸ்காரங்களை அழித்துவிடும். அப்படி மனதினை வௌிப்புறம் நோக்கி இட்டுச் செல்லும் ஸம்ஸ்காரங்கள் இல்லாமல் போவதனால் அவற்றால் எழும் எண்ணங்களும் இருக்காது. எண்ணங்கள் இல்லா நிலையில் ஸமாதி ஏற்பட்டுவிடும். ஸமாதியினால் அறிவுத்தௌிவு உண்டாகும். அறிவுத் தௌிவினால் ஸம்ஸ்காரங்கள் உண்டாகும். இவ்வாறு புதிது புதிதாக அதிக அளவில் ஸம்ஸ்காரங்கள் ஏற்படும்.
அறிவுத்தௌிவினால் ஏற்படும் ஸம்ஸ்காரங்கள் மனதினை ஏன் பணிகளில் இயக்குவதில்லை? ஏனெனில், இந்தப் பதிவுகளினால் துன்பங்கள் குறைந்து அழிந்து விடுகின்றன. இதனால் மனது தனது செயல்பாடுகளிலிருந்து விடுவிக்கப்படுகின்றது. (ஸமாதியினால் உண்டாகும்) அறிவுத் தௌிவு ஏற்படும் வரையில் தான் சித்தம் தனது செயல்பாடுகளில் ஈடுபடும்.
அதன் பின் இதற்கு (சித்தத்திற்கு) என்ன நேரும்?
தஸ்யாபி நிரோதே ஸர்வநிரோதாந்நிர்பீஜ: ஸமாதி: ॥ 51 ॥
அந்த அறிவுத்தௌிவும் (மிகத்தீவிரமான வைராக்யத்தால்) ஒடுக்கப்பட்டுவிட்டால் (நிரோதம் செய்துவிட்டால்) , அனைத்தும் ஒடுக்கப்பட்டதாகிவிடும் என்றபடியால் விதையற்ற1 ஸமாதிநிலை ஏற்படும்.
அது (நிர்பீஜஸமாதி நிலை) ஸமாதியினால் ஏற்படும் அறிவுத் தௌிவினை (ரிதம்பரா ப்ரஜ்ஞாவினை) மட்டும் எதிர்க்காது, அந்த அறிவுத் தௌிவினால் ஏற்படும் ஸம்ஸ்காரங்களையும் கூட தடுத்துவிடும்.2 இது எதனால்? நிரோதத்தால் (எண்ணங்களைத் தடுப்பதால்) ஏற்படும் ஸம்ஸ்காரங்கள் ஸமாதியினால் ஏற்படும் ஸம்ஸ்காரங்களை அழிக்கின்றன. (நிரோதத்திற்கும் ஸம்ஸ்காரங்கள் உண்டு ஏனெனில்) எண்ணங்கள் தடுக்கப்பட்ட கால அளவு மாறுபடுவதால், அவற்றைத் தூண்டும் ஸம்ஸ்காரங்கள் இருத்தல் அவசியமாகிறது என ஊகித்தறியலாம்.3
வ்யுத்தான நிலையினைத் (மனது வௌிப்புறம் நோக்கிச்செல்லும் இயல்பு) தடுத்ததனால் உண்டான ஸம்ஸ்காரங்களுடனும், கைவல்ய நிலைக்கு இட்டுச்செல்லும் (நிரோத) ஸம்ஸ்காரங்களுடனும் சித்தம் தனது நிலையான காரணத்தில் (ப்ரக்ருதியில்) ஒன்றிவிடுகிறது. ஆகையால் அந்தப் (நிரோத) பதிவுகள் சித்தம் இயங்குவதை தடுப்பவையே அன்றி சித்தம் செயல்பட காரணமாவதில்லை. மனதின் செயல்பாடுகளுக்கான அதிகாரம் முடிவடைந்து விட்டபடியால் கைவல்ய நிலைக்கு இட்டுச் செல்லும் ஸம்ஸ்காரங்களுடன் சித்தம் ஒடுங்கிவிடுகிறது.
சித்தம் அகன்ற பிறகு தன் இயல்பில் நிலைபெற்ற புருஷன், தூய்மையானவன், முக்தி பெற்றவன் என்று கூறப்படுகிறது.

1 விதை என்பது (செடியாக) விளையக்கூடியது. ஆனால் இந்த ஸமாதி நிலையிலிருந்து வேறு எந்தவிதமான மாறுதலும் விளையாது என்பதனால் இந்த ஸமாதி நிலை விதையற்ற ஸமாதி நிலை எனப்படுகிறது.

2 ரிதம்பரா ப்ரஜ்ஞாவும், அது உருவாக்கிய ஸம்ஸ்காரங்களும் அவை ஏற்படுத்தும் விளைவுகளும் விளக்கப்பட்டன. இவை இரண்டும் (ரிதம்பரா-ப்ரஜ்ஞா, அதனால் உருவான ஸம்ஸ்காரங்கள்) இருக்கும் வரை யோகத்தின் மிக உன்னத நிலையான நிர்பீஜ ஸமாதியை எய்துவது சாத்தியமாகாது. இவ்விரண்டின் நிரோதம் ஏற்பட்டால் தான் அந்நிலை எய்தப்படும். அது இந்த ஸூத்ரத்தில் விளக்கப்படுகிறது.

3 பற்றற்ற தன்மையின் (வைராக்யம் ) பயிற்சியினால், அதன் தீவிரத் தன்மைக்கு ஏற்ப ஸம்ஸ்காரங்கள் ஏற்படுகின்றன (இவை தான் நிரோத-ஸம்ஸ்காரங்கள் எனப்படுகின்றன). இந்த ஸம்ஸ்காரங்கள் தான் ரிதம்பரா ப்ரஜ்ஞாவினால் ஏற்படும் ஸம்ஸ்காரங்களைத் தடுக்கின்றன. வைராக்யம் ரிதம்பரா-ப்ரஜ்ஞாவை மட்டும் தான் தடுக்கும். ரிதம்பரா-ப்ரஜ்ஞாவினால் உருவான ஸம்ஸ்காரங்களை வைராக்யத்தினால் உருவான ஸம்ஸ்காரங்களால் தான் தடுக்கும் இயலும். (ஸம்ஸ்காரங்களால் தான் ஸம்ஸ்காரங்கள் தடுக்கப் படும் என்பது 1.50 ஸூத்ரத்தில் கூறப்பட்டுள்ளது). வைராக்யத்தினால் உண்டான ஸம்ஸ்காரங்களை நேரடியாக அறியமுடியாது. வைராக்ய உணர்வு மேலோங்கி இருக்கும் போது வ்ருத்திகளின் நிரோத நிலை இருப்பதால், நிரோதம் சித்தத்தில் பதிவினை ஏற்படுத்துவது நேரடியாக அறிய முடியாமல் போகிறது. அதனால் நிரோத ஸம்ஸ்காரங்களை ஊகித்தறிய வேண்டியுள்ளது. இதற்கு நிரோத நிலையின் கால அளவில் உள்ள வேறுபாடு உதவுகிறது. நிரோத நிலை சிறிது நேரமே இருந்தால் அதற்குரிய (வைராக்ய ) ஸம்ஸ்காரங்களிலிருந்து அது தோன்றி உள்ளது எனவும் நிரோத நிலையின் கால அளவு அதிகமானால் அதற்கு தகுந்த ஸம்ஸ்காரத்தினால் அது தோன்றியுள்ளது என்று தான் ஊகிக்க வேண்டியுள்ளது. இவ்விதமான ஸம்ஸ்காரங்கள் இல்லை என்றால், நிரோத நிலையில் உள்ள காலஅளவின் வேறுபாட்டை விளக்க இயலாது.